ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் MCC அணிக்காக குமார் சங்கக்கார

1232
Kumar Sangakkara

லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூலை 11ஆம் திகதி நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் போட்டியில் களமிறங்கவுள்ள முன்னாள் நட்சத்திர வீரர்களை கொண்ட MCC அணியின் துடுப்பாட்ட வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார இணைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களான யூனிஸ் கான் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோர் சர்வதேச மட்டத்தில் 28,922 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள், அண்மையில் இங்கிலாந்து உள்ளூர் பருவகால போட்டிகளில் 1000 ஓட்டங்களை குவித்த குமார் சங்கக்கரா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் ஷிவ்னரேன் சந்தர்போல் ஆகியோருடன் அனைவரும் ஒரே அணியில் களமிறங்கவுள்ளனர்.

இலங்கை அணியில் இணைவாரா பானுக்க ராஜபக்ஷ?

பாகிஸ்தான் வீரர்களாகிய இருவரும், கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டித் தொடரை முதல் தடவையாக வென்று கொடுத்ததன் பின்னர் ஓய்வு பெற்றிருந்தனர். இதன்மூலம், ஒரே அணியில் இணைந்து விளையாடிய இருவரும் மீண்டும் இணைந்து விளையாடுவதைப் பார்வையிடுவதற்கான இறுதி வாய்ப்பாக இப்போட்டி அமையும்.

மிஸ்பா உல் ஹக் சர்வதேச போட்டிகளில் 5,222 டெஸ்ட் ஓட்டங்களுடன் 46.62 என்ற சராசரியுடனும், ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 5,122 ஓட்டங்களையும் விளாசியுள்ளார்.

அதேநேரம், யூனிஸ் கான் 52.20 என்ற ஓட்ட சராசரியில், 10,099 டெஸ்ட் ஓட்டங்களையும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 7,249 ஓட்டங்களையும் பாகிஸ்தான் அணி சார்பாக பதிவு செய்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரரான பிரெண்டன் மெக்கலம் தலைமையில் களமிறங்கவுள்ள MCC அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி வரலாற்றில் முதல் தடவையாக மோதும் இந்த 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

MCC கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் அனைத்து வீரர்களினதும் மொத்த ஓட்ட எண்ணிக்கை 42,690 ஓட்டங்களாக உள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் சகல துறை ஆட்டக்காரருமான சமித் பட்டேல் மற்றும் விக்கெட் காப்பளார் கிறிஸ் ரீட் ஆகியோரும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அயர்லாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்திய டிம் முர்தாக் மற்றும் ஜார்ஜ் டாக்ரெல் ஆகியோர் சாரே அணியின் பந்து வீச்சாளர்களாகிய கிறிஸ் ரஷ்வேர்த் மற்றும் ஸ்டுவர்ட் மீக்கர் ஆகியோருடன் பந்து வீச்சுத் துறையை அவதானிக்கவுள்ளனர்.

அதேவேளை, சிறந்த ஒருநாள் போட்டி அணியாக முன்னேற்றம் கண்டு வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றிருந்த உலக T-20 போட்டிகளில் 10 அணிகளை கொண்ட சூப்பர் 10 சுற்றுக்கு தெரிவாகியிருந்தது. அத்துடன், நாக்பூரில் நடைபெற்ற வலிமைமிக்க மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் 6 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

லக்ஷன் சந்தகனின் மாய சுழலின் பின்னணியில் இருப்பது என்ன?

மேலும், அண்மையில் நிறைவுற்ற இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளில் சன் ரைஸ் அணிக்காக ரஷித் கான் மற்றும் சகலதுறை ஆட்டக்காரராகிய முஹம்மத் நபி ஆகியோர் இடம் பிடித்து சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியை போன்றே, கடந்தாண்டு நடைபெற்ற நேபால் அணியுடனான போட்டியில் 6,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு மத்தியில் MCC அணி தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

MCC அணி

  1. பிரெண்டன் மெக்கலம் (அணித் தலைவர்) – நியூசிலாந்து
  2. குமார் சங்கக்கார             – இலங்கை
  3. யூனிஸ் கான்                     – பாகிஸ்தான்
  4. மிஸ்பா உல் ஹக்              – பாகிஸ்தான்
  5. ஷிவ்னரேன் சந்தர்போல்    – மேற்கிந்திய தீவுகள்
  6. சமித் பட்டேல்                    – இங்கிலாந்து
  7. கிறிஸ் ரீட் (விக்கெட் காப்பாளர்) – இங்கிலாந்து
  8. ஜோர்ஜ் டாக்ரெல்                – அயர்லாந்து
  9. கிறிஸ் ரஷ்ர்த்                     – இங்கிலாந்து
  10. ஸ்டுவர்ட் மீக்கர்                  – இங்கிலாந்து
  11. டிம் முர்தாக்                         – அயர்லாந்து