யாழ்ப்பாணம் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று நிறைவடைந்த, அமரர் அருளானந்தம் ஞாபகார்த்த கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பலம் மிக்க ஊரெளு றோயல் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்திய வேலணை ஐயனார்  விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை வென்று சம்பியனாக முடிசூடியது.

அணிக்கு 7 பேரைக் கொண்டதாக அமைந்த இந்தத் தொடர் இலவாளை புனித ஹென்றியரசர் கல்லூரியின் முன்னாள் வீரரும் பயிற்றுவிப்பாளருமான அமரர் அருளானந்தம் அவர்களின் நினைவிற்காக யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து இரண்டு நாட்கள் இடம்பெற்ற இப் போட்டித் தொடரில் 16 அணிகள் பங்கு கொள்வதாக அறிவிக்கப்பட்டன. எனினும் அவற்றில் 2 அணிகள் பங்கு கொள்ளாத நிலையில், 14 அணிகளுக்கு இடையிலான மோதல்கள் அனைத்தும் விலகல் (நோக் அவுட்) முறையில் இடம்பெற்றன.

முதல் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் அடுத்த சுற்றான காலிறுதி ஆட்டங்களில் மோதிக்கொண்டன. முதலாவது காலிறுதியில் ஐயனார் விளையாட்டுக் கழகமும் டயமன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன. இதில் ரஜித்குமார் 27ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் உதவியுடன் ஐயனார் அணி 1-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகியது.

19 வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கு தெரிவாகிய வீரர்கள் இவர்கள் தான்

அடுத்த காலிறுதியில் சென் லூட்ஸ் மற்றும் புனித அந்தோனியார் கழக அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் தலா ஒரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி நேரம் நிறைவடைந்தது. இதன் காரணமாக பின்னர் வழங்கப்பட்ட பெனால்டி உதையில் 4-2 என்று வெற்றி பெற்ற சென் லூட்ஸ் அணி அரையிறுதிக்குத் தெரிவாகியது.  

விண்மீன் விளையாட்டுக் கழகம் மற்றும் புனித நிக்கலஸ் விளையாட்டுக் கழகம் என்பவற்றுக்கு இடையிலான அடுத்த காலிறுதியில் கென்னடி (12’) மற்றும் கன்தீபன் (25’) ஆகியோரது கோல்களின் உதவியுடன் விண்மீன் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

இறுதியாக இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் பல முன்னணி வீரர்களைக் கொண்ட ஊரெளு றோயல் விளையாட்டுக் கழகம் 4-0 என்ற கோல்கள் கணக்கில் கொலின்ஸ் அணியை இலகுவாக வெற்றி கொண்டது. அவ்வணி சார்பாக சஜன்தன் (4’), கொபன் (6’), எடிசன் (19’) மற்றும் நிதர்சன் (34’) ஆகியோர் கோல்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

அரையிறுதிப் போட்டிகள்

அதன் பின்னர், காலிறுதிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. பலம் மிக்க நான்கு அணிகள் மோதிய இந்த அரையிறுதிச் சுற்றில் இடம்பெற்ற இரண்டு ஆட்டங்களும் பார்வையாளர்களுக்கு சிறந்த விருந்தாகவே இருந்தன.

இதில் முதல் அரையிறுதியில் ஐயனார் விளையாட்டுக் கழகமும் சென் லூட்ஸ் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் தமக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட சென் லூட்ஸ் அணியினர் அவ்வணியின் தனுராஜ் மூலம் போட்டியின் ஏழாவது நிமிடத்தில் தமக்கான முதல் கோலைப் பெற்றுக்கொண்டனர்.

எனிம் அதனைத் தொடர்ந்து ஐயனார் அணியின் அகீபன் 15ஆம் மற்றும் 18ஆம் நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்றுக் கொடுத்து தமது தரப்பினரை முன்னிலைப் படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் 24ஆவது நிமிடத்தில் அவ்வணியின் சுபிஜன் மற்றொரு கோலைப் பெற, ஆட்டத்தின் முடிவில் ஐயனார் அணியினர் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.

பிஃபா தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது ஜெர்மனி

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஊரெளு றோயல் மற்றும் பலாலி விண்மீன் அணிகள் மோதின. இந்த ஆட்டம் ஆரம்பமாகி முதல் நிமிடத்திலேயே தேசிய அணியில் அங்கம் வகிக்கும் வீரரான எடிசன் பிகுராடோ மூலம் றோயல் அணி தமக்கான முதல் கோலைப் பெற்றுக்கொண்டது.

அதன் பின்னர் நீண்ட நேரம் இரு அணிகளும் தமக்கிடையிலான கோல் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டன. அதன் இறுதியில் ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் விண்மீன் அணியினர் தமக்கான முதல் கோலைப் பெற்றனர்.

எனினும், அதற்கு அடுத்த நிமிடமே எதிரணியின் கோபன் தனது அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக் கொடுக்க, அதுவே அவ்வாட்டத்தின் இறுதி கோலாக இருந்தது. எனவே, றோயல் அணியினர் 2-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர்.

இறுதிப் போட்டி

இவ்விறுதிப் போட்டியில் யாழின் பலம்வாய்ந்த அணிகளில் ஒன்றான ஊறெளு றோயல் அணியை எதிர்த்து வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம் மோதியது.

இச்சுற்றுப் போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மேலும் சிறந்த திறமையுடன் கிண்ணத்திற்கான கனவுடன் களம் கண்டன.  

ஆட்டம் ஆரம்பமாகி 2வது நிமிடத்தில் ஐயனார் அணி வீரரான சுபராஜ் பின்கள வீரரின் தவறான தடுப்பினைப் பயன்படுத்தி கோலொன்றைப் பதிவுசெய்ய அட்டம் ஆரம்பத்திலேயே பரபரப்பினை ஏற்படுத்தியது.

பின்னர், அதற்குப் பதிலாக 7வது நிமிடத்தில் றோயல் அணி வீரர் எடிசன் ஒரு கோலைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து 15ஆவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பந்தை எடிசன் 40 யாரை விடவும் அதிக தூரத்தில் இருந்து கோலை நோக்கி உதைய அது கம்பங்களுக்குள் சென்றது. இதன் காரணமாக றோயல்  அணி முன்னிலை பெற்றது.

மீண்டும் 20வது நிமிடத்தில் ஐயனார் வீரர் சுபராஜ் மீண்டும் கோலொன்றைப் பதிவுசெய்ய முதல் பாதியில் கோல்கள் சமநிலையானது.

அடுத்த பாதியில் இரு அணிகளும் மிகவும் போராட்டமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தன. இந்நிலையில் 27 வது நிமிடத்தில் றோயல் அணியின் வீரர் கோபன் கோலொன்றைப் பதிவுசெய்து மீண்டும் அணியை முன்னிலைப்படுத்தினார்.

அதன் பின்னர் இறுதிவரை கடினமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஐயனார் வீரர்கள் அடுத்தடுத்து இரு கோல்களைப் பெற்றனர். இதில் அணித் தலைவர் அகீபன் மிகத்தொலைவில் இருந்து வேகமாக அடித்த பந்தினை பின்கள வீரர் தடுக்க முற்பட்டபோது அவரின் காலில் பட்டு பந்து கோலாகியது.

அது போன்றே, சிறந்த ஒரு பந்துப் பரிமாற்றத்தின் மூலம் சுபராஜ் அணிக்கான நான்காவது கோலைப் பெற்றதுடன் தனது ஹட்ரிக் கோலையும் பதிவு செய்தார்.

எனினும், றோயல் அணியின் இறுதி நிமிடம் வரையிலான முயற்சிகள் தோல்விலேயே முடிந்தன. இதன் காரணமாக 4-3 என வெற்றி பெற்ற ஐயனார் வீரர்கள் இத்தொடரின் சம்பியன்களாகத் தெரிவாகினர்.

விருதுகள்

  • இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் – அகீபன் (ஐயனார் வி.க)
  • தொடரின் நாயகன் – எடிசன் பிகுராடோ (றோயல் வி.க)