இரண்டாம் நாளில் பந்து வீச்சிலும் ஆதிக்கம் செலுத்திய ஜிம்பாப்வே அணி

907
Zimbabwe vs Sri Lanka Test

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவின் போது ஜிம்பாப்வே அணியின் சிறந்த களத் தடுப்பு மற்றும் அணித் தலைவர் கிராம் கிரீமரின் அபார பந்து வீச்சின் மூலம் இலங்கை அணி 293 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளதோடு மேலும் 63 ஓட்டங்களால் பின்னிலை வகிக்கின்றது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதலாம் நாளன்று, கிரைக் எர்வின் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட 151 ஓட்டங்களின் மூலம் ஜிம்பாப்வே அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்களை பெற்றிருந்தது. அந்த வகையில், இரண்டாம் நாளாக இன்றைய தினம் களமிறங்கிய அவ்வணி எஞ்சியிருந்த இரண்டு விக்கெட்டுகளையும் 12 ஓட்டங்களுக்குள் இழந்தது.

கிரைக் எர்வினின் சதத்தின் மூலம் முதலாம் நாள் ஜிம்பாப்வே வசம்

அதிரடியாக ஓட்டங்களை பெற முயற்சித்த கிரைக் எர்வின் லஹிறு குமாரவின் பந்து வீச்சில் தில்ருவான் பெரேராவிடம் பிடி கொடுத்து 160 ஓட்டங்களுடன் வெளியேறினார். அத்துடன் 9 ஆவது விக்கெட்டுக்காக தனது விக்கெட்டை பாதுகாத்துக்கொண்டு ஓட்டங்களை பெற்றுக்கொள்ள முயற்சித்த டொனல்ட் திரிபானோ 27 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஹேரத்தின் பந்து வீச்சில் திமுத் கருணாரத்னவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சுக்காக களமிறங்கிய இலங்கை அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக உபுல் தரங்க மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று சிறந்த ஆரம்பத்தை வழங்கினர்.

எனினும், திமுத் கருணாரத்னவின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் மென்டிஸ் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜிம்பாவே அணித் தலைவர் கிராம் கிரீமர் பந்து வீச்சில் வெறும் 11 ஓட்டங்களுக்கு விக்கெட் காப்பாளர் ரேகிஸ்சிடம் பிடி கொடுத்து ஏமாற்றினார்.

அவரைத் தொடர்ந்து,  புதிய அணித் தலைவர் தினேஷ் சந்திமால் உபுல் தரங்கவுடன் இணைந்து கொண்டார். சந்திமால் அடித்த பந்து, பந்து வீசிய டொனல்ட் திரிபானோவின் கரங்களில் பட்டு நேரடியாக விக்கெட்டில் பட்டதால் துரதிஷ்டவசமாக 71 ஓட்டங்களுடன் களத்திலிருந்து வெளியேறினார் உபுல் தரங்க.

அதனையடுத்து, ஐந்தாவது விக்கெட்டுக்காக தினேஷ் சந்திமாலுடன் இணைந்து கொண்ட முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ், 96 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.

அணித் தலைவராக இன்றைய தினம் பொறுப்புடன் துடுப்பாடிய தினேஷ் சந்திமால் அரைச்சதம் கடந்தார். எனினும், 6 பௌண்டரிகள் உட்பட 55 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் கிராம் கிரீமரின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்து அவரும் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து அஞ்செலோ மதிவ்சும் 41 ஓட்டங்களுடன் வெளியேற,   இலங்கை அணி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. பந்து வீச்சில் மேலும் அழுத்தம் கொடுத்த ஜிம்பாப்வே அணித் தலைவர், நிரோஷன் திக்வெல்லவின் விக்கெட்டினை வெறும் 6 ஓட்டங்களுக்கு போல்ட் முறையில் வீழ்த்தினார்.

இடைநீக்கப்பட்ட அணிகள் மீண்டும் .பி.எல் தொடரில்

சற்று நேரம் அதிரடி காட்டிய தில்ருவான் பெரேரா இரண்டு பௌண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் உள்ளடங்கலாக 33 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் துரதிஷ்டவசமாக ஜிம்பாப்வே அணியினரின் அபார களத் தடுப்பின் காரணமாக ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

அசேல குணரத்ன மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 24, 5 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர். சிறப்பாக பந்து வீசிய ஜிம்பாப்வே அணித் தலைவர் கிராம் கிரீமர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில் இன்றைய நாள் ஆட்ட நிறைவின் போது, 7 விக்கெட் இழப்பிற்கு 293 ஓட்டங்களை பெற்றுள்ள இலங்கை அணி மேலும் 63 ஓட்டங்களால் பின்னிலையுற்று இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

நாளை போட்டியின் மூன்றாம் நாளாகும்.

போட்டியின் சுருக்கம்