திரித்துவக் கல்லூரியை வென்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றது புனித பேதுரு கல்லூரி

238
St Peters College vs Trinity College

திரித்துவக் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கு இடையிலான மைலோ ஜனாதிபதிக் கிண்ணத்திற்கான காலிறுதிப் போட்டியில் புனித பேதுரு கல்லூரியானது 38 – 24 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

திரித்துவக் கல்லூரியானது ரோயல் கல்லூரியிடம் முன்னைய போட்டியில்  தோல்வியுற்ற நிலையில் போட்டியில் கலந்துகொண்டது. மறுமுனையில் லீக் போட்டிகளில் சிறந்த முறையில் திறமையை வெளிக்காட்டாத புனித பேதுரு கல்லூரி, இப்போட்டியில் திறமையை வெளிக்காட்டும் முயற்சியில் களம் இறங்கியது.

இரண்டாம் பாதி உத்வேகத்தால் புனித ஜோசப் அரையிறுதிக்கு தெரிவு

கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதலே புனித பேதுரு கல்லூரி ஆதிக்கம் செலுத்தியது. அதன்படி திரித்துவக் கல்லூரி வீரர் நவீன் ராஜரத்தினமின் பந்து பரிமாற்றலை நடுவில் பறித்த தியத் பெர்னாண்டோ தனியாக பந்தை எடுத்துச் சென்று கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தார். தீக்ஷண திசாநாயக்க கொன்வெர்சனை வெற்றிகரமாக உதைய புனித பேதுரு கல்லூரி முன்னிலை பெற்றது. (புனித பேதுரு கல்லூரி 07-00 திரித்துவக் கல்லூரி)

சளைக்காத திரித்துவக் கல்லூரியானது புனித பேதுரு கல்லூரியின்  எல்லைக்குள் நுழைந்து அழுத்தம் கொடுத்தது. அதன்பலனாக திரித்துவக் கல்லூரியின் பலம் மிக்க வோரான் வீரகோன் எதிரணி வீரர்களை தாண்டி சென்று ட்ரை வைத்து அசத்தினார். எனினும் ரசென் பண்டார கொன்வெர்சனை தவறவிட்டார். (புனித பேதுரு கல்லூரி 07-05 திரித்துவக் கல்லூரி)

தொடர்ந்து புனித பேதுரு கல்லூரியானது திரித்துவக் கல்லூரியின் கோட்டைக்குள் கிடைக்கப்பெற்ற பெனால்டியை துரிதமாக செயற்படுத்தியது. இதன் மூலம் தீக்ஷண தசநாயக புனித பேதுரு கல்லூரி சார்பாக ட்ரை வைத்தார். கொன்வெர்சனையும் வெற்றிகரமாக அவரே உதைத்தார். (புனித பேதுரு கல்லூரி 14-05 திரித்துவக் கல்லூரி)

இரண்டு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெறுகையில், மீண்டும் ஒரு முறை திரித்துவக் கல்லூரியானது ட்ரை வைத்தது. புனித பேதுரு கல்லூரியின் 5 மீட்டர் கோட்டில் ஸ்க்ரம் ஒன்றை பெற்றுக்கொண்ட திரித்துவக் கல்லூரியானது, ஷெனால் அபேவர்தன மூலமாக ட்ரை வைத்தது. இம்முறை பண்டார கொன்வெர்சனை தவறவிடவில்லை.(புனித பேதுரு கல்லூரி 14-12 திரித்துவக் கல்லூரி)

திரித்துவக் கல்லூரியானது தமது கோட்டைக்குள் பல தவறுகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. புனித பேதுரு கல்லூரியானது எதிரணியின் தவறுகளை சாதகமாகப் பயன்படுத்தி ட்ரை வைத்தது, அவ்வகையில் மீண்டும் ஒரு முறை மோசமான தடுப்பின் காரணமாக புனித பேதுரு கல்லூரிக்கு ட்ரை வைக்க திரித்துவக் கல்லூரி இடமளித்தது . இம்முறை ஜேசன் கருணாரத்ன ட்ரை வைத்தார். தீக்ஷண கொன்வெர்சனை சிறப்பாக உதைத்தார். (புனித பேதுரு கல்லூரி 21-12 திரித்துவக் கல்லூரி)

முதற் பாதி முடிவடைய முன்னர் திரித்துவக் கல்லூரியானது மேலும் இரண்டு ட்ரைகளை வைத்து முன்னிலை பெற்றது. தலைவர் நாதன் டானியல் மற்றும்  வோரான் வீரகோன் கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தனர். பண்டார இரண்டு கொன்வெர்சன்களில் ஒன்றை வெற்றிகரமாக உதைத்தார். (புனித பேதுரு கல்லூரி 21-24 திரித்துவக் கல்லூரி)

முதல் பாதி: புனித பேதுரு கல்லூரி 21- திரித்துவக் கல்லூரி 24

இரண்டாம் பாதி ஆரம்பத்தில் இருந்தே புனித பேதுரு கல்லூரி ஆதிக்கம் செலுத்தி வந்தது. மீண்டும் ஒரு முறை பந்தை சிறப்பாக பரிமாற்றம் செய்த புனித பேதுரு கல்லூரி, தியத் பெர்னாண்டோ மூலமாக கம்பத்தின் அடியில் ட்ரை வைத்தது. தீக்ஷண கொன்வெர்சனை வெற்றிகரமாக உதைக்க, மீண்டும் புனித பேதுரு கல்லூரி முன்னிலை பெற்றது. (புனித பேதுரு கல்லூரி 28-24 திரித்துவக் கல்லூரி)

லைன் அவுட் மூலம் பந்தை பெற்றுக்கொண்ட புனித பேதுரு கல்லூரி இன்னுமொரு ட்ரையைப் பெற்றது. லைன் அவுட்டில் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட புனித பேதுரு கல்லூரி வீரர் ட்ரை கோட்டை கடந்தார். தீக்ஷண கொன்வெர்சனை தவறவிட்டார். (புனித பேதுரு கல்லூரி 33-24 திரித்துவக் கல்லூரி)

திரித்துவக் கல்லூரியானது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த பொழுதும் சிறிய தவறுகளினால் புள்ளிகளைப் பெறத் தவறியது. இரண்டாம் பாதியில் அதிக நேரம் திரித்துவக் கல்லூரி கையில் பந்து இருந்த பொழுதும் மோசமான விளையாட்டினால் புள்ளிகளைப் பெறத் தவறியது. புனித பேதுரு கல்லூரிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்த பொழுதும் அது தவறவிடப்பட்டது. எனினும் புனித பேதுரு கல்லூரி ஜேசன் கருணாரத்ன மூலமாக ட்ரை வைத்து வெற்றியை உறுதி செய்தது. தீக்ஷண கொன்வெர்சனை தவறவிட்டார். (புனித பேதுரு கல்லூரி 38-24 திரித்துவக் கல்லூரி)

முழு நேரம்: புனித பேதுரு கல்லூரி  38 – 24  திரித்துவக் கல்லூரி

THEPAPARE.com இன் போட்டியின் சிறந்த வீரர்  – தீக்ஷண தசநாயாக (புனித பேதுரு கல்லூரி)