இங்கிலாந்தில் நடைபெற்று வரும், மகளிர் உலகக் கிண்ணத்தில் இன்று (9) நடைபெற்று முடிந்திருக்கும் போட்டியொன்றில், இலங்கை மகளிர் அணியை மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 47 ஓட்டங்களால் வீழ்த்தி இத்தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
டெர்பி நகர கவுண்டி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்றிருந்த இலங்கை மகளிர் அணியின் தலைவி இனோக்கா ரணவீர முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை ஸ்டெபானி டெய்லர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு வழங்கியிருந்தார்.
மெதிவ்சின் தலைமைப் பதவியின் நீடிப்பில் சந்தேகம்
இதனடிப்படையில் இம்முறைக்கான மகளிர் உலக கிண்ணத்தில் எந்தவொரு வெற்றியையும் இதுவரை பெற்றிராத இந்த இரண்டு மகளிர் அணிகளும் தமது முதல் வெற்றியை நோக்கி போட்டியை ஆரம்பித்திருந்தன.
தொடர்ந்து ஹெய்லி மெத்திவ்ஸ் மற்றும் கைசியா நைட் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தை தொடங்கியிருந்த மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியின், முதல் விக்கெட்டினை இலங்கையின் சிறிபாலி வீரக்கொடி தனதாக்கியிருந்தார்.
இதனால், சற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி களத்தில் நின்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹெய்லி மெதிவ்ஸ் 35 பந்துகளில் 26 ஓட்டங்களுடன் ஓய்வறையை நோக்கி நடந்தார்.
தொடர்ந்து துடுப்பாட வந்த வீராங்கனைகளையும், இலங்கை மகளிர் அணியின் பந்து வீச்சாளர்கள் குறைவான ஓட்டங்களுக்குள் மடக்கியிருந்தனர். எனினும், மத்திய வரிசையில் ஆடியிருந்த தீன்ட்ரா டொட்டின் மற்றும் மெரிஸ்ஸா அகுலெரியா ஆகியோரின் விவேகமான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி, ஒரு நல்ல இலக்கு ஒன்றினை நோக்கி பயணித்திருந்தது.
எனினும், மீண்டும் பந்து வீச்சில் ஆதிக்கத்தினை செலுத்த தொடங்கிய இலங்கை மகளிர் அணி தொடர்ந்தும் மேற்கிந்தய தீவுகள் அணியின் விக்கெட்டுகளை சாய்த்து துடுப்பாட்டத்தில் அவர்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், 50 ஓவர்கள் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில், இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த மெரிஸ்ஸா அகுலெரியா 59 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களையும், அதிரடி காட்டியிருந்த தீன்ட்ரா டொட்டின் வெறும் 25 பந்துகளில் 7 அபார பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
இலங்கையின் பந்து வீச்சில், கடந்த போட்டி போன்று மீண்டுமொரு சிறப்பான பந்து வீச்சை வெளிக்காட்டியிருந்த சிறிபாலி வீரக்கொடி 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அமா காஞ்சனா மற்றும் அணித்தலைவி இனோக்கா ரணவீர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் பதம்பார்த்திருந்தனர்.
இதனை அடுத்து, 50 ஓவர்களில் 230 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என பதிலுக்கு தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை மகளிர் அணி தமது ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான நிப்புனி ஹன்சிக்கா மற்றும் ஹஷினி பெரேரா ஆகியோரை பத்திற்கும் குறைவான ஓட்டங்களுடன் பறிகொடுத்தது.
எனினும் நிலைமையை உணர்ந்து ஆடிய சமரி அட்டபத்து மற்றும் சஷிகலா சிறிவர்த்தன ஆகியோர் சாமர்த்தியமான முறையில் துடுப்பாடி வெற்றி இலக்கை நோக்கி அணியை சிறப்பாக வழிநடாத்தியிருந்தனர்.
அபாரதத்தை எதிர்கொள்ளும் ஜிம்பாப்வே அணி வீரர்கள்
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி சார்பாக பந்து வீச வந்திருந்த வலது கை சுழல் வீராங்கனையான அனிஷா மொஹமட் குறுகிய இடைவெளிகளில் இலங்கை மகளிர் அணியின் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி போட்டியின் போக்கை மேற்கிந்திய தீவுகளின் பக்கம் மாற்றியிருந்தார்.
இவரின் துரித கதியிலான விக்கெட்டுகளினால், இலங்கை மகளிர் அணியின் மூன்றாம் விக்கெட்டிற்கான இணைப்பாட்டம் 61 ஓட்டங்களுடன் நிறைவுக்கு வந்ததுடன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த சமரியும், சிறிவர்த்தனவும் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.
தொடர்ந்தும், வெற்றி இலக்கை அடைய பிரசாதினி வீரக்கொடி மற்றும் ஒஷாதி ரணசிங்க ஆகியோராலும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள் காரணமாக இலங்கை மகளிர் அணி, 48 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 182 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவி, இலங்கை மகளிர் உலக கிண்ணத்தில் தொடர்ச்சியான தமது ஐந்தாவது தோல்வியை பதிவு செய்தது
இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில், அதிகபட்சமாக சஷிகலா சிறிவர்தன 33 ஓட்டங்களையும், பிரசாதினி வீரக்கொடி 30 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பந்து வீச்சில், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி சார்பாக அனிஷா மொஹமட் 3 விக்கெட்டுகளையும் , எபி பிளெச்சர் மற்றும் ஷானெல் டேலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
இலங்கை அணி மகளிர் உலகக் கிண்ணத்தில் பெற்ற ஐந்தாவது தொடர் தோல்வி இது என்பதால், அரையிறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை இலங்கை முழுமையாக பறிகொடுத்துள்ளது. அதேவேளை, இந்த வெற்றியின் மூலம் இத்தொடரில் முதல் வெற்றியினை பதிவு செய்து கொண்ட மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு அடுத்த சுற்றிற்கான வாய்ப்பு இன்னும் உயிர்ப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
மேற்கிந்திய தீவுகள் – 229/9 (50) – மெரிஸ்ஸா அகுலெரியா 46*(59), தீன்ட்ரா டொட்டின் 38(25), ஹெய்லி மெத்திவ்ஸ் 26(35), சிறிபாலி வீரக்கொடி 38/3(10), இனோக்கா ரனவீர 56/2(10), அமா காஞ்சனா 50/2(9)
இலங்கை – 182 (48) – சஷிகலா சிறிவர்தன 33(67), பிரசாதினி வீரக்கொடி 30(34), சமரி அட்டபத்து 26(50), ஒஷாதி ரணசிங்க 20(46), அனிஷா மொஹமட் 39/3 (10), எபி பிளெச்சர் 38/2 (9), ஷானெல் டேலி 30/2 (7)
போட்டி முடிவு – மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 47 ஓட்டங்களால் வெற்றி