இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் சமரின் இந்த வருடத்திற்கான இறுதிப் போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை 4 விக்கெட்டுகளினால் வெற்றி கொண்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணி இம்முறையும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளது.
கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்த போட்டிகளின் நிறைவில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய யாழ் பல்கலைக்கழக அணியும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணியும் சம்பியனைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டியில் (சனிக்கிழமை) மோதின. இதில் யாழ் பல்கலைக்கழக அணியினர் 13 வருடங்களின் பின்னர் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் தரப்பினர் இதற்கு முன்னர் இடம்பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். எனினும், நடப்புச் சம்பியன்களான ஜயவர்தனபுர அணியினர் ஒரு போட்டியில் மாத்திரம் தோல்வியடைந்திருந்தனர்.
கொழும்பு பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த இறுதி ஆட்டத்தின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணியின் தலைவர் நிரோஷன் முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய யாழ் பல்கலைக்கழக அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கல்கோகன் ஒரு ஓட்டத்தைப் பெற்ற வேளையில் ஆட்டமிழந்து அணிக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார். எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த கபில்ராஜ், யோகேஸ்வரன் ஆகியோர் களத்தில் நின்று நிதானமாக ஆடினர்.
அணி 63 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை கபில்ராஜ் 59 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்களாக 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றார்.
அதேபோன்று, சிறப்பாக ஆடிய கடந்த வருடத்தில் அணியை தலைமை தாங்கிய வீரர் யோகேஸ்வரன் 2 ஓட்டங்களால் தனது அரைச் சதத்தை தவறவிட்டார். 89 பந்துகளை முகம்கொடுத்த அவர் 4 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்களாக 48 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை பெர்னாண்டோவின் பந்தில் அனுருந்தவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அதற்கு அடுத்து களமிறங்கிய துவாரகசீலனும் தன் பங்கிற்கு 69 பந்துகளை எதிர்கொண்டு பொறுமையாக ஆடி 34 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
இவர்களது விக்கெட்டுகளைத் தொடர்ந்து ஸ்ரீ ஜயவர்தனபுர அணியின் பந்து வீச்சாளர்கள் அபாரம் காட்ட, யாழ் தரப்பினரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வேகமாக வீழ்த்தப்பட்டன.
குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர் கருனாரத்னவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மத்திய வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு தமது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.
இதன் காரணமாக யாழ் பல்கலைக்கழக அணியினர் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றனர்.
ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்துகொண்டு சென்ற போதும், தனித்துப் போராடி அணித் தலைவர் குருகுலசூரிய ஆட்டமிழக்காமல் 13 ஓட்டங்களைப் பெற்று இறுதிவரை களத்தில் இருந்தார்.
பந்து வீச்சில் கருனாரத்ன 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், கலஹிடியாவ மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றனர்.
பின்னர் 172 என்ற ஓரளவு இலகுவான இலக்கை நோக்கி தமது இன்னிங்சை ஆரம்பித்த ஸ்ரீ ஜயவர்தனபுர அணியினருக்கும் ஆரம்பம் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அனுருந்த 4 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை LBW முறையில் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார்.
எனினும் மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான வெதிசிங்க பொறுப்பாக ஆடி, 46 பந்துகளில் 5 பெண்டரிகள் அடங்களாக 30 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை, யாழ் பல்கலைக்கழக அணியின் விக்கெட் காப்பாளர் யோகேஸ்வரன் மூலம் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த பண்டிதரத்ன (3), நிரோஷன (7) ஆகியோர் வேகமாக ஆட்டமிழந்து சென்றனர். எனினும் பந்து வீச்சில் பிரகாசித்திருந்த பெர்னாண்டோ நிதானமாக ஆடி 28 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை LBW முறையில் ஆட்டமிழந்து சென்றார்
இதன் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர தரப்பினர் 117 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டனர். எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த சந்தகெலும் மற்றும் லக்ஷித ஆகியோர் மேலதிக விக்கெட்டுகள் எதனையும் பறிகொடுக்காத நிலையில் போட்டியின் 5 ஓவர்கள் மீதமிருக்க வெற்றி இலக்கைத் தாண்டினர்.
சந்தகெலும் 35 ஓட்டங்களையும் லக்ஷித 18 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர். பந்து வீச்சில் ஜனதன் மற்றும் லோகதீஸ்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன் காரணமாக 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக அணி, தொடர்ந்து இரண்டாவது முறையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றது.
13 வருடங்களின் பின்னர் மீண்டும் ஒருமுறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய யாழ் பல்கலைக்கழக அணியினருக்கு இம்முறை இரண்டாவது இடம் கிடைத்தது.
போட்டியின் சுருக்கம்
யாழ் பல்கலைக்கழகம்: 171/9(50) – யோகேஸ்வரன் 48(89), கபில்ராஜ் 35(59), துவாரகசீலன் 34(69), கருனாரத்ன 22/4
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 172/6 – சந்தகெலும் 35*(49), வெதிசிங்க 30(46), பெர்னாண்டோ 28(48), ஜனதன் 25/2, லோகதீஸ்வர் 2/25
இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு கடந்து வந்த பாதை
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல். 267/9 எதிர் ருஹுனு பல். 121/10
ஸ்ரீ ஜயவர்தனபுர பல். 146 ஓட்டங்களால் வெற்றி
ஸ்ரீ ஜயவர்தனபுர பல் 209/10 எதிர் பேராதனைப் பல் 210/7
பேராதனைப் பல். 3 விக்கெட்டுகளால் வெற்றி
காலிறுதிப் போட்டி
சபரகமுவ பல். 89/10 எதிர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல். 90/1
ஸ்ரீ ஜயவர்தனபுர பல். 9 விக்கெட்டுகளால் வெற்றி
அரையிறுதிப் போட்டி
கொழும்பு பல் 177/10 எதிர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல். 178/4
ஸ்ரீ ஜயவர்தனபுர பல். 6 விக்கெட்டுகளால் வெற்றி
யாழ் பல்கலைக்கழகம்
யாழ் பல். (131/10) எதிர் வயம்ப பல் (80/10)
யாழ் பல். 51 ஓட்டங்களால் வெற்றி
கொழும்பு பல். (127/10) எதிர் யாழ் பல். (128/6)
யாழ் பல். 4 விக்கெட்டுகளால் வெற்றி
யாழ் பல். (238/7) எதிர் கிழக்கு பல் (112/10)
யாழ் பல். 126 ஓட்டங்களால் வெற்றி
காலிறுதிப் போட்டி
மெரட்டுவைப் பல். (124/7) எதிர் யாழ் பல். (127/5)
யாழ் பல். 5 விக்கெட்டுகளால் வெற்றி
அரையிறுதிப் போட்டி
ரஜரட்ட பல். (148/10) எதிர் யாழ் பல். (149/4)
யாழ் பல். 6 விக்கெட்டுகளால் வெற்றி