கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு 7 பதக்கங்கள்

284

கடந்த வார இறுதியில் கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெற்ற கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குகொண்ட இலங்கை வீர வீராங்கனைகள் 4 தங்கம் மற்றும் 3 வெள்ளி என மொத்தமாக 7 பதக்கங்களை வென்றுள்ளனர்.

இலங்கைக்காக கிர்கிஸ்தானில் தங்கம் வென்ற அஷ்ரப் மற்றும் ஹாசினி

கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெற்றுவரும் கிர்கிஸ்தான் பகிரங்க..

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இந்தப் போட்டிகளின் முதல் நாள் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்களும், ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்திருந்தன. இந்நிலையில், இறுதி நாளான நேற்று மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களையும், இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் இலங்கை வீர வீராங்கனைகள் வெற்றி கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, முதல் நாள் போட்டி முடிவுகளின்படி 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் மொஹமட் அஷ்ரபும், பெண்களுக்கான முப்பாய்ச்சலில் ஹாசினி பிரபோதா பாலசூரியவும் தங்கம் வென்ற அதேவேளை, முப்பாய்ச்சல் வீரரான அதீத கருனாசிங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இந்நிலையில், இறுதி நாள் நிகழ்வுகளில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பங்கு கொண்ட கிரேஷான் தனன்ஞய 7.43 மீட்டர் தூரம் பாய்ந்து முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

அதேபோன்று, ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் போட்டி நிகழ்வில் பங்குகொண்ட அரவிந்த சமரநாயக்க தங்கம் வென்றார். இவர் தனது போட்டித் தூரத்தை 52.53 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.

ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட HMS குமார இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்ற அதேவேளை, பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட துலாஞ்சலி ரணசிங்கவும் வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்திக்கொண்டார். இவர் 1.80 மீட்டர் உயரம் பாய்ந்திருந்தார்.

குறித்த போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட 8 இலங்கை வீர வீராங்கனைகளில் 7 பேர் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வென்ற பதக்கங்கள்

வீரர் / வீராங்கனை போட்டி பதக்கம் திறமை
மொஹமட் அஷ்ரப் 100 மீட்டர் தங்கம் 51 செக்கன்
ஹாசினி பிரபோதா முப்பாய்ச்சல் தங்கம் 12.93 மீட்டர்
கிரேஷான் தனன்ஞய நீளம் பாய்தல் தங்கம் 7.43 மீட்டர்
அரவிந்த சமரநாயக்க 400 மீட்டர் தடைதாண்டல் தங்கம் 52.53 செக்கன்
அதீத கருனாசிங்க முப்பாய்ச்சல் வெள்ளி 12.93 மீட்டர்
HMS குமார 800 மீட்டர் வெள்ளி
துலாஞ்சலி ரணசிங்க உயரம் பாய்தல் வெள்ளி 1.80 மீட்டர்