ஜிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியில் சாலமன் மிர்ரின் கன்னிச் சதத்துடன் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய ஜிம்பாப்வே, இலங்கை மண்ணில் முதலாவது வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது.
இறுதியாக இந்த காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி 2000ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் திகதி நடைபெற்றிருந்தது. அந்த வகையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக ஒருநாள் போட்டியொன்று இங்கு நடைபெறுகின்றது.
சூழல் பந்துக்கு உகந்த விதத்தில் இந்த ஆடுகளம் உள்ளதால், இலங்கை அணிக்கு ஐந்து வருடங்களுக்கு பின்னர், சுழற்பந்து வீச்சாளர் அகில தனன்ஜய இந்த போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட்டார். கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய அணியுடனான தொடரை வெல்வதற்கு பெரும் பங்காற்றிய அமில அபோன்சொ மற்றும் நுவான் பிரதீப்பும் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். ஜிம்பாப்வே அணிக்கெதிரான இந்த முதல் போட்டியில் எவ்வாறெனினும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கிய தனுஷ்க குணாதிலக மற்றும் நிரோஷன் டிக்வெல்லவுக்கு சிறந்த இணை ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இலங்கை அணியின் முதல் விக்கெட் 16 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் வீழ்த்தப்பட்டது.
நிரோஷன் டிக்வெல்ல, தென்டாய் சட்டாரா பந்து வீச்சில் ரியான் பேர்ல்ளிடம் பிடி கொடுத்து 10 ஓட்டங்களுடன் களத்தை விட்டு வெளியேறினார். எனினும் அதனை தொடர்ந்து தனுஷ்க குனதிலக்கவுடன் இணைந்து கொண்ட குசல் மெண்டிஸ் நிதானத் துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அதேநேரம், இரண்டாம் விக்கெட்டுக்காக 117 ஓட்டங்களை பெற்று அணியை வலுப்படுத்தியதுடன், இருவரும் அரைச் சதம் கடந்தனர்.
Photo Album – Sri Lanka v Zimbabwe| 1st ODI
சீன் வில்லியம்ஸ் தனது அபார பந்து வீச்சின் மூலம் தனுஷ்க குனதிலகவை ஆட்டமிழக்கச் செய்து ஜிம்பாப்வே அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இணைப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். சிறப்பாக துடுப்பாடிய தனுஷ்க 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 60 ஓட்டங்களை பெற்ற நிலையில் கிரேக் இர்வினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இன்றைய தினம் சிறப்பாக துடுப்பாடிய குசல் மெண்டிஸ் இலங்கை சார்பாக வேகமாக 1000 ஓட்டங்களை குவித்த வீரர்கள் வரிசையில் உபுல் தரங்கவுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார். எனினும், 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 86 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் கிரேம் கிறீமரின் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து குசல் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்து அதிரடியாக துடுப்பாடிய அஞ்செலோ மெதிவ்ஸ் 43 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு பங்களிப்பு செய்தார். இறுதி ஓவர்களில் போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரடி துடுப்பாட்ட வீரர் அசேல குனரத்ன நான்கு பௌண்டரிகள் உள்ளடங்களாக 28 ஓட்டங்களை விளாசினார்.
அதேநேரம் இறுதி வரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக துடுப்பாடிய உபுல் தரங்க இன்றைய தினம் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் தனது 6000 ஓட்டங்களை கடந்த அதேவேளை, எட்டு பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்களாக அட்டமிழக்காமல் 79 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
அந்த வகையில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 316 ஓட்டங்களை பெற்றது. ஜிம்பாப்வே அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய தென்டாய் சட்டாரா இரண்டு விக்கெட்டுகளையும் சீன் வில்லியம்ஸ் மற்றும் கிரேம் கிறீமர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இலங்கை அணி பாரிய வெற்றி இலக்காக நிர்ணயித்த 317 ஓட்டங்களை எட்டிப்பிடிக்க களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, முதல் விக்கெட்டினை வெறும் 12 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தது. லசித் மாலிங்கவின் பந்து வீச்சில் ஹாமில்டன் மஸகட்சா வெறும் 5 ஓட்டங்களுடன் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்லவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனையடுத்து இரண்டாம் விக்கெட்டுக்காக சாலமன் மிர்ருடன் இணைந்து கொண்ட கிரைக் இர்வின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்டங்களை உயர்த்த முயன்றார். எனினும் ஐந்து வருடங்களுக்கு பின்னர் அணியில் இணைக்கப்பட்டிருந்த அகில தனன்ஜயவின் அபார பந்து வீச்சில் 18 ஓட்டங்களுக்கு உபுல் தரங்கவிடம் பிடி கொடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
அந்த வகையில், 46 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய சீன் வில்லியம்ஸ், சாலமன் மிர்ருடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 161 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று ஜிம்பாப்வே அணியை வலுப்படுத்தினர். அதிரடியாக துடுப்பாடிய சாலமன் மிர் இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து 96 பந்துகளில் 14 பௌண்டரிகளுடன் 112 ஓட்டங்களை விளாசி அச்சுறுத்தினார்.
சீன் வில்லியம் மற்றும் சாலமன் மிர் இருவரும் லசித் மாலிங்க உட்பட அனைத்து முக்கிய பந்து வீச்சாளர்களையும் துவம்சம் செய்ததால் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் பந்து வீச்சில் மாற்றத்தை ஏற்படுத்தி 33ஆவது ஓவரை வீசுவதற்கு பகுதி நேர வலது கை மித வேகப் பந்து வீச்சாளரான அசேல குனரத்னவுக்கு வாய்ப்பினை வழங்கினார்.
அசேல குனரத்ன வீசிய முதலாவது ஓவரில், மூன்றாவது பந்திலேயே சாலமன் மிர், அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதனையடுத்து மீண்டும் 35வது ஓவரை வீசிய அசேல, 7 பௌண்டரிகளுடன் 65 ஓட்டங்களை பெற்றிருந்த சீன் வில்லியம்சை நேரடியாக போல்ட் செய்து ஆட்டமிழக்கச் செய்ததோடு போட்டியை இலங்கைக்கு சாதகமானதாக மாற்றினார்.
எனினும், இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கியிருந்த சிக்கந்தர் ராஷா மற்றும் மல்கம் வால்லர் ஆகியோரை இலங்கை பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்த தவறினர். அதிரடியாக துடுப்பாடிய இவ்விருவரும் இலங்கை பந்து வீச்சாளர்களிடமிருந்து தமது விக்கெட்டுகளை பாதுகாத்துக்கொண்டதோடு இறுதி வரை ஆட்டமிழக்காமல் அபாரமாக துடுப்பாடி வெற்றி இலக்கை அடைந்தனர்.
56 பந்துகளை எதிர்கொண்ட சிக்கந்தர் ராஷா 7 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 67 ஓட்டங்களையும் மல்கம் வால்லர் வெறும் 29 பந்துகளில் 40 ஓட்டங்களையும் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு வளிநடாத்தினர்.
பந்து வீச்சில் அசேல குணரத்ன இரண்டு விக்கெட்டுகளையும் லசித் மாலிங்க மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக சாலமன் மிர் தெரிவு செய்யப்பட்டார்.
ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வேதேச போட்டி எதிர் வரும் ஜூலை 2ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
Sri Lanka - Batting | Toss: Sri Lanka | |
---|---|---|
Niroshan Dickwella | c Burl b Chatara | 10 (13) |
Danushka Gunathilaka | c Ervine b Williams | 60 (77) |
Kusal Mendis | c & b Cremer | 86 (80) |
Upul Tharanga | Not Out | 79 (73) |
Angelo Mathews | b Mire | 43 (30) |
Asela Gunarathne | c Waller b Chatara | 28 (26) |
Lahiru Madushanka | Not Out | 1 (1) |
Akila Dananjaya | ||
Amila Aponso | ||
Lasith Malinga | ||
Nuwan Pradeep | ||
Total | Extras (9) | 316/5 (50 overs) |
Zimbabwe - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Tendai Chatara | 9 | 1 | 49 | 2 |
Donald Tiripano | 6 | 0 | 45 | 0 |
Sean Williams | 9 | 0 | 57 | 1 |
Graeme Cremer | 10 | 0 | 57 | 1 |
Solomon Mire | 7 | 0 | 47 | 1 |
Sikandar Raza | 9 | 0 | 58 | 0 |
Zimbabwe - Batting | Toss: Sri Lanka | |
---|---|---|
Hamilton Masakadza | c Dickwella b Malinga | 5 (14) |
Solomon Mire | c & b Gunarathne | 112 (96) |
Craig Ervine | c Tharanga b Dananjaya | 18 (23) |
Sean Williams | b Gunarathne | 65 (69) |
Sikandar Raza | Not Out | 67 (56) |
Malcolm Waller | Not out | 40 (29) |
Ryan Burl | ||
PJ Moor | ||
Graeme Cremer | ||
Donald Tiripano | ||
Tendai Chatara | ||
Total | Extras (15) | 322/4 (47.4 overs) |
Sri Lanka - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Lasith Malinga | 9 | 0 | 50 | 1 |
Nuwan Pradeep | 9 | 1 | 51 | 0 |
Akila Dananjaya | 10 | 0 | 61 | 1 |
Amila Aponso | 8.4 | 0 | 77 | 0 |
Danushka Gunathilaka | 2 | 0 | 13 | 0 |
Lahiru Madushanka | 2 | 0 | 18 | 0 |
Asela Gunarathne | 7 | 0 | 46 | 2 |
போட்டியின் முடிவு : 17 பந்துகள் எஞ்சிய நிலையில் 6 விக்கெட்டுகளால் ஜிம்பாப்வே அணி வெற்றி.