டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில், பல சாதனைகளைப் புரிந்து கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்த முத்தையா முரளிதரனுக்கு ஐ.சி.சி. இனால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கான ஹோல் ஒப் பேம் (hall of fame) எனப்படும் அதி உயரிய விருது வழங்கப்பட்டது.
நேற்றைய தினம் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியின் இடைவேளை நேரத்தின் போது இந்த விருது முரளிதரனுக்கு ஐ.சி.சி. இன் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்ஸனினால் வழங்கப்பட்டது.
குறித்த கௌரவ விருதானது, கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகள் படைத்த ஆர்தர் மோரிஸ், ஜோர்ஜ் லொஹ்மான் மற்றும் க்ரேன் ரோல்டன் ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கும் ஐ.சி.சி. மற்றும் கிரிக்கெட் ஹோல் ஒப் பேம் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் மத்தியில் இவ்விருது வழங்கப்பட்டது. உலகளவில் இந்த விருதைப்பெற்ற 83ஆவது வீரராகவும் அதேநேரம் இலங்கை சார்பாக இந்த விருதைப் பெற்ற முதல் கிரிக்கெட் வீரராகவும் வரலாற்றில் பதிவானார்.
இந்நிகழ்வின் போது பேசிய முத்தையா முரளிதரன், ”இந்த விருதைப் பெறுவது எனக்கு பெருமையும் மரியாதையும் கிடைத்த ஒரு தருணமாக கருதுகின்றேன். அத்துடன், முக்கியமாக ஐ.சி.சி கிரிக்கெட் விருதினை பெறுவதே கிரிக்கெட் வீரர்களின் கனவாக இருக்கின்றது. அந்த வகையில், புகழ்மிக்க இந்த சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின் போது இதனை பெற்றுக்கொள்வது மேலும் பெருமை சேர்க்கின்றது” என்று கூறினார்.
இந்த விருதை ஐ.சி.சி எனக்கு வழங்கியமைக்காக நன்றி கூறுகின்றேன். ஏனென்றால் இது வாழ்க்கை முழுவதும் மிகப்பெரிய கௌவரவத்தை எனக்கு வழங்கியுள்ளது.
இந்த விருது குறித்து பேசிய ஐ.சி.சி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சர்ட்ஸன், ”இந்த விருது முரளிதரனுடைய சாதனைகளைப்பற்றி எடுத்துக் கூறுகின்றன. அவருடைய சிறப்பான பந்து வீச்சு, வேகம் மற்றும் பந்தைக் கட்டுப்படுத்தும் விதம் சிறப்பாக அமைந்திருந்தது. அத்துடன் அவருடைய தூஸ்ரா பந்தின் அறிமுகத்தின் பின்னர் உலகிலுள்ள துடுப்பாட்ட வீரர்கள் எதிர்கொள்ள கடினமான பந்து வீச்சளராக மாறினார்” என்று தெரிவித்தார்.
சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமான ஒரு வீரராக இருந்தார். இலங்கை கிரிக்கெட்டை மட்டும் அவர் பிரபலப்படுத்தவில்லை, உலகெங்கிலுமுள்ள கிரிக்கட் ரசிகர்கள் அவருடைய பந்து வீச்சை பார்த்து ரசிக்க திரண்டிருந்தார்கள். அந்த வகையில் இந்த விருதை பெற்றுக்கொண்ட முத்தையா முரளிதரனுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று டேவிட் ரிச்சர்ட்ஸன் மேலும் தெரிவித்தார்
முரளிதரனின் கிரிக்கெட் சாதனைகள்
- கிரிக்கெட் வரலாற்றில் 133 டெஸ்ட் போட்டிகளில், 800 விக்கெட்டுகளை வீழ்த்திய வெற்றிகரமான ஒரே ஒரு வீரர் முரளிதரன்.
- மேலும் 67 இன்னிங்சுகளில் 5 இற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் 22 இன்னிங்சுகளில் 10 இற்கும் மேற்ப்பட்ட விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
- அத்துடன், 350 ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
- 1996ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியின் முக்கிய பந்து வீச்சாளராகவும் 2002ஆம் ஆண்டு உலக சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவுடன் கூட்டு சம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்ட அணியிலும் இடம் பிடித்திருந்தார்.