பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியொன்றில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.
பெங்களுர் சின்னச்சாமி மைதானத்தில் இடம்பெற்ற முதல் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.
மலிங்கவின் புதிய சாதனையுடன் மும்பை அணி அபார வெற்றி
10ஆவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் (சனிக்கிழமை)..
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித் தலைவர் கௌதம் கம்பீர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களம் இறங்கிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக விராட் கோலி, கிறிஸ் கெயில் ஆகியோர் களம் இறங்கினர்.
முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் ஓவரின் முதல் பந்திலேயே கிறிஸ் கெயில் கம்பீரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மந்தீப் சிங் களம் இறங்கினார். மறுமுனையில் விராட் கோலி 5 ஓட்டங்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 10 ஓட்டங்களில் வெளியேறினார். மீண்டும் தொடக்க வீரர்கள் சொதப்ப ரோயல் செலஞ்சர்ஸ் 34 ஓட்டங்களுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது.
பின்னர் 4ஆவது விக்கெட்டுக்கு மந்தீப் சிங் உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மந்தீப் சிங் 52 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
41 பந்துகளில் அரைச்சதம் அடித்த டிராவிஸ் ஹெட், கடைசி ஓவரில் இரண்டு சிக்சர்கள் விளாசி 47 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 75 ஓட்டங்கள் எடுக்க, பெங்களுர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 159 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் களம் இறங்கினர்.
இந்த இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இருவரும் நடத்திய வாணவேடிக்கையை பார்க்கும்போது ஹைலைட் போட்டியை பார்த்ததுபோல் இருந்தது. சுனில் நரைன் வெறும் 15 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் அரைச்சதத்தை எட்டினார்.
சம்பியன் பட்டதை சுவீகரித்த தென் மாகாணம்
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட..
இருவரும் அதிரடியாக ஓட்டங்களை விளாச, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பவர் பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 105 ஓட்டங்களை குவித்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி பவர் பிளேயில் அடித்த அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இது புதிய சாதனையைப் பதிவு செய்தது.
நரைன் 17 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 54 ஓட்டங்களை குவித்தார். அடுத்து டி கிராண்ட்ஹோம் களம் இறங்கினார். மறுமுனையில் அதிரடி காட்டிய கிறிஸ் லின் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் அரைச்சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 22ஆவது பந்தில் ஆட்டம் இழந்தார்.
அணியின் 3ஆவது விக்கெட்டுக்கு கௌதம் கம்பீர் களம் இறங்கினார். கிராண்ட் ஹோம் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், கம்பீர் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழக்க, யூசுப் பதான், மணீஷ் பாண்டே ஆகியோர் கொல்கத்தா அணியை 15.1 ஓவர்களில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
அவ்வணி நான்கு விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். வரலாற்றில் 15 பந்துகளில் அரைச்சதம் அடித்து அதி வேகமாக அரைச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் பெற்றுள்ளார்.
போட்டியின் சுருக்கம்
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் 158/6 (20) – டிராவிஸ் ஹெட் 75(47), மந்தீப் சிங் 52(43)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 159/4 (15.1) – கிறிஸ் லைன் 50(22), நரைன் 54(17)
அம்லாவின் சதம் வீணாக, ஸ்மித்தின் அதிரடியில் வீழ்ந்தது பஞ்சாப்
நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய பஞ்சாப் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக குப்டில் மற்றும் ஹசிம் அம்லா ஆகியோர் களம் இறங்கினர்.
சம்பியன்ஸ் கிண்ணத்தில் பங்குகொள்வதை உறுதிப்படுத்திய இந்திய அணி
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத்தில், இந்திய..
குப்டில் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த ஷோன் மார்ஷ் அம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மார்ஷ் 43 பந்துகளில் 58 ஓட்டங்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அம்லா 104 ஓட்டங்கள் (60 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள்) குவித்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.
இந்த தொடரில் அம்லாவின் 2ஆவது சதம் இதுவாகும். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 125 ஓட்டங்களை இணைப்பாட்டமாக குவித்தது. மெக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 20 ஓட்டங்களை குவிக்க, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து 190 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடக் களம் இறங்கிய குஜராத் லயன்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக டி.ஆர். ஸ்மித் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் களம் இறங்கினர்.
இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கிஷான் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டி.ஆர். ஸ்மித் 39 பந்துகளில் 74 ஓட்டங்களைக் குவித்து மெக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 39 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்திக் – ஜடேஜா ஜோடி நிதானமாக ஓட்டங்களை சேர்த்தது.
இதன்மூலம் குஜராத் அணி 2 பந்துகள் எஞ்சிய நிலையில 4 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் அணி சார்பில் தினேஷ் கார்திக் ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களுடனும், ஜடேஜா 7 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 189/3 (20) – அம்லா 104(60), ஷோன் மார்ஷ் 58(43), மெக்ஸ்வெல் 20(11)
குஜராத் லயன்ஸ் 192/4 (19.4) – டி.ஆர். ஸ்மித் 74(39), டினேஸ் கார்த்திக் 35(23)