சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கைக்கு மற்றுமொரு இழப்பு

7458

இலங்கை அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் சாமர கபுகெதர சம்பியன்ஸ் கிண்ணத்தில் இந்திய அணியுடனான போட்டியினை முன்னிட்டு இன்றைய (ஜுன் 7) தினம் இடம்பெற்ற பயிற்சி  முகாமில் பங்கேற்றிருந்த வேளையில், முழங்கால் உபாதைக்கு உள்ளாகியுள்ளமையினால், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அவர் தொடர்ந்து விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.  

இந்திய அணியின் அச்சுறுத்தலுக்கு ஈடு கொடுக்குமா இலங்கை அணி?

சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக தற்பொழுது இங்கிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ThePapare.com இன் ஊடகவியலாளர் தமித் வீரசிங்க, இலங்கை அணி பயிற்சி பெரும் இடத்தில் இருந்து எமக்கு அளித்த தகவலுக்கு அமைய, குறித்த பயிற்சி முகாமின்போது, களத்தடுப்பு பயிற்சிகளை மேற்கொண்டிருந்த கபுகெதர மைதானத்தில் இருந்தவாறு தீடிரென கீழே விழுந்தார். உடனே, இலங்கை அணியின் உடற்பயிற்சியாளர் அஜந்த வத்தேகம மூலம் மைதானத்தில் வைத்து கபுகெதரவிற்கு உதவி வழங்கப்பட்டது.  

பின்னர் அவர், MRI ஸ்கேன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட நிர்ப்பந்திக்கப்பட்ட காரணத்தினால், இலங்கை அணி முகாமைத்துவக் குழு அவருக்குப் பதிலாக அதிரடி ஆரம்ப வீரர் தனுஷ்க குணத்திலக்கவினை அணியில் பிரதியீடு செய்ய .சி.சி இன் போட்டி ஏற்பாட்டு குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவரது உபாதை தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை அணி முகாமையாளர் அசங்க குருசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

கபுகெதரவின் உடற்தகுதி தொடர்பான முடிவு இன்று மாலை எமக்கு தெரியவரும். தற்போது .சி.சி இன் சிறப்பு வைத்தியர்கள் மூலம் அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். அதன் முடிவுகளின் அடிப்படையில் அவர் ஏனைய போட்டிகளுக்கு தகுதி பெறாதவிடத்து, நாங்கள் தனுஷ்க குணத்திலக்கவினை .சி.சி இடம் ஏனைய போட்டிகளுக்காக பரிந்துரை செய்யவுள்ளோம்என்று தெரிவித்தார்.

தொடரில் வீரர் ஒருவரை மற்ற வேண்டுமெனில், .சி.சி இன் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் அனுமதி அவசியமாகின்றது. எனவே, குணத்திலக்கவின் உள்ளடக்கத்திற்கு .சி.சி இன் அனுமதி அவசியமாகின்றது.

புகைப்படங்கள் – இலங்கை அணி இன்றைய பயிற்சிகளின்போது

இலங்கை அணிக்காக 19 ஒரு நாள் போட்டிகளில் ஆடியிருக்கும் குணத்திலக்க மிகச்சிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவராக காணப்படுகின்றார். ஆரம்ப வீரரான இவர் அணியில் இணைக்கப்படுமிடத்து குசல் பெரேரா மத்திய வரிசையிலையே நாளைய போட்டியில் ஆடக்கூடிய நிலை ஏற்படும்.

ஏற்கனவே, தொடர்ச்சியாக சிறந்த திறமையை வெளிப்படுத்தி வந்த உபுல் தரங்கவிற்கு போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால், அவரும் இந்தியாவுடனான போட்டியில் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் இன்றை பயிற்சிகள் மற்றும் கபுகெதர உபாதைக்குள்ளாகிய காணொளி