ஷமிந்த எரங்க மீதான பந்துவீச்சுத் தடை நீக்கம்

784

விதிமுறைகளுக்கு புறம்பான பந்துவீச்சுப்பாணியை கொண்டிருந்த காரணத்தினால் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமிந்த எரங்க மீது விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (18) முதல் நீக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஷமிந்த எரங்க சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சுப்பாணியை கொண்டிருப்பதாக கடந்த வருடம் மே மாதத்தில் இங்கிலாந்துடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது போட்டி நடுவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. எரங்க இறுதியாக 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்துடனான சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்ததுடன், அதனைத் தொடர்ந்து பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவரது பந்துவீச்சுப்பாணி விதிமுறைகளுக்கு புறம்பானது என நிரூபணமானது.

புதிய திட்டங்களுடன் இந்திய டெஸ்ட் தொடரை எதிர்கொள்ளவுள்ளோம் – தினேஷ் சந்திமால்

ஷமிந்த எரங்க தனது பந்துவீச்சுப்பாணியை மாற்றியமைத்துக் கொண்டதன் பின்னர் சென்னையில் உள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் மீண்டும் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். அதன் முடிவுகளின்படி எரங்கவின் அனைத்து பந்துவீச்சுக்களிலிலும் முழங்கையின் விரிவானது 15 பாகைக்கு குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் காலப்பகுதியிலும் எரங்கவின் பந்துவீச்சுப்பாணி தொடர்பில் சந்தேகங்கள் எழும் பட்சத்தில் போட்டி நடுவர்களினால் சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். ஷமிந்த எரங்கவின் திருத்தப்பட்ட புதிய பந்துவீச்சுப்பாணியின் காணொளிகள் போட்டி நடுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்திருந்தது.