ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை குழாமில் 22 பேர்

404

எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள 22 வீர வீராங்கனைகளைக் கொண்ட இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழாமில் உள்ளூர் தடகள போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 15 வீரர்களும் 7 வீராங்கனைகளும் உள்ளடங்குகின்றனர். இவர்கள், 16 தனிப்பட்ட தடகள போட்டிகளிலும் இரண்டு அஞ்சலோட்டப் போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளனர். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மகளிர் அணியினரும் அஞ்சலோட்டப் போட்டிகளில் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 4X100மீ மற்றும் 4X100மீ ஆடவர் குழு மட்டுமே அஞ்சலோட்டத்தில் பங்குபற்றவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.  

இம்முறை நடைபெறவுள்ள இந்த தடகள போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம் மற்றும் உயரம் பாய்தல் போன்ற போட்டிகளில் 4 அல்லது 5 பதக்கங்களை வெல்லுவற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளது. அத்துடன், நடைபெறவுள்ள ஆசிய தடகள அஞ்சலோட்டப் போட்டிகளில், உள்ளூர் போட்டிகளில் வெளிப்படுத்தியுள்ள திறமைகளின் அடிப்படையில் வீரர்கள் பதக்கம் வெல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.  

100 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் WK. ஹிமாஷ ஏஷான் மற்றும் வினோத் சுரன்ஜய சில்வா ஆகியோர் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்விருவரும் அண்மையில் நிறைவுற்ற தேசிய மட்ட 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் சிறந்த ஓட்ட நேரத்தினை பதிவு செய்திருந்தார்கள். இவர்களுடன் 4X100மீ அஞ்சல் ஓட்டப் போட்டிக்காக ALM அஷ்ரஃப் மற்றும் ஷெஹான் அம்பேபிடிய ஆகியோரும் அணியில் இணைந்துகொள்ள உள்ளனர்.

மகளிர் பிரிவில் ருமேஷிக்கா ரத்நாயக்க இம்முறை 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் தேசிய மட்ட போட்டிகளில் 11.60 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்திருந்தார். மேலும் 200 மீட்டர் போட்டியில் 23.85 என்ற வினாடிகளில் போட்டித் தூரத்தை நிறைவு செய்திருந்தார்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் பாலித்த தெரிவு

கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளில்  (SAG) தங்கப் பதக்கம் வென்ற இவர் இம்முறையும் தாய் நாட்டிற்கான பதக்கக் கனவுடன் உள்ளார்.

அதேநேரம், ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் பங்குபற்றிய இந்துனில் ஹேரத் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு தங்கப் பதக்கங்களை கைப்பற்றியிருந்தார். அந்த வகையில் இம்முறையும் அவர் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றியீட்டுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், மகளிர் 800 மீட்டர் போட்டிகளில் சாதனை படைத்த நிமாலி லியனாராச்சி மற்றும் காயந்திக்கா ஆகியோரும் இரண்டு பதக்கங்களை பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

ஈட்டி எறிதலில், ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியிருந்த சுமேத ரணசிங்கவின் சாதனையை முறியடித்த வருணன் தயாரத்ன, 80 மீட்டர் தூரத்தை தேசிய மட்ட போட்டிகளில் பதிவு செய்துள்ள அதேவேளை ஆசிய பிராந்திய மட்டத்தில் 6ஆவது இடத்தில் உள்ளார்.

தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் உயரம் பாய்தலின் பதக்க வெற்றியாளரான மஞ்சுல குமாரவும் இலங்கை குழாமில் இடம்பிடித்திருந்த நிலையில், அவருக்கு இறுதிக்கட்ட தகுதிகாண் சோதனைகளுக்கு உடல் நலக் குறைவால் பங்குபற்ற முடியாமல் இருந்தது.

அதேநேரம், ஒலிம்பிக் போட்டிகளிலும்  பங்குபற்றியுள்ள குமார, தேசிய மட்ட மற்றும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளிலும் 2.27 மீட்டர் உயரத்தை பதிவு செய்து முன்னிலையில் உள்ள நிலையில் இலங்கை சார்பாக பதக்கம் பெறும் மற்றொருவராக எதிர்பார்க்கப்படுகின்றது.  

இலங்கைக்காக சர்வதேச மட்டத்தில் கால் பதிக்கும் அனித்தா

முப்பாய்ச்சல் தகுதிகாண் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ள சஞ்சய ஜெயசிங்க மற்றும் விதுஷா லக்ஷானி ஆகியோர் ஆடவர் மற்றும் மகளிர் போட்டிகளில் வெள்ளிப்பதக்கங்களை கைப்பற்றுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் கோலூன்றிப் பாய்தல் தேசிய சாதனைக்கு சொந்தக்காரியான அனித்தா ஜகதீஸ்வரனுக்கு இத்தொடரில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. இத்தொடரில் குறைந்த பட்ச உயரமாகக் கருதப்படும் உயரத்தை அவர் இன்னும் தாண்டாத காரணத்தினாலேயே அவருக்கான வாய்ப்பு கிடைக்காமல் போயுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கைக் குழாம்

ஆடவர்  

  • WK. ஹிமாஷ ஏஷான் – 100 மீ., 4X100 மீ.
  • வினோத் சுரன்ஜய சில்வா – 100 மீ., 200 மீ., 4X100 மீ.
  • அஜித் பிரேமகுமார – 400 மீ, 4X400 மீ.
  • HM திலிப் ருவான் – 400 மீ, 4X100 மீ.
  • எச்.எம். இந்துனில் ஹேரத் – 800 மீ.  
  • மஞ்சுல குமார விஜேசேகர – உயரம் பாய்தல்
  • தனுக்க லியனபத்திரன – நீளம் பாய்தல்
  • சஞ்சய ஜயசிங்க – முப்பாய்ச்சல்   
  • வருண லக்ஷான் தயாரத்ன – ஈட்டி எறிதல்
  • ALM அஷ்ரஃப் – 4X100 மீ.
  • ஷெஹான் அம்பேபிடிய – 4X100 மீ.
  • எம். மொஹமட் சப்ரான் – 4X100 மீ.
  • RPAD பிரதீப் குமார – 4X400 மீ.
  • PMWG தனஞ்சய – 4X100 மீ.
  • HK கலிங்க குமாரகே – 4X400 மீ.

மகளிர்

  • ஆர்.எம். ருமேஷிகா ரத்னாயக்க – 100 மீ., 200 மீ.
  • பி.ஜி.என். மதுஷிகா – 400 மீ.
  • கயந்திகா துஷாரி அபேரத்ன – 800 மீ.
  • டபிள்யு.கே. நிமாலி லியனாராச்சி – 800 மீ.
  • UK நிலானி ரத்னாயக்க – 3000 மீ. ஸ்டீப் ஷேஸ்
  • HD விதுஷா லக்ஷாணி – முப்பாய்ச்சல்
  • எச்.எல்.என் திலானி லெகம்பே – ஈட்டி எறிதல்