லாஸ்ட் மேன் ஸ்டேன்ட் சம்பியன் பட்டத்தை தக்கவைத்த ஹேஷான் பிளெக்ஸ்

242

நேற்றைய தினம் (25) கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற லாஸ்ட் மேன் ஸ்டேண்ட் (LMS) கிரிக்கெட் இறுதிப் போட்டியில், சபாயர் விளையாட்டுக் கழகத்தை இலகுவாக வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது நுகேகொட ஹேஷான் பிளெக்ஸ் அணி.

இந்தப் பருவகால போட்டிகள் நான்கு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. மாபெரும் பணப் பரிசுகளை கொண்ட இந்த போட்டித் தொடரில் அரையிறுதி போட்டிக்கு பலம் வாய்ந்த நான்கு அணிகள் தெரிவாகின. அந்த வகையில், முதல் அரையிறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான ஹேஷான் பிளெக்ஸ் அணியும் ஸ்டபர்ட் மோட்டர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் மூன்று ஓட்டங்களால் வெற்றிபெற்று ஹேஷான் பிளெக்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இருந்தது. குறித்த 10 ஓவர்களில் ஹேஷான் பிளெக்ஸ் அணி 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எனினும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்டபர்ட் மோட்டர்ஸ் அணியினரால் குறித்த 10 ஓவர்களுக்குள் 83 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

அதேநேரம் இரண்டாவது அரையிறுதிப் போட்டி கொழும்பு பென்ஸ் மற்றும் சபையர் விளையாட்டுக் கழக அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அந்த வகையில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த பென்ஸ் அணியினரால் குறித்த 10 ஓவர்களுக்குள் 69 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. அதனையடுத்து களமிறங்கிய சபையர் விளையாட்டுக் கழகம் இரண்டு விக்கெட்டுகள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

அதனைத் தொடர்ந்து 20 ஓவர்கள் போட்டியாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நடப்பு சம்பியன் ஹேஷான் பிளெக்ஸ் அணி சிறப்பாக துடுப்பாடி 189 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதிக பட்ச ஓட்டங்களாக நிமேஷ் பெரேரா 59 ஓட்டங்களை பதிவு செய்த அதேவேளை, புத்திக பெரேரா பெறுமதி மிக்க 36 ஓட்டங்களை விளாசினார்.  சபாயர் விளையாட்டுக் கழகம் சார்பாக அஷான் அபேகோன் மற்றும் நுவன் குணவர்தன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அதனையடுத்து கடினமான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய சபாயர் விளையாட்டு கழகத்திற்கு  வெறும் 57 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. அந்த வகையில், ஹேஷான் பிளெக்ஸ் அணி 130 ஓட்டங்களால் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. அத்துடன் வெற்றிப் பரிசாக ருபாய் 300,000 மற்றும் போட்டித் தொடரின் கிண்ணத்தையும் கைப்பற்றியதோடு இவ்வருடம் தென்னாபிரிக்க நாட்டில் நடைபெறவுள்ள LSM உலகச் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குக்கொள்ளக் கூடிய வாய்ப்பினையும் பெற்றுள்ளது.

அரையிறுதிப் போட்டி  – 1

ஹேஷான் பிளெக்ஸ் A எதிர் ஸ்டபர்ட் மோட்டர்ஸ் தனியார் நிறுவனம்

ஹேஷான் பிளெக்ஸ் A – 86/3 (10) – சலித்த சமோத்  46, அசேல ஜயசிங்க 29*

ஸ்டபர்ட் மோட்டார்ஸ்  – 83/3 (10) – கல்ப பேஷான் 48, விக்கும் பீரிஸ் 29

முடிவு – ஹேஷான் பிளெக்ஸ்  3 ஓட்டங்களால் வெற்றி


அரையிறுதிப் போட்டி – 2

கொழும்பு பென்ஸ் எதிர் சபாயர் விளையாட்டு கழகம்

கொழும்பு பென்ஸ் – 69/5 (10) – நிமேஷ் பெர்னாண்டோ  21, வினோத் பெரேரா  20

சபாயர் விளையாட்டு கழகம் – 70/6 (9.2) – இஷான் அல்விஸ்  2/10

முடிவு – சபாயர் விளையாட்டு கழகம் 2 விக்கெட்டுகளால் வெற்றி


இறுதிப் போட்டி

ஹேஷான் பிளெக்ஸ் A எதிர் சபாயர் விளையாட்டு கழகம்

ஹேஷான் பிளெக்ஸ் A – 187/7 (20) – நிமேஷ் பெரேரா 59, புத்திக்க பிரசாத் 36, அஷான் அபேகோன் 2/25, நுவன் குணவர்தன 2/31

சபாயர் விளையாட்டு கழகம் – 57/8 (11) – நுவன் குணவர்தன 20, ரிஷித் உபமல்  2/06

முடிவு – ஹேஷான் பிளெக்ஸ் 130 ஓட்டங்களால் வெற்றி