புத்தளம் மாவட்ட கிரிக்கெட் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த பிரிவு மூன்றில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கான 50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரில் அம் மாவட்டத்தின் தலை சிறந்த பல கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
அந்த வகையில் சிலாபம் நகர சபை மைதானத்தில் நடைபெற்ற தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு பலமும் அனுபவமும் மிக்க சிலாபம் கிரிக்கெட் கழகமும், தளுவை கிரிக்கெட் கழகமும் தகுதி பெற்றிருந்தன.
இவ்விறுதிப் போட்டியில் பலம் மிக்க சிலாபம் கிரிக்கெட் கழகம் சமன் திதிகல்லவின் சிறப்பான சகலதுறை ஆட்டத்தின் உதவியால் 137 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்று புத்தளம் மாவட்டத்தின் சம்பியன் மகுடத்தினைத் தனதாக்கிக்கொண்டது.
இப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தளுவை கிரிக்கெட் கழகத்தின் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார்.
அதன்படி தளுவை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக தரிந்து மிரங்க மற்றும் லக்மால் ஜோடி களம் கண்டது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய லக்மால் சிலாபம் அணியின் ஆரம்பப் பந்து வீச்சாளர்களின் பந்துகளை பௌண்டரிகளுக்கு விரட்ட ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.
தளுவை அணியின் ஓட்ட எண்ணிக்கை 39 ஆக இருக்கையில் அதிரடியில் மிரட்டிய லக்மால் 16 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் அடங்களாக 20 ஓட்டங்களை பெற்ற வேளையில் பிரசாத்தின் பந்தில் நேலியனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஒரு பக்கம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தரிந்து நிதானமாய் நிலைத்து நிற்க, மறுமுனையில் பெணான்டோ (2), ஹிம்ஹான (1), ஹர்சன (2) என பலரும் வந்த வேகத்திலே அரங்கு திரும்பினர். இதனால், 66 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து பரிதவித்தது தளுவை அணி.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தரிந்து அடித்து ஆட ஆரம்பிக்க, அவரோடு 5வது விக்கெட் இணைப்பாட்டத்தில் குமார இணைந்தார். தரிந்து தனக்கு கிடைத்த பந்துகளை சிக்ஸர் மற்றும் பௌண்டரி என விரட்ட மறுமுனையில் குமார ஓவர்களை மேடின்களாக மாற்றினார்.
தரிந்து அரைச் சதம் கடந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க, குமாரவும் அதிரடிகாட்ட ஆரம்பித்தார். 5வது விக்கெட் இணைப்பாட்டமாக 61 ஓட்டங்கள் பகிரப்பட அணியின் ஓட்ட எண்ணிக்கை 127 ஆக இருக்கையில் 42 பந்துகளை எதிர்கொண்டு 21 ஓட்டங்களை பெற்றிருந்த குமார நேலியனின் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களத்திலிருந்த தரிந்துவோடு பிரசன்ன இணைந்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கை 163 ஆக இருக்கையில், அதிரடியில் சிலாபம் அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டிக்கொண்டிருந்த தரிந்து 77 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்களாக 83 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் நேலியனின் பந்து வீச்சில் சமனிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
தளுவை அணியின் பின்வரிசை வீரர்கள் நேலியனின் சுழலில் சிக்கிக்கொள்ள (சுதீர -21, பிரசன்ன – 11, அன்டன் – 1, திவங்க – 1) 41வது ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த தளுவை அணியினர் 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட சுழற்பந்து வீச்சாளர் நேலியன் 9 ஓவர்களில் 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், அமில 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், பிரசாத் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், சமன் 10 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர், 176 என்ற இலகுவான இலக்கு நோக்கி சிலாபம் அணியின் பன்டார மற்றும் அமில பிரசாந்த ஜோடி களமிறங்கியது. இந்த ஜோடி தளுவை அணியின் முதல் மூன்று ஓவர்களையும் அடித்து ஆடி 26 ஓட்டங்களைப் பெற்றது.
சிலாபம் அணிக்கு 4வது ஓவரில் அதிர்ச்சி கொடுத்தார் திவங்க. அடித்து ஆடிக்கொண்டிருந்த பன்டார 9 ஓட்டங்களைப் பெற்றிருக்கையில் திவங்கவின் பந்தில் வீழ்ந்தார். அடுத்து அமிலவோடு அனுபவம் மிக்க கிலீட்டஸ்லோ இணைந்தார்.
அணி 30 ஓட்டங்களை பெற்றிருக்கையில் மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அமில 18 ஓட்டங்களைப் பெற்றிருக்கையில் சமிந்துவின் பந்துக்கு இறையாக தடுமாற்றம் கண்டது சிலாபம் அணி.
அனுபவம் மிக்க கிலீட்டஸ்லோடு இணைந்தார் அணித்தலைவர் ஆசிரி பெர்ணான்டோ. நிலைத்து நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஆசிரி தரிந்துவின் பந்தில் அருமையான ஒரு ஆறு ஓட்டத்தை அடித்த அடுத்த பந்தில் ஸ்டம் செய்யப்பட்டு ஆட்டமிழக்க 49 ஓட்டங்களுக்கு மிக முக்கிய 3 விக்கெட்டுக்களும் வீழ்ந்தது.
கிலீட்டஸ்லோவோடு 4வது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக 19 வயது நிரம்பிய இளம் வீரர் அக்மல் இணைந்து அசத்தலான இணைப்பாட்டம் வழங்க 100 ஓட்டத்தை எட்டிப்பிடித்தது சிலாபம் அணி.
நான்காவது விக்கெட் இணைப்பாட்டத்திற்காக 57 ஓட்டங்களை பெற்ற நிலையில் மீண்டும் தரிந்து பந்து வீச்சில் மிரட்ட, அனுபவம் மிக்க கிலீட்டஸ்லோ 37 ஓட்டங்களைப் பெற்றிருக்கையில் ஸ்டம் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இதன்போது சிலாபம் அணி 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஆடுகளத்தில் இருந்த இளம் வீரர் அக்மலோடு 5வது விக்கெட்டிற்காக அனுபவம் மிக்க சமன் திதிகல்லே இணைந்தார். அக்மல் ஒவ்வொரு ஓட்டங்களாக ஓடிப் பெற்றுக்கொள்ள மறுபுறம் சமன் திதிகல்லே பந்தை எல்லைக் கோட்டிற்கு வெளியே விரட்டியடித்தார்.
தளுவை அணியின் தலைவர் பந்து வீச்சாளர்களை மாற்றி மாற்றி பயன்படுத்திய போதிலும் 5வது விக்கெட் இணைப்பாட்டத்தை பிரிக்க முடியாமல் இருந்தது.
தரிந்து வீசிய 23வது ஓவரில் 17 ஓட்டங்களையும், சுதீர வீசிய 27வது ஓவரில் 18 ஓட்டங்களையும் விளாசி அணியின் ஓட்ட வேகத்தை அதிகரித்தார் சமன் திதிகல்லே.
இறுதியில் வெற்றிக்கும் சமன் திதிகல்லேவின் அரைச் சதத்திற்கும் 4 ஓட்டங்கள் தேவைப்பட, அவர் இமாலய ஆறு ஓட்டம் ஒன்றை விலாசி தன் அரைச் சதத்தினையும் அணியின் வெற்றியையும் உறுதி செய்தார்.
பிரிக்கப்படாத 5வது விக்கெட் இணைப்பாட்டமாக 72 ஓட்டங்கள் பகிரப்பட்டன. ஆடுகளத்தில் சமன் திதிகல்லே 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்களாக 32 பந்துகளில் 52 ஓட்டங்களையும், இளம் வீரர் அக்மல் 4 சிக்ஸர்கள் அடங்களாக 39 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தளுவை அணியின் பந்து வீச்சில் தரிந்து 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், திவங்க மற்றும் சமிந்து ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
தளுவை கிரிக்கெட் கழகம்: 175/10 (40.5 ஓவர்கள்) – தரிந்து 83, சுதீர 21, லக்மால் 20, நேலியன் – 24/3, அமில – 33/3, பிரசாத் – 47/2,
சிலாபம் கிரிக்கெட் கழகம்: 178/4 – சமன் திதிகல்லே 52*, க்லீட்டஸ்லோ 37, அக்மல் 30*, தரிந்து 50/2, திவங்க 26 /1, சமிந்து 30 /1
விருதுகள்
ஆட்ட நாயகன் – சமன் திதிகல்லே (சிலாபம் கிரிக்கெட் கழகம்)
சிறந்த பந்து வீச்சாளர் – நேலியன் (சிலாபம் கிரிக்கெட் கழகம்)
சிறந்த துடுப்பாட்ட வீரர் – தரிந்து (தளுவை கிரிக்கெட் கழகம்)