தனது கன்னி சர்வதேசப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக இன்று இணைந்துகொண்ட இளம் வீரர் வனிந்து ஹசரங்க, தனது முதல் போட்டியிலேயே ஹட்ரிக் விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார்.
வலது கை சுழற்பந்து வீச்சாளரும், சகலதுறை வீரருமான ரிச்மண்ட் கல்லூரியின் முன்னாள் வீரர் வனிந்து ஹசரங்க, ஜிம்பாப்வே அணியுடனான இலங்கைக் குழாமில் முன்னரே பெயரிடப்பட்டிருந்தார். எனினும், முதல் போட்டியில் அவர் களமிறக்கப்படவில்லை.
இந்நிலையில், இன்றைய போட்டியில் முதல் முறையாகக் களமிறங்கிய வனிந்து, 2.4 ஓவர்களை வீசி 15 ஓட்டங்களைக் கொடுத்து தனது ஹட்ரிக் விக்கெட்டைக் கைப்பற்றினார். இவர், மால்கோம் வால்லர், டெனால்ட் திரிபானோ மற்றும் தென்டாய் சட்டாரா ஆகியோரது விக்கெட்டுக்களையே கைப்பற்றினார்.
இதன் மூலம், தனது முதல் போட்டியில் ஹட்ரிக் விக்கெட் பெற்ற முதல் இலங்கை வீரராகவும், சர்வதேச மட்டத்தில் முதல் போட்டியில் ஹட்ரிக் விக்கெட் பெற்ற மூன்றாவது வீரராகவும் தனது பெயரை வனிந்து ஹசரங்க பதிவு செய்துள்ளார்.
ஜிம்பாப்வேயை எதிர்கொள்ள பல மாற்றங்களுடனான இலங்கைக் குழாம்
இதற்கு முன்னர் தென்னாபிரிக்க அணியின் ககிசோ ரபாடா மற்றும் பங்களாதேஷ் அணியின் தய்ஜுல் இஸ்லாம் ஆகியோர் தமது முதலாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஹட்ரிக் விக்கெட்டை கைப்பற்றியிருந்தனர்.
வனிந்து ஹசரங்கவைப் பொருத்தவரை, பங்களாதேஷில் இடம்பெற்ற 19 வயதின் கீழ் இளையோருக்கான உலகக் கிண்ண இலங்கை அணி, 23 வயதின் கீழ்ப்பட்ட இலங்கை வளர்ந்து வரும் அணி என்பவற்றில் அங்கம் வகித்த வீரராக உள்ளார்.
தற்பொழுது கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக (CCC) விளையாடி வரும் இவர், இதுவரை 12 முதல்தரப் போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 5 அரைச் சதங்கள் உள்ளடங்களாக 775 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
அதே போன்று, இதுவரையில் 7 முதல்தர ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஒரு போட்டியில் 5 விக்கெட் உள்ளடங்களாக மொத்தமாக 12 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
இவ்வாறான சிறந்த ஆட்டப் பதிவுகளை தன்னகத்தே கொண்டிருந்த காரணத்தினாலேயே வனிந்து இந்த இளம் வயதிலேயே இலங்கை தேசிய அணியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.