கண்டி, புனித அந்தோனியார் கல்லூரி அணிக்கு எதிராக கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற மைலோ ஜனாதிபதி கிண்ண றக்பி போட்டியின் மிகவும் பரபரப்பான காலிறுதி மோதலில் இறுதி 7 நிமிட இடைவெளியில் இரண்டு ட்ரைகளை வைத்த இஸிபதன கல்லூரி அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளது.
இப் போட்டியில் மிகவும் திறமையாக விளையாடிய புனித அந்தோனியார் அணி 69ஆவது நிமிடத்தில் 11 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் பந்தை தம் வசத்தில் வைத்துக்கொள்ளத் தவறிய அவ்வணி தவறுகளையும் தாராளமாக இழைத்தது. இதனை நன்கு பயன்படுத்திக்கொண்ட இஸிபதன அணி கடைசி 10 நிமிடங்களில் கடுமையாகப் போராடி வெற்றியை தன்பக்கம் சுண்டி இழுத்தது.
இரண்டாம் பாதி உத்வேகத்தால் புனித ஜோசப் அரையிறுதிக்கு தெரிவு
போட்டி ஆரம்பித்து 6 நிமிடங்கள் ஆனபோது இஸிபதன வீரர் நதீஷ சமிந்த இடதுபுறமாக வைத்த ட்ரையை மத்தியஸ்தர் ஆர். பெர்னாண்டோ நிராகரித்தார். பக்க மத்தியஸ்தர் கொடுத்த தகவலை அடுத்து இஸிபதனவின் ட்ரையை நிராகரித்த மத்தியஸ்தர், புனித அந்தோனியார் அணிக்கு பெனால்டி ஒன்றை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுடனும் விவேகத்துடனும் விளையாடிய புனித அந்தோனியார் அணி 16வது நிமிடத்தில் ரக் ஒன்றைப் பயன்படுத்தி எஸ். டபிள்யூ. ஜே. டபிள்யூ. தவ்லாகல மூலம் ட்ரை வைத்தது. அதற்கான மேலதிகப் புள்ளிகளை (கொன்வேர்ஷன்) சமுவெல் மதுவன்த பெறத் தவறினார். (05-00)
அதன் பின்னர் 21வது நிமிடத்தில் புனித அந்தோனியார் அணியின் பின்கள வீரர்களின் தவறைப் பயன்படுத்தி இஸிபதன வீரர் கவன் ஜயமான்ன ட்ரை வைத்து புள்ளிகள் நிலையை 5 – 5 என சமப்படுத்தினார். மேலும் 10 நிமிடங்கள் கடந்தபோது நதீஷ சமிந்த பந்துடன் 22 மீற்றர் தூரம் ஓடி கோல்காப்புகளின் கீழ் ட்ரை வைக்க அதற்கான மேலதிகப் புள்ளிகளை மனில்க ருபேறு பெற்றுக்கொடுத்தார். (05-12)
ஆனால், அதன் பின்னர் புனித அந்தோனியார் அணி உத்வேகத்துடன் விளையாடி 35வது நிமிடத்தில் எல்.டி.ஐ.டி. லியனகே மூலமும் தொடர்ந்து 41வது நிமிடத்தில் கே. பி. அமரக்கோன் மூலமும் ட்ரைகளை வைத்தது. ஆனால் 2 ட்ரைகளுக்குமான மேலதிகப் புள்ளிகளை ஜயசூரிய பெறத் தவறினார்.
முதல் பாதி: புனித அந்தோனியார் கல்லூரி 15 – 12 இஸிபதன கல்லூரி
இடைவேளையின் பின்னர் வித்தியாசமான வியூகங்களுடன் விளையாடிய புனித அந்தோனியார் அணி 43வது நிமிடத்தில் எம்.டி.எம். ரொட்றிகோ மூலம் ட்ரை வைத்தது. அதற்கான மேலதிகப் புள்ளிகளை சமுவெல் மதுவன்த இலகுவாக பெற்றக்கொடுத்தார். (22-12)
மேலும் 6 நிமிடங்கள் கழித்து சமுவெல் மதுவன்த 52 மீற்றர் தூரத்திலிருந்து மிகவும் அற்புதமான ட்ரொப் கோல் ஒன்றைப் போட்டுக்கொடுத்தார். (25-12)
அதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் தவறுகள் இழைத்ததால் அடுத்த 15 நிமிடங்களில் புள்ளிகள் பெறப்படவில்லை.
திரித்துவக் கல்லூரியை வென்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றது புனித பேதுரு கல்லூரி
.
ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற லைன் அவுட்டை நன்கு பயன்படுத்திக்கொண்ட இஸிபதன, நதீஷ சமிந்த மூலம் ட்ரை வைத்தது. (25-17)
5 நிமிடங்களின் பின்னர் புனித அந்தோனியார் அணிக்கு கிடைக்கப்பெற்ற 22 மீற்றர் பெனால்டியை மதுவன்த போட்டுக்கொடுத்தார். (28- 17)
ஆனால் அதன் பின்னர் பத்து நிமிடங்கள்தானே இருக்கின்றது என நினைத்து புனித அந்தோனியார் அணியினர் ஆசுவாசத்துடன் விளையாட ஆரம்பித்ததை நன்கு பயன்படுத்திக்கொண்ட இஸிபதன தரப்பு கடைசி பத்து நிமிடங்களில் வீறுகொண்டெழுந்தவாறு விளையாடியது.
இதன் பலனாக 70வது நிமிடத்தில் இஸிபதன அணி சார்பாக ரெண்டி சில்வா கடும் முயற்சி எடுத்துக்கொண்டு ட்ரை வைத்தார். அதற்னாக மேலதிகப் புள்ளிகளை மனில்க ருபேறு பொற்றுக்கொடுத்தார். (28-24)
போட்டி முடிவடைய 3 நிமிடங்கள் இருக்கையில் ஸ்க்ரம் ஒன்றின் மூலம் முன்னோக்கி நகர்ந்த இஸிபதன அணி சார்பாக ரமேஷ் சச்சித்த வெற்றி ட்ரையை வைத்தார்.
புனித அந்தோனியார் வீரர் சமுவெல் மதுவன்த கடைசி நிமிடத்தில் 50 மீற்றர் ட்ரொப் கோல் ஒன்றை முயற்சித்த போதிலும் அந்த முயற்சி கைகூடாமல் போக இஸிபதன பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
இஸிபதன அணி தனது புள்ளிகளை 5 ட்ரைகள், 2 கொன்வேர்ஷன்கள் வாயிலாகவும் புனித அந்தோனியார் அணி தனது புள்ளிகளை 4 ட்ரைகள், ஒரு கொன்வேர்ஷன், ஒரு பெனால்டி, ஒரு ட்ரொப் கோல் வாயிலாகவும் பெற்றன.
முழு நேரம்: புனித அந்தோனியார் கல்லூரி 29 – 28 இஸிபதன கல்லூரி