படுகாயமடைந்த சயன்ஸ் கல்லூரி வீரருக்கு புனித அந்தோனியார் கல்லூரியினால் நன்கொடை

222
Antonians hand over donations to Science player

பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டியில் கடந்த மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற ஆட்டத்தில் சயன்ஸ் கல்லூரி வீரர் சந்துஷ் அயேஷ்மந்த தனது அணியின் சக வீரரொருவருடன் மோதிக் கொண்டதனால் படுகாயத்திற்கு உள்ளானார். இந்நிலையில் அவ்வீரரின் சிகிச்சை மற்றும் கல்விச் செலவிற்காக புனித அந்தோனியார் கல்லூரி சார்பில் அக்கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆறு இலட்சம் ரூபாய் பணத்தை வழங்க உறுதியளித்திருந்த நிலையில், அத்தொகை குறித்த வீரரின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  

திரித்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று மன்னிப்புக் கோரிய வெஸ்லி கல்லூரி அதிபர்

புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் சயன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையில் குறித்த போட்டி இடம்பெற்ற வேளையில், 17 வயதான சந்துஷ் அயேஷ்மந்தவின் தலை சக வீரர் ஒருவரின் தலையுடன் மோதிக் கொண்டதனால் போட்டியின் போது அவர் உணர்விழந்த நிலையில் கீழே விழுந்தார். மூளையினுள் இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த காரணத்தினால் சில தினங்கள் கண்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது உடல்நலம் தேறி வருகின்றார்.

உபாதையின் தீவிரத்தன்மை மற்றும் குறித்த வீரரின் குடும்ப நிலை பற்றி அறிந்து கொண்ட புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர்கள், அவரது சிகிச்சைக்கு பண உதவி வழங்க முன்வந்தனர்.

அதன்படி வெறும் இரண்டு தினங்களில் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பழைய மாணவர்கள் இணைந்து ஆறு லட்சம் ரூபாய் பணத்தை திரட்ட முடிவெடுத்தனர். அத்துடன் சந்துஷ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலும் புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்டறிந்து பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தனர்.

இதன்படி அவர்களால் திரட்டப்பட்ட ஆறு லட்சம் ரூபாய்க்கான காசோலை, சயன்ஸ் கல்லூரி அதிபர் சுசந்த மெண்டிஸின் முன்னிலையில் சந்துஷின் தாயாரிடம் கையளிக்கப்பட்டது. மேலும் அவர் தனது பாடசாலைக் கல்வியை நிறைவு செய்யும் வரை தொடர்ந்து உதவியை வழங்கவும் உறுதியளிக்கப்பட்டது.

ThePapare.com உடனான கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சயன்ஸ் கல்லூரி அதிபர், புனித அந்தோனியார் கல்லூரியின் இந்த முன்மாதிரியான செய்கைக்கு புகழாரம் சூட்டினார்.

நான் 15 வருடங்களாக பாடசாலை ரக்பியுடன் இணைந்துள்ள போதிலும், இதுவே வேற்று கல்லூரி ஒன்றினால் எதிரணி வீரர் ஒருவரிற்கு இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும். எமது அணியின் பல வீரர்களை எதிரணிகள் தங்களது பாடசாலைகளுக்கு உட்சேர்த்துக் கொண்டதுடன், ரக்பி விளையாட்டிற்கு பாரிய அளவிலான பணத்தினை ஒதுக்கீடு செய்வதிலும் எமது கல்லூரி பல இன்னல்களை எதிர்நோக்கியிருந்தது. இதன் காரணமாக மாணவர்களின் பெற்றோரும் தங்களது பிள்ளைகளை ரக்பி விளையாட்டில் ஈடுபட அனுமதிப்பதில் தயக்கம் காட்டி வந்தனர். இவ்வாறான நிலையில் புனித அந்தோனியார் கல்லூரியின் இவ்வுதவி பெற்றோரின் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைக்கின்றேன்,” என தெரிவித்தார்.

73ஆவது ‘பிரெட்பி’ கிண்ணத்தை சுவீகரித்த ரோயல் கல்லூரி

கடந்த வருடத்தின் போதும் நிதிப் பற்றாக்குறை காரணமாக சயன்ஸ் கல்லூரி ஜனாதிபதிக் கிண்ண தொடரிலிருந்து பின்வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுசந்த மெண்டிஸ் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு தன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன், சயன்ஸ் கல்லூரியானது இந்த பெருந்தன்மையான உதவிக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வெற்றிகளை மாத்திரமே நோக்காகக் கொண்டு விளையாட்டு மனப்பான்மை மற்றும் நேர்மை மனப்பான்மை இன்றி பாடசாலைகள் போட்டிகளில் ஈடுபட்ட வருகின்ற நிலையில், புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர்களின் இந்த முன்னுதாரணமான செய்கை மிகவும் பாராட்டத்தக்கது.