இலங்கை இழக்கும் அடுத்த வீரர் குசல் மெண்டிஸ்?

4377
Kusal mendis

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதால், காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

ஏற்கனவே, வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இப்போட்டியில் இருந்து விலகும் இரண்டாவது வீரராக குசல் கருதப்படுகின்றார்.

வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள லசித் மாலிங்க

இதன் காரணமாக, பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மாலிங்கவிற்குப் பதிலான வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலும், குசல் மெண்டிசிற்குப் பதிலான சாமர கபுகெதரவும் ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டிக்காக அணிக்கு அழைக்கப்படவுள்ளனர் என அறியக்கிடைக்கின்றது.

சாமர கபுகெதர, இறுதியாக இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியின்போது, காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். எனினும் தற்பொழுது அவர் குணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இடம்பெற்ற ஜிம்பாப்வே அணியுடனான முதல் போட்டியில் மிகவும் சிறந்த முறையில் துடுப்பாடி இருந்த குசல் மெண்டில் 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வி கண்டுள்ள இலங்கை அணி, இரண்டாவது போட்டியை கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.