கால்பந்தின் வாசனையை முற்றிலும் மறந்துள்ள கண்டி

583

ஒரு காலத்தில் திறமைமிக்க கால்பந்து வீரர்கள் பலரை உருவாக்கித் தந்த கண்டி நகரம், தற்போது கழக மட்ட பயிற்சிகளைக்கூட நடாத்த இயலாத நிலையில் போதிய வளங்களின்றி கால்பந்து வாசனையை முற்றிலும் இழந்துள்ள நகரமாக மாறியுள்ளது.

இலங்கையின் முன்னணி கால்பந்துத் தொடரான சம்பியன்ஸ் லீக் தொடரில் கண்டி நகரைச் சார்ந்த ஒரு அணியேனும் இல்லாத நிலையில், இந்த நிலைமை குறித்து ThePapare.com ஒரு அலசலை மேற்கொண்டது.

விளையாட்டு அமைச்சரின் ஆவேசத்தால் இலங்கை விளையாட்டில் மாற்றம் ஏற்படுமா?

கால்பந்து விளையாட்டிற்கு அத்தியவசியமான வளங்கள் யாவை என நாமனைவரும் அறிவோம். பந்து, காலணிகள், கோல் கம்பங்கள் – இவற்றைப் போன்றே மிக முக்கியமான மற்றுமொரு வளம் தான் மைதானம்.

சில வருடங்கள் பின்னோக்கிப் பார்த்தோமேயானால் கண்டி நகரை அண்டிய பகுதிகளில் ஏராளமான கால்பந்து மைதானங்களை காணக்கூடியதாக இருந்தன. கெட்டம்பே மைதானம், நித்தவளை மைதானம், ‘பொடி’ போகம்பர மைதானம், பொலிஸ் மைதானம் மட்டுமன்றி சகல வசதிகளையும் கொண்ட போகம்பர மைதானமும் அக்கால இளைஞர்களுக்கு பயிற்சிகளை மேற்கொள்ள எந்நேரத்திலும் இலவசமாக திறந்து விடப்பட்டிருந்தன.

எனினும் தற்காலத்தில் இம்மைதானங்கள் வேறு தேவைகளுக்காகவும், ஏனைய விளையாட்டுக்களுக்காக பிரத்தியேகமாகவும் பயன்படுத்தப்படுவதால் கண்டியை சார்ந்த இளைஞர்களுக்கு கால்பந்து விளையாட்டில் ஈடுபட உகந்த மைதானம் ஒன்று இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கண்டி நகரில் கால்பந்து விளையாட்டின் வீழ்ச்சிக்கு மிகமுக்கியமான காரணி ஒன்றாக இதனைக் குறிப்பிடலாம்.

ThePapare.com ஆகிய நாம் கண்டி நகரின் கால்பந்து வட்டாரத்தில் செல்வாக்கு மிக்க ஒருவரிடம் இந்த நிலைமை குறித்து வினவியிருந்தோம். அதற்கு அவர்,

“தற்காலத்தில் கண்டிப் பகுதியில் கால்பந்து விளையாட்டின் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மைதானங்களில் பற்றாக்குறையே இந்த நிலைமைக்கு அடிப்படை காரணியாகும். நித்தவளை மைதானம் தற்போது ரக்பி விளையாட்டிற்காக மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகின்றதுடன், அம்மைதானத்தின் குத்தகை நிறைவடைந்திருந்த நிலையில் அமைச்சர் ஒருவரின் தலையீட்டின் பின்னர் அது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கெட்டம்பே மற்றும் பொலிஸ் மைதானங்கள் பெரும்பாலும் கிரிக்கெட் விளையாட்டிற்காக மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன.” என்றார்.   

கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு 7 பதக்கங்கள்

மைதானங்கள் பற்றாக்குறை இளைஞர்களின் மீது ஏற்படுத்திய தாக்கம் பற்றி வினவிய போது, “கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது எனக் கூற முடியாது. எனினும் தெய்யன்னாவள மைதானம் மற்றும் அருப்பளை மைதானம் போன்ற சிறிய மைதானங்களில் மாத்திரமே பயிற்சிகளை மேற்கொள்ள முடிகின்றது. மஹிய்யாவை மைதானத்தில் காணப்பட்ட கோல் கம்பங்களும் அகற்றப்பட்டு தற்போது ஹொக்கி விளையாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.

கண்டி நகரமானது ஒரு காலத்தில் உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் பெயர் பதித்த சன்ரைஸ் விளையாட்டுக் கழகம், யோர்க் விளையாட்டுக் கழகம் மற்றும் முன்னர் சம்பியன்ஸ் லீக் தொடரில் பங்குபற்றிய அணியான ஹைலைன் விளையாட்டுக் கழகம் போன்ற பிரபல அணிகளை உருவாக்கித் தந்த பிரதேசமாகும். இவற்றில் சில அணிகள் தற்போது மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், சில அணிகள் எவ்வித தடயமும் இன்றி மறைந்து போயுள்ளன.

“நிதி ஒதுக்கீடு அற்ற காரணத்தினால் இங்குள்ள கழகங்களினால் மைதானங்களுக்கான வாடகை பணத்தை செலுத்துவதும் கடினமான விடயமாகவே உள்ளது. போகம்பர மைதானத்திற்கான ஒரு நாள் வாடகை 10,500  ரூபாவாக இருந்ததுடன், தற்போது அக்கட்டணம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இதன் பலனாக பயிற்சிகளுக்கு மட்டுமன்றி போட்டிகளை நடாத்தவும் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இக்காரணத்தினால் கண்டி கால்பந்து லீக் தொடரின் போட்டிகளும் தடைப்பட்டுள்ளன. எமது பிராந்தியத்தின் மிகச்சிறந்த அணியான கிறிஸ்டல் பெலஸ் அணி கம்பளை ஸாஹிரா கல்லூரி மைதானத்திலேயே பயிற்சிகளை மேற்கொள்கின்றது. அந்த மைதானமும் ஒழுங்கான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தரம் குறைந்ததாகவே உள்ளது.”

“கண்டியை சார்ந்த பெரும்பாலான வீரர்கள் முப்படைகளின் அணிகளுக்காக விளையாடும் நோக்குடன் எமது அணிகளிலிருந்து விலகிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. இல்லாவிட்டால் கொழும்பு நகரை சார்ந்த கழகங்களை நோக்கி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அக்கழகங்களின் நிதி நிலைமை சிறந்த மட்டத்தில் காணப்படுவதும் இதற்கு காரணமாகும். இவ்வாறு திறமைமிக்க வீரர்களை தொடர்ந்து இழந்து வருவதனால் எதிர்காலத்தில் பிற அணிகளுக்கு சவாலளிக்கக் கூடிய கழகங்கள் கண்டியில் முற்றிலும் இல்லாது போய்விடக் கூடும்.”

மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் கண்டியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த கால்பந்து மைதானம் பற்றியும் அவர் தன் கருத்தினை வெளியிட்டார்.

“FIFA அமைப்பின் உதவியுடன் பல நூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கால்பந்து மைதானம் ஒன்றை அமைப்பதாக எமக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது. தங்கொல்ல பகுதியில் கண்டி நகர சபையின் காணி ஒன்றில் இதனை நிர்மானிப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. கண்டி நகர சபையினால் 30 வருட காலத்திற்கு காணி குத்தகைக்கு விடப்படுவதாகவும், வருடத்தில் 6 மாத காலம் இலங்கை கால்பந்து சம்மேளனமும் அடுத்த 6 மாதங்களின் போது கண்டி நகர சபையும் மைதானத்தை நிர்வகிப்பதாக தீர்மானிக்கப்பட்டது. வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படாமலே கைவிடப்பட்டன.”

“இந்த நிலைமைக்கு கண்டி நகர சபையே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். மோசமான நிர்வாகத்தின் காரணமாக கால்பந்து விளையாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அடியுடன் அழித்துள்ளனர். தற்போது நாம் எழுப்பும் கேள்விகளையும் எமது கோரிக்கைகளையும் உதாசீனப்படுத்தி வருகின்றனர். இந்நிலை தொடருமானால் கண்டி நகரில் கால்பந்து விளையாட்டானது மீட்டெடுக்க முடியாத கட்டத்திற்கு தள்ளப்படலாம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு 7 பதக்கங்கள்

மலையகத்தை பொறுத்தமட்டில் ரக்பி விளையாட்டே அதிக வரவேற்பை பெற்றுள்ள விளையாட்டாகும். எனினும் நாட்டின் சகல பாகங்களிலும் பரவலாக விளையாடப்படும் ஒரே விளையாட்டான கால்பந்து, இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை எவ்விதத்திலும் ஏற்க கூடியது அல்ல. குறைந்தது தெற்காசிய மட்டத்திலாவது இலங்கை சாதிக்க வேண்டுமெனில் இவ்வாறான அடிமட்ட உட்கட்டமைப்பு வசதிகளற்ற பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பது மிக முக்கியமாகும்.

இதனை கவனத்திற் கொண்டு ThePapare.com ஆகிய நாம் கண்டி நகர சபையின் அதிகாரிகளை தொடர்பு கொள்ள பல தடவைகள் முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை. பின்னர் விளையாட்டு அமைச்சரான திரு. தயாசிறி ஜயசேகரவை தொடர்பு கொண்டு இவ்விடயம் பற்றி தெளிவுபடுத்திய பின்னர், அமைச்சரின் பணிப்புரைக்கேற்ப இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா திகனையில் உள்ள மைதானத்தில் போட்டிகளை நடாத்தும் ஏற்பாடுகளை மேற்கொண்டார். குறுகிய கால தீர்வாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், நீண்ட கால தீர்வொன்றை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

அதிகாரிகளின் கவனயீனத்தால் கால்பந்து விளையாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் பட்சத்தில், பொறுப்புமிக்க ஊடகம் என்ற வகையில் கண்காணிப்புடன் செயற்பட ThePapare.com ஆகிய நாமும் கடமைப்பட்டுள்ளோம்.

 மேலும் பல செய்திகளைப் படிக்க