சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம் மற்றும் ஆரையம்பதி ஆர்.கே.எம் வித்தியாலயம் ஆகியவற்றின் கிரிக்கெட் அணிகளிற்கு இடையில் முதற்தடவையாக நடைபெற்று முடிந்த “வெளி சிங்கங்களின் சமர்” என்னும் வருடாந்த கிரிக்கெட் தொடரில், 3 விக்கெட்டுக்களால் எதிரணியை வீழ்த்திய ஆரையம்பதி ஆர்.கே.எம்  வித்தியாலய அணி சம்பியனாக முடிசூடியது.

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் கிரிக்கெட்டினை விருத்தி செய்யும் நோக்கோடு, இலங்கை கிரிக்கெட் வாரியத்தினாலும், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சபையினாலும் இவ்வருடாந்த சமர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சம்பிரதாயமான முறையில் இடம்பெறவுள்ள “பாடும் மீன்களின் சமர்”

கிழக்கிலங்கையின் புகழ் பூத்த பாடசாலைகளாகக் காணப்படும் மட்டு நகரின்..

மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியினை இலங்கை தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவர் ஹஸான் திலகரத்ன மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் மகளிர் பிரிவிற்கு தலைமை அதிகாரியாக செயற்படும் அப்சரி திலகரத்ன ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்திருந்தனர்.

டேப் பந்து (Tape Ball) மூலம் அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக இடம்பெற்ற இச்சமரில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட ஆரையம்பதி ஆர்.கே.எம் வித்தியாலயம், எதிரணியை முதலில் துடுப்பாட பணித்திருந்தது.  

ஒரு மெதுவான ஆரம்பத்தினை காட்டியிருந்த சந்திவெளி கல்லூரி அணியானது, எதிரணி மூலம் வழங்கப்பட்டிருந்த உதிரிகள் மூலம் கிடைக்கப்பெற்ற அதிக ஓட்டங்கள் காரணமாக 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.  

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக அதிகபட்சமாக இந்துஜா ஆட்டமிழக்காமல் நின்று 16 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்ட அதேவேளையில், ஆரையம்பதி ஆர்.கே.எம் வித்தியாலயம் சார்பாக  நேமிக்கா,  உஷானி,  டிலோஜினி மற்றும் தட்சாயினி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றிக்கொண்டனர்.  

இதனையடுத்து, சற்று சவலான வெற்றியிலக்கினை பிடிப்பதற்கு பதிலுக்கு ஆடிய ஆரையம்பதி மங்கைகள், சந்திவெளி மாணவிகளின் பந்து வீச்சினை எதிர்கொள்வதில் தடுமாற்றத்தினை காண்பித்திருந்தனர்.

எனினும், ஆரையம்பதி வீராங்கனை கிஷானியின் போராட்டத்தினால், 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்த ஆர்.கே.எம் கல்லூரி அணி 150 ஓட்டங்களினைப் பெற்று வெற்றியிலக்கினை அடைந்தது.

சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள சவால்கள்

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி..

துடுப்பாட்டத்தில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த கிஷானி 29 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டதுடன், சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலய பந்து வீச்சில் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்த விஜித்திரா இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம் – 146/4(20) இந்துஜா 16(29)*, நேமிக்கா 24/1(4)

ஆரையம்பதி ஆர்.கே.எம் வித்தியாலயம் – 150/7(19.2) கிஷானி 29(53)*, பிரிதிக்கா 18(13), விஜித்திரா 19/2(4), நந்தரூபா 28/1(4)

போட்டி முடிவு – ஆரையம்பதி ஆர்.கே.எம் வித்தியாலய அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி

முதற்தடவையாக இடம்பெற்ற இச்சமர்  தொடர்பாக ThePapare.com இடம் கருத்து தெரிவித்திருந்த அப்சரி திலகரத்ன,

இவ்வாறானதொரு மாபெரும் சமரினை நாட்டின் இப்பகுதியில் நடாத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இது போன்ற போட்டிகள் மகளிர் பாடசாலைகளிற்கு மத்தியில் கிரிக்கெட்டினை விருத்தி செய்ய உதவும் காரணிகளில் ஒன்றாக உள்ளது. வெளிப்பிரதேச பாடசாலைகளில் இப்படியான போட்டிகளை நடாத்துவது அவர்களது திறமையினை வெளிக்கொண்டுவர ஒரு சந்தர்ப்பமாகவும் அமைந்துவிடுகின்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.

விருதுகள்

சிறந்த களத்தடுப்பு வீராங்கனை – டிலோஜினி (ஆர்.கே.எம் வித்தியாலயம்)
சிறந்த பந்து வீச்சு வீராங்கனை – விஜித்திரா (சித்தி விநாயகர் வித்தியாலயம்)
சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை – பிரித்திக்கா (ஆர்.கே.எம் வித்தியாலயம்)
போட்டியின் ஆட்ட நாயகி – கிஷானி (ஆர்.கே.எம் வித்தியாலயம்)