இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் 23 வயதுக்கு உட்பட்ட மாகாண அணிகளுக்கு இடையிலான இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில், இன்று (23) நான்கு போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.
வடமேல் மாகாணம் எதிர் வட மாகாணம்
புளும்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த குழு A இற்கான இந்தப் போட்டியில், முதலில் துடுப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்த வடமேல் மாகாண அணிக்கு வட மாகாண அணியை பிரதிநிதித்துவம் செய்திருந்த லும்பினி கல்லூரி வீரர் சசித் லக்ஷான் தனது அபார பந்து வீச்சினால் நெருக்கடி தந்தார். இதனால், வட மேல் மாகாண அணி 190 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்சை முடித்துக்கொண்டது.
வடமேல் மாகாண அணிக்காக அதிகபட்சமாக லியோ பிரான்சில்கோ 42 ஓட்டங்களை பெற்ற அதேவேளை சசித் லக்ஷான் மொத்தமாக 38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
தொடர்ந்து, தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த வட மாகாணம் 146 ஓட்டங்களுடன் தமது முதல் இன்னிங்சை போட்டியின் முதல் நாளிலேயே நிறைவு செய்து கொண்டது.
வட மாகாண அணியின் துடுப்பாட்டத்தில் பராக்கிரம தென்னக்கோன் 39 ஓட்டங்களைப் பெற்றதோடு, வடமேல் மாகாண அணியிக்காக சிறப்பாக செயற்பட்ட அசித்த பெர்னாந்து 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை சுருட்டியிருந்தார்.
தொடர்ந்து, போட்டியின் முதல் நாளிலேயே இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த வடமேல் மாகாண அணி, முதல் நாள் நிறைவில் விக்கெட் இழப்பு எதுவுமின்றி 13 ஓட்டங்களைக் குவித்திருந்தது
போட்டியின் சுருக்கம்
வடமேல் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 190 (60) – லியோ பிரான்சிஸ்கோ 42, சச்சின் ஜயவர்த்தன 38, சசித் லக்ஷான் 38/6
வட மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 146 (31.3) – பராக்கிரம தென்னக்கோன் 39, அசித்த பெர்னாந்து 6/42
வடமேல் மாகாணம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 13/0 (4)
போட்டியின் இரண்டாவது மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்.
தென் மாகாணம் எதிர் மேல் மாகாணம் (வடக்கு)
மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் தொடங்கியிருந்த குழு B இற்கான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாண வடக்கு அணி முதலில் தென் மாகாணத்தை துடுப்பாடப் பணித்திருந்தது.
இதன்படி போட்டியின் முதல் இன்னிங்சில் களமிறங்கியிருந்த தென் மாகாண அணியினர், மலித் மஹேல (46) மற்றும் ரமேஷ் மெண்டிஸ் (41) ஆகியோரின் ஓட்டப் பங்களிப்புடன், 59 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
மேல் மாகாண வடக்கு அணி சார்பான பந்து வீச்சில், சிறப்பாக செயற்பட்ட நிஷாம் பீரிஸ் 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்சைத் தொடங்கிய மேல் மாகாண வடக்கு அணி, முதல் நாள் ஆட்ட நேர நிறைவின் போது 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 105 ஓட்டங்களைக் குவித்துள்ளது
போட்டியின் சுருக்கம்
தென் மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 169 (59) – மலித் மஹேல 46, ரமேஷ் மெண்டிஸ் 41, நிஷாம் பீரிஸ் 4/38
மேல் மாகாணம் வடக்கு (முதல் இன்னிங்ஸ்) – 105/7 (36) – லக்ஷின ரொட்ரிகோ 26*
போட்டியின் இரண்டாவது மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்.
மத்திய மாகாணம் எதிர் வடமத்திய மாகாணம்
குழு A இற்கான மற்றுமொரு போட்டி, கொழும்பு BRC மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியை வென்ற வடமத்திய மாகாணம் முதலில் மத்திய மாகாண அணியை துடுப்பாடப் பணித்தது.
இதன்படி களமிறங்கிய மத்திய மாகாண அணியில், நிமேஷ குணசிங்க சதம் (113) கடந்ததோடு, வனிந்து ஹஸரங்க (54) மற்றும் திலான் ஜயலத் (52) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர். இதனால், வலுவான நிலையை எட்டிக்கொண்ட மத்திய மாகாண அணி, 59 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 332 ஓட்டங்களைக் குவித்திருந்த போது, தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.
ஓட்டங்களை எதிரணிக்கு வாரிவழங்கிய வடமத்திய மாகாண அணி சார்பிலான பந்து வீச்சில், ஷாலுக சில்வா மற்றும் சந்தீப்ப செவ்மிந்த ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
அடுத்து, தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த வடமத்திய மாகாண அணியினர், தினேத் ஹேவதந்திரியின் 56 ஓட்டங்களின் உதவியுடன் 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
போட்டியின் சுருக்கம்
மத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 332/7d (59) – நிமேஷ குணசிங்க 113, வனிந்து ஹஸரங்க 54, திலான் ஜயலத் 52, தனுக்க தாபரே 38, ஷாலுக்க சில்வா 2/77, சந்தீப்ப செவ்மிந்த 2/52
வடமத்திய மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 158/6 (40) – தினேத் ஹேவதந்திரி 56
போட்டியின் இரண்டாவது மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்.
ஊவா மாகாணம் எதிர் மேல் மாகாணம் தெற்கு
பொலிஸ் மைதானத்தில் ஆரம்பித்த குழு B இற்கான இந்தப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய ஊவா மாகாண அணியினருக்கு, தமது பந்து வீச்சாளர்கள் மூலம் மேல் மாகாணம் அதிர்ச்சியளித்தது. இதனால், முதல் இன்னிங்சில் வெறும் 94 ஓட்டங்களுடன் ஊவா மாகாண வீரர்கள் சுருண்டு கொண்டனர்.
அவ்வணியின் துடுப்பாட்டத்தில் நவிந்து நிர்மல் மற்றும் ஹஷான் விமர்ஷக ஆகியோர் அதிகபட்சமாக தலா 20 ஓட்டங்கள் வீதம் பெற்றிருந்தனர். இதேவேளை, அதிரடிப்பந்து வீச்சினை வெளிப்படுத்திய மேல் மாகாணத்தில், சந்தகன் பத்திரன 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இலேன் ஹெட்டியராச்சி மற்றும் மிஷென் சில்வா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் பெற்றிருந்தனர்.
பதிலுக்கு தமது முதலு இன்னிங்சினை ஆரம்பித்த மேல் மாகாண தெற்கு அணி, மலிந்து மதுரங்க (50), பிரமோத் மதுவந்த (48*) மற்றும் மொஹமட் ஜலீல் (46) ஆகியோரின் பெறுமதியான ஓட்டக்குவிப்புக்களின் துணையோடு போட்டியின் முதல் நாள் நிறைவில், 8 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
ஊவா மாகாண அணியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்திய அஞ்சுல பிரசன்னாஜித் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பதம்பார்த்திருந்தார்.
போட்டியின் சுருக்கம்
ஊவா மாகாணம் (முதல் இன்னிங்ஸ்) – 94 (44.4) – நவிந்து நிர்மல் 20, ஹஷான் விமர்ஷக 20*, சந்தகன் பத்திரன 4/29, இலைன் ஹெட்டியராச்சி 2/13, மிஷென் சில்வா 2/17
மேல் மாகாணம் தெற்கு (முதல் இன்னிங்ஸ்) – 273/8 (53) – மலிந்து மதுரங்க 50, மொஹமட் ஜலீல் 46, பிரமோத் மதுவந்த 48*, அஞ்சுல பிரசன்னாஜித் 3/29
போட்டியின் இரண்டாம் மற்றும் இறுதி நாள் நாளை தொடரும்.