மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விறுவிறுப்பான சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்களின் அவாவை பூர்த்தி செய்யும் நோக்கில் சகல அணிகளும் பல்வேறுப்பட்ட வியூகங்களுடன் கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கில் களம் காணவுள்ளன.
அந்த வகையில் பி குழுவில் இடம்பிடித்திருக்கும் இலங்கை அணி, சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினாலும் குழுமட்டப் போட்டிகளுடன் வெளியேறிவிடும் என்று பல்வேறுப்பட்ட கிரிக்கெட் நிபுணர்களினால் தெரிவிக்கப்பட்டு வந்தது. அண்மைய காலங்களில் அணி வெளிப்படுத்திய திறமைகளின் அடிப்படையில் இந்த எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், இதுவரை நடைபெற்றுள்ள பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணி தோல்வியை தழுவியிருந்தாலும் குறித்த போட்டிகளில் 300க்கும் அதிகமான ஓட்டங்களை குவித்திருந்தது.
சம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் இலங்கை அணி மெதிவ்சை இழக்கும் நிலை
இலங்கை அணியினர் ஐசிசியினால் கடந்த காலங்களில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த முறையில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். 2007, 2009, 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் உலக T-20 தொடர்களில் எதிரணிகளுடன் கடுமையாகப் போராடிய நிலையில் இறுதியாக, 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற T-20 இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்திருந்தது.
சம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கையின் வரலாறு
2002ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் மழை குறுகீட்டின் காரணமாக தொடரின் சம்பியன் கிண்ணத்தை இந்திய அணியுடன் பகிர்ந்து கொண்டது இலங்கை அணி. எனினும் இலங்கை 2004, 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடர்களிலிருந்து குழு மட்டப் போட்டிகளுடன் வெளியேறியிருந்தது.
இறுதியாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரில் வலிமை மிக்க அவுஸ்திரேலியா மற்றும் போட்டி இடம்பெற்ற இங்கிலாந்து அணிகளையும் வெற்றியீட்டி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. எனினும் அரையிறுதிப் போட்டியில் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிய இந்திய அணியிடம் தோல்வியுற்றது.
இலங்கை அணியின் பந்து வீச்சு
பந்து வீச்சை பொறுத்தவரை கடந்த ஸ்கொட்லாந்து, அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கெதிரான நான்கு பயிற்சிப் போட்டிகளில் இலங்கை அணி சராசரியாக 45.4 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட் என்ற வீதத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. இவ்வணி மொத்தமாக 1,135 ஓட்டங்களை வழங்கியுள்ள அதேநேரம் 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது. குறித்த போட்டிகளின்போது இலங்கை அணி தமது பந்து வீச்சாளர்களை பரிச்சார்த்தமாக முயற்சித்து பார்த்தது.
2015ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளுக்கு லசித் மாலிங்கவின் மீள்வருகை இலங்கை அணியின் பந்து வீச்சை பலப்படுத்தியிருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அந்த வகையில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் எட்டு ஓவர்கள் பந்து வீசி வெறும் 32 ஓட்டங்களை மட்டும் வழங்கி தனது அனுபவம் மற்றும் உடல் தகுதியை அவர் வெளிப்படுத்தியிருந்தார். மேலும் தனது நான்காவது சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்குபற்றும் லசித் மாலிங்க அனுபவம் மிக்க நுவன் குலசேகரவுடன் இணைந்து பந்து வீச்சை பலப்படுத்தவுள்ளார்.
ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் – ஒரு கண்ணோட்டம்
2015ஆம் ஆண்டு முதல் இலங்கை அணி சார்பில் ஒருநாள் போட்டிகளில் கூடிய விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள சுரங்க லக்மால், இம்முறை எவ்வாறு பந்து வீச்சினை மேற்கொள்வார் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரம், இளம் பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசியிருந்தார். அந்த வகையில் போட்டியின் இடை ஓவர்களை அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் இணைந்து பலப்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
எனினும் மீண்டும் காயத்திற்கு உள்ளாகியுள்ள மெதிவ்ஸ் தென்னாபிரிக்காவுடனான முதலாவது போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. அவர் அணியில் இணைய வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
சண்டகன் மற்றும் சீகுகே பிரசன்ன போன்ற சகலதுறை ஆட்டக்காரர்களை அணிக்குள் உள்ளவாங்க முன்னர், இரண்டு தடவைகள் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை கிரிக்கெட் தரப்பினர் உள்ளனர். முக்கியமாக பலமான காற்று மற்றும் குளிர் போன்ற நிலைமைகளைக் கருத்தில்கொள்ள வேண்டும். எனினும், எதிரணிக்கு இவர்கள் இருவரும் அச்சுறுத்தல் விடுக்கக்கூடியவர்களே.
துடுப்பாட்ட பலம் மற்றும் பலவீனம்
அண்மைய காலமாக இருந்து வரும், நிலையில்லாத துடுப்பாட்டம் காரணமாக அனுபவம்மிக்க அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமல் மற்றும் உபுல் தரங்க ஆகியோர்மேல் அதிக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அந்த வகையில், முதன் முதலாக சர்வதேச கிரிக்கெட் தொடர் ஒன்றில் பங்குபற்றும் குசல் மென்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல போன்ற இளம் வீரர்களுடன் இணைந்து அதிரடி துடுப்பாட்டதினை தொடர் முழுவதும் வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் சிரேஷ்ட வீரர்கள் உள்ளனர்.
கடந்த போட்டிகளின்போது சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த உபுல் தரங்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர், தம்மை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக நிலைப்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து குசல் மென்டிஸ், தினேஷ் சந்திமல் மற்றும் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
அதிரடி வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சாமர கபுகெதர ஆகியோரின் பங்களிப்பும் அணியின் வெற்றிப்பாதைக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அசேல குணரத்ன கடந்த அவுஸ்திரேலிய T-20 போட்டிகளின்போது அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வெற்றி கொள்வதற்கு பங்களிப்பு செய்திருந்தமை யாவரும் அறிந்ததே.
அதேநேரம், இறுதி 11 பேர் கொண்ட அணிக்கு சீகுகே பிரசன்ன மற்றும் திசர பெரேரா ஆகியோர் தெரிவாகும் பட்சத்தில் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் முக்கிய வீரர்களாக அவர்கள் கணிக்கப்படுவர்.
சம்பியன்ஸ் கிண்ணம் குறித்த வீடியோக்களைப் பார்வையிட
களத் தடுப்பு
கடந்த காலங்களில் சிறந்த களத்தடுப்பு அணியாக இலங்கை அணி கணிக்கப்பட்டிருந்தது. எனினும், அண்மைய காலங்களில் இலங்கை அணியின் களத்தடுப்பு தரம் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டது. எவ்வாறெனினும் தலைமை பயிற்றுவிப்பாளர் கிராம் போர்ட் மற்றும் அணி மேலாளர் அசங்க குருசிங்க ஆகியோர் இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெறவுள்ள போட்டிகளின்போது சிறந்த களத் தடுப்பை இலங்கை அணி வெளிப்படுத்தும் என உறுதி கூறியுள்ள அதேநேரம், சிறந்த களத்தடுப்பு வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக
இம்முறை சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணி மீதான எதிர்பார்ப்புகள் குறைந்திருந்தாலும், இலங்கை அணி ஆக்ரோஷ ஆட்டத்தினை வெளிப்படுத்தி எதிரணிகளை வெற்றிக்கொள்ளும் என்பது இலங்கை கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். வலுவற்ற அணியாக கருதப்பட்டாலும் இலங்கை அணியானது எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் மற்றும் சவால் விடுக்கக்கூடிய அணியாக திகழ்கின்றது என்பதில் ஐயமில்லை
இலங்கைத் தரப்பின் கருத்துகள்
”இந்த போட்டித் தொடரில் வலிமைமிக்க தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணியுடன் வெற்றி பெரும் பட்சத்தில், பாகிஸ்தான் அணியை இலகுவாக வெற்றியீட்டி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதற்கு பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு ஆகியவற்றில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட வேண்டும்.
இம்முறை நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் பாரிய சவால்கள் கொண்ட மாபெரும் தொடராகும். அண்மைய போட்டிகளில் இலங்கை அணி வெளிப்படுத்திய பெறுபேறுகளின் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். எனினும் எமது வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், தமது திறமைகளை மேம்படுத்த கடுமையான உழைப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு போட்டியிலும் முன்னேற்றம் கண்டு வரும் எமது அணி, நிச்சயமாக எதிர்வரும் போட்டிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும் வலிமை மிக்க அணிகளுக்கெதிரான போட்டிகளின்போது இது பாரிய சவாலாகும். என்றாலும் சவால்களை எதிர்கொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்று இலங்கை அணியின் தலைமப் பயிற்சியாளர் கிராம் போர்ட் தெரிவித்தார்.
ஒரு நாள் போட்டிகளில் மற்றுமொரு சாதனையை நிலைநாட்டிய ஹசிம் அம்லா
”இங்கிலாந்து களங்களில் நாம் சிறப்பாக விளையாடியுள்ளோம். அத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டிலும் சிறப்பாக செயல்பட்டிருந்தோம். அனுபவமற்ற மற்றும் இளம் வீரர்களை கொண்டிருந்தாலும் எங்களில் சிலர் இங்கிலாந்து களங்களில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். அந்த வகையில், அணியில் யாரும் போட்டியின் நிலைமையை மாற்றியமைக்கலாம். எங்களிடம் திறமை உள்ளது. அந்த வகையில் எதிர்வரும் போட்டிகளில் எமது திறமைகளை வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்” என்று அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்தார்.
இலங்கை அணிக் குழாம்
அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித் தலைவர்), உபுல் தரங்க (துணைத் தலைவர்), நிரோஷன் டிக்வெல்ல, தினேஷ் சந்திமால், லசித் மாலிங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, அசேல குணரத்ன, சாமர கப்புகெதர, சுரங்க லக்மால், நுவன் குலசேகர, திஸர பெரேரா, சிக்குகே பிரசன்ன, லக்ஷான் சண்டகன், நுவான் பிரதீப்,
அசங்க குருசிங்க – அணி மேலாளர்
ரஞ்சித் பெர்னாண்டோ – போக்குவரத்து மேலாளர்
கிரஹாம் ஃபோர்ட் – தலைமைப் பயிற்சியாளர்
அலன் டொனால்ட் – ஆலோசகர், வேகப் பந்து வீச்சு பயிற்சியாளர்
நிக் போதஸ் – களத்தடுப்பு பயிற்சியாளர்
நிக் லீ – பயிற்சியாளர்
அஜந்தா வேதகம – மருத்துவர்,
ஸ்ரீராம் சோமாயஜுல – ஆய்வாளர்
குழுநிலை போட்டி அட்டவணை
ஜூன் 3 – இலங்கை எதிர் தென்னாபிரிக்கா – கென்னிங்டன் ஓவல், லண்டன்
ஜூன் 8 – இலங்கை எதிர் இந்தியா – கென்னிங்டன் ஓவல், லண்டன்
ஜூன் 12 – இலங்கை எதிர் பாகிஸ்தான் – சோபியா கார்டன்ஸ், கார்டிஃப்