இலங்கைக்காக கிர்கிஸ்தானில் தங்கம் வென்ற அஷ்ரப் மற்றும் ஹாசினி

1250

கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் இடம்பெற்றுவரும் கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற போட்டிகளில் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்களும், ஒரு வெல்லிப் பதக்கமும் கிடைத்துள்ளன.

கிர்கிஸ்தான் பகிரங்க மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை வீரர்கள் 8 பேர்

குறித்த போட்டிகளில் பங்கு கொள்வதற்காக இலங்கையில் இருந்து 8 வீர வீராங்கனைகள் பல பதக்க எதிர்பார்ப்புகளுடன் நேற்று முன்தினம் கிரிகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இரண்டு நாட்களைக் கொண்ட இந்த பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளின் முதல் நாளான இன்று இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கிழக்கின் வேக மனிதராகக் கருதப்படும் மொஹமட் அஷ்ரப் தங்கப் பதக்கம் வென்றார். அஷ்ரப் இந்தப் போட்டித் தூரத்தை 10.51 செக்கன்களில் ஓடி முடித்திருந்தார்.

இந்த வெற்றியின் பின்னர் கிரிகிஸ்தானில் இருந்து ThePapare.com இற்கு கருத்து தெரிவித்த அஷ்ரப் “இந்தப் பருவகாலத்தில் நான் பதிவு செய்த சிறந்த போட்டி நேரமாக இது உள்ளது. அதனை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த வெற்றியின் மூலம் நான் சிறந்த நிலையில் உள்ளேன் என்பதை உணர முடிகின்றது.

எனதும் எமது அணியினரதும் அடுத்த இலக்கு இந்தியாவில் இடம்பெறவுள்ள ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் 100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் சிறந்த நேரப் பதிவுடன் வெற்றி பெற்று உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கு கொள்வதாகும். அதற்காக முழுமையாக முயற்சிப்போம்” என்றார்.   

முப்பாய்ச்சலில் இலங்கையின் தேசிய சாதனையை நிலைநாட்டியுள்ள ஹாசினி பிரபோதா பாலசூரிய பெண்கள் பிரிவில் முதல் இடத்தைப் பெற்றதன்மூலம் இலங்கை அணிக்கு மற்றைய தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார்.

ஹாசினி பிரபோதா பாலசூரிய தனது வாய்ப்பின்போது 12.93 மீட்டர் பாய்ந்ததன் மூலமே முதல் இடத்தை தன்னகப்படுத்தினார்.

இலங்கை அணியில் அங்கம் வகித்த முப்பாய்ச்சல் வீரரான அதீத கருனாசிங்க 15.74 மீட்டர் தூரம் பாய்ந்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.