மாலிங்கவுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைத் தீர்ப்பு வெளியாகியது

1761
Malinga issued six month suspended sentence and 50% fine

நடைபெற்று முடிந்த சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை அணியின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இலங்கை அணியின் களத்தடுப்பு மோசமாக காணப்பட்டதால் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் காலங்களில் இலங்கை அணி குழாம் தெரிவின்போது உடற்தகுதியும் ஒரு காரணியாக கருதப்படும் எனக் கூறியிருந்தார்.

அமைச்சருடைய இக்கருத்துக்கு லசித் மாலிங்க மிகக் கடுமையான விமர்சனங்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

லசித் மாலிங்க இலங்கை கிரிக்கெட் சபையின் விதிமுறைகளுக்கு மீறி செயற்படுகிறார் என குற்றம் சாட்டி ஒழுக்காற்று விசாரணைக்கு அழைக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இலங்கை கிரிக்கெட் சபையிடம் கோரியிருந்தார்.

இதன் அடிப்படையில் இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீதான ஒழுக்க குற்றச்சாட்டு விசாரணை தொடர்பான முடிவு தற்போது வெளியிடப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) இன்று அறிவித்துள்ளது.

மாலிங்க இலங்கை கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில், இலங்கை கிரிக்கெட் வாரிய செயலாளர் மாண்புமிகு மோகன் சில்வா, இலங்கை கிரிக்கெட் வாரிய நிறைவேற்று அதிகார உறுப்பினர் ஆஷ்லி டி சில்வா மற்றும் ஒழுக்காற்று குழுவின் தலைவர் அசேல ரேகவ ஆகியோர் கொண்ட விஷேட குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் லசித் மாலிங்க

இந்த குழுவின் விசாரணை மூலம், மாலிங்க விதிமுறைகளை மீறி செயற்பட்டது இன்று (27)  நிரூபிக்கப்பட்டிருந்தது. மாலிங்க தன் மீது விதிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதோடு, அதற்காக மன்னிப்பும் கோரினார்.

மாலிங்கவிற்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள காரணத்தினால், அவர் மீது எதிர்வரும் ஆறு மாத காலத்தில், இவ்வாறான குற்றமொன்று மீண்டும் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மாலிங்க தொடர்ந்து வரும் ஒரு வருடத்துக்கு போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, அவர் விளையாடும் அடுத்த ஒரு நாள் போட்டியின், போட்டி சம்பளத்தில் 50% அபராதமாக செலுத்தவும் கட்டளை இடப்பட்டுள்ளது.

இதனால், மாலிங்க எதிர்வரும் ஜிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரில் தடைகள் ஏதுமின்றி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.