நியூசிலாந்து அணியின் சம்பியன்ஸ் கிண்ண கனவை தகர்த்த பங்களாதேஷ்

326

சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக குழு A இல் நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் சகிப் அல் ஹசன் மற்றும் மஹ்முதுல்லாவின் சாதனை மற்றும் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பினைத் தக்க வைத்துள்ளது.

வேல்ஸ் கார்டிபில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

நியூசிலாந்து அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மார்டின் கப்டில் மற்றும் லூக் ரோங்கி ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 46 ஓட்டங்களை பெற்று சிறந்த ஆரம்பத்தை நியூசிலாந்து அணிக்குப் பெற்றுக்கொடுத்தனர். பங்களாதேஷ் அணிக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இணைப்பாட்டம் தஸ்கின் அஹமத்தின் பந்து வீச்சில் முஸ்தபிசுர் ரஹ்மானிடம் பிடி கொடுத்து, அதிரடி துடுப்பாட்ட வீரர் லூக் ரோங்கி ஆட்டமிழக்க முடிவுக்கு வந்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெற்றியை அர்ப்பணித்த அஞ்செலோ மெதிவ்ஸ்

அதனை தொடர்ந்து சீரான இடைவெளிகளில் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சரிந்தாலும் கடந்த போட்டிகளைப் போன்று இப்போட்டியிலும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் அரைச்சதம் கடந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியிருந்தனர். சிறப்பாக துடுப்பாடிய அனுபவ துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் நியூசிலாந்து அணி சார்பாக 63 ஓட்டங்களை ஆகக்கூடிய ஓட்டங்களாகப் பதிவு செய்த அதேவேளை அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 57 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை துரதிஷ்டவசமாக ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்து சென்றார்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பங்களாதேஷ் அணியின் சிறந்த பந்து வீச்சினால் சொற்ப ஓட்டங்களுக்கு சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்தமையினால், குறித்த 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய மொசடெக் ஹொசைன் மூன்று ஓவர்கள் மட்டுமே பந்து வீசி 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் தஸ்கின் அஹமத் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனையடுத்து 266 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதலிரண்டு போட்டிகளிலும் ஒரு சதம் உள்ளடங்கலாக அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த தமிம் இக்பால் ஓட்டங்கள் எதுவும் பெறாமலே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அத்துடன், சௌம்யா சர்க்கார் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினர். அணியை சரிவிலிருந்து மீட்டெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முஷ்பிகுர் ரஹிம் சற்று நேரம் போராடிய போதும் அடம் மில்னேயின் பந்து வீச்சில் 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் காணப்பட்டது.

[rev_slider ct17-dsccricket]

அந்நிலையில் துடுப்பாடக் களமிறங்கிய சகிப் அல் ஹசன் மற்றும் மஹ்முதுல்லா ஆகியோர் இணைந்து நியூசிலாந்து அணியின் அதிரடியான பந்து வீச்சினை எதிர்கொண்ட அதேவேளை நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி மெதுவாக ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தனர்.

சிறப்பாக துடுப்பாடிய இவ்விருவரும் சதம் பெற்று பங்களாதேஷ் அணி சார்பாக 224 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்டனர். இந்த இணைப்பாட்டமானது பங்களாதேஷ் அணியால் ஒரு விக்கெட்டுக்குப் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவானது. எனினும், பங்களாதேஷ் அணியை வலுவான நிலைக்கு வழிநடத்திய சகிப் அல் ஹசன் 115 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 114 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ட்ரென்ட் போல்ட்டின் பந்துவீச்சில் நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்து சென்றார்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய மஹ்முதுல்லா 107 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 102 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு அணியை வெற்றிப்பாதைக்கு வழிநடத்தினார்.

இறுதியில் பங்களாதேஷ் அணி 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றியடைந்தது.

நியூசிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் டிம் சௌத்தி 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.       

ஏற்கனவே குழு A இல் இருந்து இங்கிலாந்து அணி அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள நிலையில், இன்று நடைபெறவுள்ள இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி குழு A இல் இருந்து அரையிறுதிக்கு செல்லும் இரண்டாவது அணியை (பங்களாதேஷ் அல்லது அவுஸ்திரேலியா) தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.

இதன் அடிப்படையில் இன்று நடைபெறவுள்ள இங்கிலாந்து அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெறுமாயின், அவுஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதிபெறும். அவுஸ்திரேலிய அணி தோல்வியடையும் பட்சத்தில் பங்களாதேஷ் அணி அரையிறுதிக்கு தகுதிபெறும்.

போட்டியின் சுருக்கம்

நியூசிலாந்து – 265/8 (50) – ரொஸ் டெய்லர் 63, கேன் வில்லியம்சன் 57, நீல் ப்ரூம் 36, மார்டீன் கப்டில் 33, ஜேம்ஸ் நீஷாம் 23, மொசடெக் ஹொசைன் 13/3, தஸ்கின் அஹமத் 43/2, முஸ்தபிசுர் ரஹ்மான் 52/1   

பங்களாதேஷ் – 268/5 (47.2) – சகிப் அல் ஹசன் 114, மஹ்முதுல்லா 102*, முஷ்பிகுர் ரஹிம் 14, டிம் சௌத்தி 45/3, ட்ரெண்ட் போல்ட் 48/1

முடிவு – பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி.