இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் அனுர தெரிவு

600

இன்று (2017.07.01) இடம்பெற்ற இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் சம்மேளனத்தின் தலைவராக அனுர டி சில்வா மீண்டும் தெரிவாகியுள்ளார்.

தலைவர், உப தலைவர்கள் (5 பேர்), பொதுச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் (நிர்வாகம்), துணைச் செயலாளர் (தொழில்நுட்பம்) மற்றும் உதவிப் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக குறித்த தேர்தல் இடம்பெற்றது.

ஆசிய சம்மேளன சம்பியன்ஷிப் தொடரிற்கான இலங்கை இளையோர் குழாம் அறிவிப்பு

இதில், தலைவர் பதவிக்காக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்களாகிய அனுர டி சில்வா மற்றும் ரஞ்சித் ரொட்ரிகோ ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அனுர டி சில்வா 104 வாக்குகளையும், ரஞ்சித் ரொட்ரிகோ 79 வாக்குகளையும் பெற்றனர். எனவே, அனுர டி சில்வா 25 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று மீண்டும் தலைவராகத் தெரிவாகினார்.

அனுர டி சில்வா தலைவராகத் தெரிவாகியதன் பின்னர் ரஞ்சித் ரொட்ரிகோவின் தரப்பினர் ஏனைய பதவிகளுக்கான போட்டிகளில் இருந்து ஒதுங்கிக்கொண்டனர்.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) ஜஸ்வர் உமர், இத்தேர்தலின் மூலம் புதிய பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

ஜஸ்வர் உமர் (பொதுச் செயலாளர்)
ஜஸ்வர் உமர் (பொதுச் செயலாளர்)

பொருளாளருக்கான போட்டியில் 102 வாக்குகளைப் பெற்ற டிரொன் பெர்னாண்டோ புதிய பொருளாளராகத் தெரிவாகினார். அவருடன் போட்டியிட்ட பஸ்லான் சமீன் 80 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

அதே போன்று, நிர்வாக முறைமைக்கான துணைச் செயலாளராக A. அருலனந்தசோதியும், தொழில்நுட்ப முறைமைக்கான துணைச் செயலாளராக ஜகத் குமார டி சில்வாவும் தெரிவாகினர்.

தேர்தல் முடிவுகளின்படி, அந்தோனி டேவிட், உபாலி ஹேவகே, பாரூக் நாகூர்தம்பி மற்றும் பத்மசிறி முனசிங்க ஆகியோர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உப தலைவர்களாகத் தெரிவாகியுள்ளனர்.

இவர்களது பதவிக் காலம் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான நான்கு வருட காலத்திற்கு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.