எம்மை எந்த அணியும் தொடரிலிருந்து வெளியேற்றலாம் : மாலிங்க

6696
Lasith Malinga

சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ICC), பலத்த எதிர்பார்ப்புகளுடன் இங்கிலாந்தில் ஜூன் 1 ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐ.சி.சி சம்பியன் கிண்ணத்தில் பங்குகொள்ளும் 8  நாடுகளினதும்  வீரர்கள் குழாத்தினை  நேற்று (10) ஊர்ஜிதம் செய்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் மையம் பல்லேகலயில் ஆரம்பம்

இத்தொடரில் விளையாட ஒவ்வொரு நாடுகளிலும், ஓய்விலிருந்த சில வீரர்கள் அணிக்கு திரும்பி இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு எடுத்துக் காட்டாக, தனது ஆறாவது வெற்றிகரமான சம்பியன் கிண்ணத் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணியின் சொஹைப் மலிக் தேர்வு செய்யப்பட்டிருப்பதை குறிப்பிட முடியும்.

இதுவரையில், ஏனைய எட்டு வீரர்கள் மாத்திரமே சம்பியன் கிண்ணத் தொடரில் ஆறு தடவைகள் வரையில் பங்கேற்றுள்ளனர். ரிக்கி பொன்டிங் (அவுஸ்திரேலியா), ராஹூல் ட்ராவிட் (இந்தியா), டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து), மார்க் பவுச்சர் மற்றும் ஜெக் கல்லிஸ் (தென்னாபிரிக்கா), சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார (இலங்கை) ஆகியவர்களே அந்த வீரர்களாவர்.

சொஹைப் மலிக் போன்று, இந்திய அணியின் யுவராஜ் சிங்கும் கிட்டத்தட்ட 11 வருடங்களின் பின்னர் இத்தொடரில் பங்கேற்கின்றார். 2002ஆம் ஆண்டு நடைபெற்றிருந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் வரை யுவராஜ் தொடராக பங்கேற்றிருந்தார். அதற்கு பின்னைய வருடங்களில் இடம்பெற்ற தொடர்களில் விளையாடும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்திருக்கவில்லை.

அவுஸ்திரேலிய அணியின் தலைவரான ஸ்டீவ் ஸ்மித்திற்கு நடைபெறப்போகும் தொடர் கன்னி சம்பியன்ஸ் கிண்ணமாக அமையவுள்ளது. ஸ்மித்தோடு சேர்த்து இறுதியாக 2013இல் இடம்பெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடியிருந்த கிளேன் மெக்ஸ்வெல், மிச்செல் ஸ்டார்க், மெத்திவ் வேட் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோரும் அவுஸ்திரேலிய குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இத்தொடர் மூலமாக மெக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் 2000 ஓட்டங்களினையும் (43 ஓட்டங்களே குறைவாக இருப்பதால்) வோர்னர் 4000 ஓட்டங்களினையும் (54 ஓட்டங்களே குறைவாக இருப்பதால்) எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு .சி.சி உலகக் கிண்ணத்தில் காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்த பங்களாதேஷ் அணியில், 2006ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இடம்பிடித்திருந்த மஷ்ரபி மொர்தஸா மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். இவர்கள் இருவரும் இம்முறைக்கான தொடரிலும் காணப்படுகின்றனர்.

பங்களாதேஷ் அணியினை மொர்தஸா தலைமை தாங்குவதோடு, சகலதுறை ஆட்டக்காரர்கள் வரிசையில் உலகில் முதல் இடத்தினைப் பெற்றிருக்கும் வீரர் என்கிற பெருமையோடு சகீப் அல் ஹஸன் இத்தொடரில் ஆடவிருக்கின்றார்.

இதுவரை இரண்டு தடவைகள் சம்பியன்ஸ் கிண்ணத்தினை நடாத்திய (2004 & 2013) நாடாக காணப்பட்டிருக்கும் இங்கிலாந்து அணியில், கடந்த சம்பியன் கிண்ணத் தொடரில் ஆடியிருந்த வீரர்களான ஜொன்னி பேயிர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், இயோன் மோர்கன், ஜோ ரூட் மற்றும் கிரிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்த வருடத்திற்கான தொடரிலும் இடம் பிடித்திருக்கின்றனர்.

லங்கஷைர் அணிக்காக ஒப்பந்தமாகும் மஹேல ஜயவர்தன

இத்தொடரின், நடப்புச் சம்பியனாக காணப்படும் இந்திய அணியில் கடந்த தொடரில் விளையாடியிருந்த எட்டு வீரர்கள் நீடிக்கின்றனர். சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான விராட் கோலி .சி.சி நடாத்தும் பெரிய தொடர் ஒன்றில் இந்திய அணியினை முதற்தடவையாக தலைமை தாங்குகின்றார். இந்திய அணியானது ரவிச்சந்திரன் அஸ்வின், சிக்கர் தவான், மஹேந்திர சிங் டோனி, ரவிந்திர ஜடேஜா, புவ்னேஸ்வர் குமார், ரோஹித் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருடன் இத்தொடரில் களமிறங்கவுள்ளது.

இந்திய அணி போன்று கடந்த தொடரில் விளையாடியிருந்த ஏழு வீரர்களுடன் நியூசிலாந்து அணியானது இம்முறைக்கான கிண்ணத்திற்காக மோதவிருக்கின்றது. ட்ரென்ட் போல்ட், மார்ட்டின் குப்டில், மிச்செல் மெக்லெனகன், லூக் ரோன்ச்சி, ரோஸ் டெய்லர், டிம் செளத்தி மற்றும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஆகிய அந்த ஏழு வீரர்களும் அணிக்கு இம்முறையும் பலம் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டெய்லர் மற்றும் குப்டில் ஆகியோர் 2009 ஆம் ஆண்டு சம்பியன் கிண்ண இறுதிப்போட்டியில் ஆடியிருந்த நியூசிலாந்து அணியில் காணப்பட்ட வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

பாகிஸ்தான் அணியின் தலைவரான சர்ப்ராஸ் அஹமட் இவ்வருட சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் மூலம் முதல் தடவையாக இத்தொடரில் விளையாடுகின்றார். இவருடன் சேர்த்து பாகிஸ்தான் அணியானது மேலும் ஒன்பது புதிய வீரர்களுடன் கிண்ணத்தற்காக பலப் பரீட்சை நடாத்த உள்ளது. பாகிஸ்தான் குழாத்தில் காணப்படும் மொஹமட் ஹபீசுக்கு இது மூன்றாவது தொடராகும்.

அதேபோன்று 2013ஆம் ஆண்டின் தொடரில் ஆடியிருந்த ஜுனைட் கான், உமர் அக்மல் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் இத்தொடரிலும் தொடர்ந்து ஆடுவதோடு, 2009ஆம் ஆண்டின் தொடரில் பங்கேற்று இருந்த மொஹமட் அமீர் மீண்டும் சம்பியன்ஸ் கிண்ண தொடரொன்றில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றிருக்கின்றார்.

ஒரு நாள் தரவரிசையில் உலகில் முதல் இடத்திலுள்ள தென்னாபிரிக்க அணியானது கடந்த தொடரில், விளையாடியிருந்த ஏழு வீரர்களுடன் இம்முறைக்கான தொடரிலும் களம் காணவுள்ளது. அவ்வீரர்களில் ஏபி.டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்காவின் தலைவராக காணப்படுவதோடு, ஹஷிம் அம்லா, பர்ஹான் பெஹர்டீன், ஜே.பி டுமினி, டு ப்லெசிஸ், டேவிட் மில்லர் மற்றும் மோர்னே மோர்க்கல் ஆகியோர் அவ்வணிக்கு மேலதிக வலுவினை சேர்க்க காத்திருக்கின்றனர். வரும் தொடர் டி வில்லியர்சிற்கு நான்காவது சம்பியன்ஸ் கிண்ணம் என்பதோடு, டு ப்லெசிற்கு ஒரு நாள் போட்டிகளில் 4000 ஓட்டங்களினை (57 ஓட்டங்களே மேலும் தேவை என்பதால்) பூர்த்தி செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாகவும் காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2013ஆம் ஆண்டு தொடரில் ஆடியிருந்த ஆறு வீரர்களான அணித்தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ், தினேஷ் சந்திமால், நுவான் குலசேகர, லசித் மாலிங்க, குசல் பெரேரா மற்றும் திசர பெரேரா ஆகியோருடன் இலங்கை அணியானது இவ்வருட சம்பியன்ஸ் கிண்ணத்தில் களமிறங்கி போராடவுள்ளது.  

இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் மைய அங்குரார்ப்பண நிகழ்வின் புகைப்படங்கள்

நான்காவது தடவையாக சம்பியன் கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கையின்வேகப்பந்து வீச்சுப் புயலான லசித் மாலிங்கவிற்கு, ஒரு நாள் போட்டிகளில் 300 விக்கெட்டுக்களை சாய்க்க இன்னும்ஒன்பது விக்கெட்டுக்கள் மாத்திரமேதேவையாக உள்ளது. மாலிங்க குறிப்பிட்ட விக்கெட்டுகளை கைப்பற்றி இச்சாதனையினை செய்வராயின் உலகில் இச்சாதனையை புரிந்த 13 ஆவது வீரராகமாறுவதோடு, இலங்கை சார்பான நான்காவது வீரராக மாறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியில்முத்தையா முரளிதரன் (534), சமிந்தவாஸ் (400) மற்றும் சனத் ஜயசூரிய (323) ஆகிய வீரர்களே இச்சாதனையினை முன்னர் நிலைநாட்டியிருந்தனர்.

மாலிங்க சம்பியன் கிண்ணத்தில் பங்குபெறுவதை பற்றி பேசியிருந்த போது

“2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் பின்னர் ஒரு நாள் போட்டித் தொடர்களில் மீண்டும் விளையாடுவதற்கு அதிக ஆர்வத்தோடு காணப்படுகின்றேன். (ஒரு நாள் போட்டிகளில்) எனது மீள்வருகைக்கு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத்தினை தவிர வேறு சிறந்த களமொன்று  இருப்பதாக தெரியவில்லை. 2006 ஆம் ஆண்டிலிருந்து இத்தொடரில் எதனையும் விடாமல் பங்கேற்று வருகின்றேன்.  ஒவ்வொரு தடவையும் எனக்கு சிறப்பாக அமைந்த இத்தொடரில் வரும் ஜூன் மாதத்திலும் வெற்றியினை எதிர்பார்க்கின்றேன்.

ஆசியாவின் ஜாம்பாவன் அணிகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியவற்றுடன் சேர்த்து தென்னாபிரிக்கா காணப்படும் குழுவில் நாம் இருக்கின்றோம். இது ஒரு சர்வதேச நிகழ்ச்சி என்கிற காரணத்தினால் எப்போட்டியும் இலகுவாக இருக்கப்போவதில்லை. எதிரணிகள் அவர்களது ஆற்றல் காரணமாக எம்மை தொடரிலிருந்து வெளியேற வைக்க முடியும். ஆனால், எந்த நேரத்திலும், எந்த அணியினையும் வீழ்த்தும்  சிறந்ததொரு அணியினை தற்போது நாங்கள்  கொண்டிருக்கின்றோம். ஆக, இத்தொடரில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு அடைவு அல்லது சாதனையினை நாங்கள் நிலைநாட்டுவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றேன்

என்று கூறியிருந்தார்

அவுஸ்திரேலியா தொடரில், பங்கேற்கும் அணிகள் இம்மாதம் (மே)  24ஆம் திகதிக்கு முன்னர் .சி.சி இன் அனுமதியின்றி தமது குழாங்களில் மாற்றங்களினை மேற்கொள்ள முடியும். ஆனால், (மே) 25ஆம் திகதியிலிருந்து வீரர்கள் மாற்றங்கள் தொடர்பான அனுமதி, நிகழ்வு ஒழுங்கமைப்பு குழுவிடம் பெறப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணிகளது குழாங்கள்

அவுஸ்திரேலியா

ஸ்டீவ் ஸ்மித் (அணித் தலைவர்), டேவிட் வோர்னர், பேட் கம்மின்ஸ், ஆரோன் பின்ச், ஜோன் ஹேஸ்ட்டிங்ஸ், ஜோஸ் ஹேஷல்வூட், ட்ராவிஸ் ஹெட், மொய்சேஸ் ஹென்ரிக்ஸ், கிரிஸ் லின், கிளேன் மெக்ஸ்வெல், ஜேம்ஸ் பட்டின்சன், மிச்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மெத்திவ் வேட் மற்றும் அடம் ஷம்பா

பங்களாதேஷ்

மஷ்ரபி மொர்தஸா (அணித் தலைவர்), இம்ருல் கைஸ், மஹமதுல்லாஹ், மெஹதி ஹஸன் மிராஜ், மொசாதிக் ஹொசைன், முஷ்பிகுர் ரஹீம், முஸ்தபிசுர் ரஹ்மான், ருபெல் ஹுசைன், சஞ்சமுல் இஸ்லாம், சப்பீர் ரஹ்மான், சபியூல் இஸ்லாம், சகீப் அல் ஹஸன், செளம்யா சர்க்கர், தமிம் இக்பால் மற்றும் தஸ்கின் அஹமட்

இங்கிலாந்து

இயோன் மோர்கன் (அணித் தலைவர்), மொயின் அலி, ஜொன்னி பேயிர்ஸ்டோவ், ஜேக் பால், சேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளன்க்கெட், ஆதில் ராஷித், ஜோ ரூட், ஜேசன் ரோய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லேய், கிரிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வூட்

இந்தியா

விராட் கோஹ்லி (அணித் தலைவர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரிடி பும்ரா, சிக்கர் தவான், மஹேந்திர சிங் டோனி, ரவிந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ், புவ்னேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, மனிஷ் பாண்டே, அஜிங்கியா ரஹானே, மொஹமட் சமி, ரோஹித் சர்மா, யுவராஜ் சிங் மற்றும் உமேஷ் யாதவ்

நியூசிலாந்து

கேன் வில்லியம்சன் (அணித் தலைவர்), கோரி அன்டர்சன், ட்ரென்ட் போல்ட், நெயில் ப்ரூம், கொலின் டி கிரான்ட்ஹொம்மெ, மார்ட்டின் குப்டில், டொம் லேதம், மிச்செல் மெக்லெனகன், அடம் மில்னே, ஜிம்மி நீசம், ஜீத்தன் பட்டேல், லுக் ரோன்ச்சி, மிச்செல் சன்ட்னெர், டிம் செளத்தி மற்றும் ரோஸ் டெய்லர்

பாகிஸ்தான்

சர்ப்ராஸ் அஹ்மட் (அணித் தலைவர்), அஹ்மட் ஷேசாத், அஸ்ஹர் அலி, பாபர் அஷாம், பாஹிம் அஷ்ரப், பக்கார் ஷமான், ஹஸ்ஸன் அலி, இமாத் வஷிம், ஜுனைத் கான், மொஹமட் அமீர், மொஹமட் ஹபீஸ், சதாப் கான், சொஹைப் மலிக், உமர் அக்மல் மற்றும் வஹாப் ரியாஸ்

தென்னாபிரிக்கா

ஏபி. டி வில்லியர்ஸ் (அணித் தலைவர்), ஹஷிம் அம்லா, பர்ஹான் பெஹர்டீன், ஜே.பி டுமினி, குயின்டன் டி கொக், டு ப்லெசிஸ், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், மொர்னே மோர்க்கல், கிரிஸ் மொர்ரிஸ், வேய்ன் பார்னல், அன்டைல் பெஹ்லுக்வயோ, ட்வைன் ரெடொரியஸ், ககிஸோ றபாடா மற்றும் இம்ரான் தாஹிர்

இலங்கை

அஞ்சலோ மெதிவ்ஸ் (அணித்தலைவர்), தினேஷ் சந்திமல், நிரோஷன் திக்வெல்ல, அசேல குணரத்ன, ஷாமர கப்புகெதர, நுவான் குலசேகர, சுரங்க லக்மால், லசித் மாலிங்க, குசல் மெண்டிஸ், குசல் மெண்டிஸ், நுவான் பிரதீப், சீக்குகே பிரசன்ன, குசல் பெரேரா, திசர பெரேரா, லக்ஷன் சந்தகன் மற்றும் உப்புல் தரங்க

மேற்குறிப்பிட்ட அணிகளில் இந்த பருவகாலத்திற்கான சம்பியன் கிண்ணத்தினை வெல்லும் ஆற்றல் எந்த அணிக்கு உண்டு? உங்களது கருத்தினை கீழே பதிவிடுங்கள்.