சம்பியன்ஸ் கிண்ணத்தின் அடுத்த சுற்றில் இலங்கை அணியும் காணப்படுமா? என்கிற கேள்வி தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இத்தொடரில் நீடிக்க வேண்டுமெனில், நாளை இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள குழு B இற்கான தீர்மானம் மிக்க போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இலங்கை அணி உள்ளது.
இந்தியாவை எப்படி எதிர்கொள்வது : இலங்கைக்கு சங்கக்காரவின் அறிவுரை
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக..
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், குழு B இற்கான அணிகள் யாவும் தமக்குரிய ஆரம்பப் போட்டிகளை விளையாடி முடித்திருக்கின்ற நிலையில், அவற்றின் முடிவுகளின்படி புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணியே குழு B இல் முதலிடத்தில் நீடிக்கின்றது.
பாகிஸ்தான் அணிக்கு சம்பியன்ஸ் கிண்ண ஆரம்பப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியைப் பரிசளித்திருந்த இந்தியா, அதே வகையிலான ஆட்டத்தினை இலங்கை அணியுடனான போட்டியிலும் வெளிப்படுத்தும் எனில், இலங்கை அணி இத்தொடரிலிருந்து வெளியேற வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகும்.
தாம் விட்ட தவறுகள் மூலம் தென்னாபிரிக்க அணியுடனான போட்டியினை பறிகொடுத்த இலங்கை அணி, கடந்த போட்டிபோல் அல்லாது தவறுகளை சீர் செய்து முழுத் திறமையினையும் வெளிப்படுத்தினால் மாத்திரமே சவால் மிக்க இந்திய அணியினை தோற்கடிக்க முடியும்.
ஒரு நாள் தரவரிசையில், மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்திய அணியானது சம்பியன்ஸ் கிண்ணம் ஆரம்பிக்க சற்று முன்னர், ஒரு நாள் தரவரிசைப்பட்டியலில் ஏழாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்ட இலங்கை அணியுடன், இறுதியாக 2014ஆம் ஆண்டில் ஒரு நாள் தொடரொன்றினை விளையாடியிருந்தது. அத்தொடரில் இந்தியா 5-0 என இலங்கையை வைட் வொஷ் செய்து தொடரைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், சகல நாட்டு அணிகளும் பங்குகொள்ளும் ஐ.சி.சி இன் தொடர்களை எடுத்து பார்க்கின்ற போது, இவ்விரு அணிகளும் சம பலத்தினை வெளிக்காட்டிய பதிவுகள் இருப்பதனால், நடைபெறப்போகும் போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை உறுதியாகக் கூற முடியாது காணப்படுகின்றது.
இறுதியாக 2013ஆம் ஆண்டு இதே இங்கிலாந்து மண்ணில் இடம்பெற்றிருந்த சம்பியன்ஸ் கிண்ணத்தில், இலங்கை அணியை அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகு வெற்றியைப் பெற்றிருந்த இந்தியா அத்தொடரின் சம்பியன் ஆகியமையும் குறிப்பிடத்தக்கது.
[rev_slider ct17-dsccricket]
இலங்கை மற்றும் இந்திய அணிகளின் நிலவரங்கள்
இந்திய அணியைப் பொறுத்தமட்டில், மிகவும் வலிமை வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களை இம்முறை சம்பியன்ஸ் கிண்ணத்திற்காக தமது அணியில் உள்ளடக்கியிருக்கின்றது. ஒரு நாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி இலங்கை அணிக்கு சவால் தரும் வீரர்களில் முக்கியமான ஒருவராக காணப்படுகின்றார்.
புகைப்படங்கள் – லண்டனில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை வீரர்கள்
அதிக அச்சுறுத்தலான விராத் கோலி
கடந்த ஐ.பி.எல் தொடரில் கோலி பெரிதாக சோபிக்காது காணப்பட்டிருந்த போதும், சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் ஆரம்பத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து தனது சிறப்பாட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றார். சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணியுடனான பயிற்சிப் போட்டியில் அரைச் சதம் (52) ஒன்றினை பெற்றிருந்த கோலி, இந்திய அணியின் ஆரம்ப போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிராக வெறும் 68 பந்துகளில் 81 ஓட்டங்களினைப் பெற்று அணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அவரது ஆட்டம் இலங்கை அணிக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
அதேபோன்று, ரோஹித் சர்மா மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகிய வீரர்களும் தற்போது நல்ல ஆட்டத்தினை வெளிக்காண்பித்து வருவதனால், அவர்களும் இந்திய அணியின் துடுப்பாட்டத்தினை நாளைய போட்டியில் வலுப்படுத்தலாம்.
இந்திய அணியின் பந்து வீச்சினை நோக்குமிடத்து, அவ்வணி வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த நுட்பமான முறையில் வேகப்பந்து வீச்சாளர்களை உபயோகித்த இந்திய அணி அதில் வெற்றியையும் கண்டது.
இதில், குறிப்பாக சகல துறை வீரரான ஹர்திக் பாண்டியா, வலது கை வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆகியோர் இலங்கை அணிக்கும் நெருக்கடி தரக்கூடியவர்களாக காணப்படுகின்றனர். அதோடு, சுழல் வீரரான ரவிந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரில் ஒருவர் நாளை விளையாடுமிடத்து அவர்களும் இம்ரான் தாஹிரின் சுழலில் திணறிய இலங்கைக்கு அழுத்தம் தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் இந்நிய அணி
சிகர் தவான், ரோஹித் சர்மா, விராத் கோலி, யுவ்ராஜ் சிங், மஹேந்திர சிங் டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, புவ்னேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா
அதிகம் நம்பப்படும் அஞ்செலோ மெதிவ்ஸ்
இலங்கை அணியை எடுத்து நோக்கும் போது, அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தனது கெண்டைக்கால் உபாதைக்குப் பின்னர், மீண்டும் அணிக்குத் திரும்புகின்றார். கடந்த வருட ஒகஸ்ட் மாதத்தில் இறுதியாக ஒரு நாள் போட்டியொன்றில் விளையாடியிருக்கும் மெதிவ்ஸ் இந்திய அணிக்கெதிராக தனிப்பட்ட ரீதியில் நல்ல ஆட்டத்தினை கடந்த காலங்களில் வெளிக்காட்டியிருக்கும் வீரர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார்.
பூரண உடற்தகுதியுடன் இந்தியாவை எதிர்கொள்ள காத்திருக்கும் அஞ்செலோ மெதிவ்ஸ்
பாகிஸ்தான் அணியுடனான சமரில் இந்திய அணி இலகு வெற்றி உபுல்..
அவுஸ்திரேலிய அணியுடனான பயிற்சிப் போட்டியில், சதத்தினை வெறும் 5 ஓட்டங்களால் தவறவிட்டிருந்த மெதிவ்ஸ், இலங்கை அணி இறுதியாக இந்தியாவுடன் 2014ஆம் ஆண்டு விளையாடியிருந்த ஒரு நாள் தொடரில், அதிக ஓட்டங்கள் (339) குவித்த வீரராகவும் திகழ்கின்றார். அதோடு, கடந்த சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கெதிராக அரைச் சதம் விளாசிய ஓரேயொரு இலங்கை வீரர் மெதிவ்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. மெதிவ்சின் மீள்வருகை இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்டத்தினை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மந்தகதியில் ஓவர்கள் வீசிய குற்றச்சாட்டில் போட்டித்தடையை பெற்றிருக்கும் ஆரம்ப வீரர் உபுல் தரங்க, அடுத்த போட்டியில் இல்லாமல் போவது இலங்கை அணிக்கு பாரிய பின்னடைவாகும். தரங்கவிற்கு பதிலாக தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் பொறுப்பான ஆட்டத்தினை வெளிக்காண்பித்த குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்லவுடன் இணைந்து ஆரம்ப வீரராக களமிறங்குவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.
இலங்கை அணியின் பந்து வீச்சினை நோக்குமிடத்து, அது லசித் மாலிங்க, சுரங்க லக்மால் மற்றும் நுவான் பிரதீப் மற்றும் விசேட வகை சுழல் பந்து வீச்சாளர் லக்ஷன் சந்தகன் ஆகியோரில் தங்கியுள்ளது. மாலிங்க சம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் விக்கெட்டுக்கள் ஏதும் கைப்பற்றாது இருப்பினும் எதிரணியை கட்டுப்படுத்தும் படியான பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்தார். மிகவும் அனுபவமிக்க அவரின் ஆட்டத்தினை இந்திய அணியுடனான போட்டியில் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
வலது கை வேகப்பந்து வீச்சாளரான நுவான் பிரதீப் தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் முக்கியமான இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தது அவரது ஆட்டம் நல்ல நிலையில் இருப்பதனை வெளிப்படுத்துகின்றது. மேலும், கடந்த போட்டியில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களை வாரி வழங்கிய சுழல் பந்து வீச்சாளர் சீக்குகே பிரசன்னவிற்கு பதிலாக லக்ஷன் சந்தகனிற்கு நாளைய போட்டியில் வாய்ப்பு கொடுப்பதன் மூலம் சிறப்பான ஆட்டம் ஒன்றினையும் எதிர்பார்க்க முடியும்.
எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி
நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அஞ்சலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன, திசர பெரேரா, லக்ஷன் சந்தகன், சுரங்க லக்மால், லசித் மாலிங்க, நுவான் பிரதீப்
எவ்வாறாயினும், சம்பியன்ஸ் கிண்ணத்தினை பொறுத்தவரை எந்த அணி போட்டி நாளில் குறைவான தவறுகளை விடுகின்றதோ, அவ்வணிக்கே போட்டி சாதகமாக அமைய வாய்ப்பு அதிமாக காணப்படுகின்றது. அந்த வகையில், அனுபவம் குறைந்த இளம் வீரர்களுடன் காணப்படும் இலங்கை அணி நாளைய போட்டியில் சிறப்பாக செயற்பட்டு கிண்ணம் வெல்ல வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
>> கால்பந்து செய்திகளுக்கு <<