இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் வேதனையைக் கொடுத்த 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தோல்வி குறித்து சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கடந்த சில தினங்களுக்கு முன் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.
குசல் பெரேரா, திசர பெரேரா ஆகியோர் ராங்பூர் அணியில்
அதில், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றிருக்கலாம். எனவே, அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். எனினும் பிபிசி செய்திச் சேவையுடனான நேர்காணலில் கலந்துகொண்ட 2011 உலகக் கிண்ண இலங்கை அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார, உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவ்வாறு சூதாட்டம் இடம்பெற்றால் அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து அர்ஜுன ரணதுங்கவின் குற்றச்சாட்டு தொடர்பில் 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கௌதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா உள்ளிட்ட வீரர்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இவ்வாறான ஒரு நிலையில், 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகேவும் குறித்த விடயம் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்துகின்ற கருத்தொன்றை தெரிவித்ததையடுத்து இந்த விடயம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியது.
2011 உலகக் கிண்ண போட்டித் தொடரின் இறுதிவரை இலங்கை அணி சிறப்பாக விளையாடியது. இதன்படி உலகக் கிண்ணத்தை இலங்கைதான் கைப்பற்றும் என அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். இறுதியில் இலங்கை ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. எனினும், இந்தப் போட்டியின் போது சந்தேகத்தை ஏற்படுத்தும்படியான சம்பவங்கள் சில பதிவானதை அவதானிக்க முடிந்தது.
உலகக் கிண்ண போட்டியொன்றின் இறுதிப் போட்டியில் முதற்தடவையாக அதுவும் இலங்கை அணியில் 4 வீரர்கள் மாற்றப்பட்டனர். பொதுவாக மாற்று வீரரொருவரை இறுதிப் பதினொரு பேருக்குள் கொண்டுவருவதற்கு தெரிவுக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும். அதன்பிறகு விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியைப் பெறவேண்டும். ஆனால் அவ்வாறு எந்தவொரு நடைமுறையையும் பின்பற்றாமல், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும் அறிவிக்காமல் கடைசி நேரத்தில் இவ்வாறு 4 வீரர்களை மாற்றம் செய்துள்ளார்கள். உண்மையில் இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
குமார் சங்கக்கார விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா?
”அத்துடன் இலங்கை அணி வீரர்கள் தங்கியிருந்த அறையில் சிரேஷ்ட வீரர்கள் புகைப்பிடித்திருந்ததாகவும், 40 சிகரெட் துண்டுகளை காணமுடிந்ததாகவும் அணியின் முகாமையாளர் எனக்கு அறிவித்திருந்தார். அதேபோல, போட்டித் தொடரின்போது ஒருசில மாற்றங்களை முன்னெடுக்க உத்தரவு வழங்கப்பட்டபோதும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் அப்போது என்னிடம் முன்வைக்கப்பட்டது” என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், ”ஏன் இதுதொடர்பில் அப்போது நீங்கள் விசாரணைகளை நடத்தவில்லை” என கேட்கப்பட்ட கேள்விக்கு மஹிந்தானந்த கருத்து தெரிவிக்கையில், ”உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நான் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு உத்தரவிட்டேன். அதன்பிறகு எனது ஆலோசனையின் பேரில் அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் , காலப்போக்கில் குறித்த விசாரணைகள் முடக்கப்பட்டு விட்டன. எனவே இறுதி நேரத்தில் 4 வீரர்களை மாற்றியது தொடர்பில் எனக்கு மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.