உலக மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படுகின்ற 10ஆவது உலக இளையோர் மெய்வல்லுனர் போட்டித் தொடர் நேற்று (16) நிறைவுக்கு வந்தது. கடந்த 12ஆம் திகதி கென்யா நைரோபியில் ஆரம்பமான இப்போட்டித் தொடரில் இலங்கையிலிருந்து 3 வீரர்கள் கலந்து கொண்டதுடன், தமது தனிப்பட்ட திறமைகளையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
ரவிஷ்கவுக்கு 7ஆவது இடம்
18 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்காக கடந்த 4 தினங்களாக நடைபெற்ற போட்டித் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட கொட்டாஞ்சேனை பெனெடிக் கல்லூரியைச் சேர்ந்த ரவிஷ்க இந்திரஜித், நேற்று (16) நடைபெற்ற 3ஆவது அரையிறுதிப் போட்டியில் 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டித் தூரத்தை 48.89 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் அவர் போட்டித் தூரத்தை 48.72 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அபிவிருத்தி கண்டு வரும் இலங்கை மெய்வல்லுனர் வீரர்களுக்கு மேலும் பல வாய்ப்பு
எனினும், தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 55ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை 49.14 செக்கன்களில் நிறைவுசெய்து சர்வதேச இளையோர் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்ற ரவிஷ்க, கடந்த சில மாதங்களுக்கு முன் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை அணி சார்பாக பங்குபற்றியதுடன், 48.62 செக்கன்களில் குறித்த போட்டித் தூரத்தை நிறைவு செய்து தனது சிறந்த காலத்தையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஷாலிகவின் சிறந்த பதிவு
18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தை 21.72 செக்கன்களில் நிறைவு செய்து தனது தனிப்பட்ட சிறந்த பதிவாக நிலைநாட்டிய கொட்டாஞ்சேனை பெனெடிக் கல்லூரியைச் சேர்ந்த சாலிக சந்தூஷ், இளையோர் உலக மெய்வல்லுனர் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். அவர் குறித்த போட்டியில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டாலும், உலக இளையோர் மெய்வல்லுனர் போட்டிகளில் முதல் 12 இடத்தைப் பெற்றுக்கொண்ட சிறந்த காலப்பதிவாகவும் இடம்பெற்றது. எனினும் முன்னதாக நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுனர் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற சாலிக, 21.96 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து உலக இளையோர் மெய்வல்லுனர் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 16 வயதான ஷாலிக, முன்னதாக 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயதத்தில் ஷெஹான் அம்பேபிட்டியவின் சாதனையை முறியடித்திருந்தார்.
அஸ்மிகாவுக்கு ஏமாற்றம்
18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2,000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட குளியாப்பிட்டி மத்திய கல்லூரியின் அஸ்மிகா ஹேரத் குறித்த தூரத்தை (10 நி. 18.8 செக்.), ஓடிமுடித்து 12ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று அவர் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுனர் போட்டி ஏற்பாட்டுக் குழுவினரின் தவறுதலான முடிவினால் அவருக்கு 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இறுதி நேரத்தில் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இம்முறை இளையோர் உலக மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள தகுதிபெற்ற காலி மஹிந்த கல்லூரியின் நவோத்ய சங்கல்பவை இத்தொடரில் பங்கேற்க செய்யாமல் இருப்பதற்கு மெய்வல்லுனர் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன்படி அவர் அடுத்தவாரம் பஹாமாஸில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகளில் இளையோர் மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.