இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் 19 வயதுக்கு உட்பட்ட கனிஷ்ட அணிகள் பங்குகொள்ளும் மாகாண ரீதியிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இரண்டு குழுக்களிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுக்கொண்ட அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகின. அந்த வகையில் இன்றைய தினம் கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் மேல் மாகாணம் (தெற்கு) மற்றும் மேல் மாகாணம் (வடக்கு) ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், மேல் மாகாண தெற்கு அணி 130 ஓட்டங்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
6 ஓட்டங்களால் வெற்றியை தவறவிட்ட வட மாகாணம்
அந்த வகையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாண தெற்கு அணி துடுப்பாட்டத்துக்கு உகந்த இந்த மைதானத்தில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதனையடுத்து களமிறங்கிய அவ்வணி, 50 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 303 ஓட்டங்களை பதிவு செய்தது. மேல் மாகாண தெற்கு அணி சார்பாக களமிறங்கிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் முதல் விக்கெட்டுக்காக 130 ஓட்டங்களை தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பாக துடுப்பாடிய நிஷான் மதுஷ்க 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 122 பந்துகளில் 102 ஓட்டங்களை விளாசினார். அவருடன் மறுமுனையில் துடுப்பாடிய சனோஜ் தர்ஷிக்க நிதானமாக துடுப்பாடி 52 ஓட்டங்களைப் பதிவு செய்தார்.
இறுதி ஓவர்களில் துடுப்பாடிய கமில் மிஷார மற்றும் அவிந்து பெர்னாண்டோ ஆகியோர் முறையே 46 மற்றும் 29 ஓட்டங்களை விளாசி அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக உயர்த்தியிருந்தனர்
அதேநேரம் ஸாஹிரா கல்லூரியை சேர்ந்த மிதில கீத் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் சகல துறை ஆட்டக்காரான சஜித் சமீர 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மேல் மாகாண வடக்கு அணி சார்பாக கைப்பற்றியிருந்தனர்.
அதனை தொடர்ந்து கடினமான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய மேல் மாகாண வடக்கு அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறியது. இதனால் 31.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து அவ்வணியால் 173 ஓட்டங்களை மாத்திரமே பெற்றக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
அவ்வணி சார்பாக முதலில் களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் வெறும் 5 ஓட்டங்களை மாத்திரமே முதல் விக்கெட்டுக்காக பகிர்ந்து கொண்ட நிலையில், அவ்வணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் சஜித் சமீர துரதிஷ்டவசமாக வெறும் 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
தேசிய மட்டத்திலும் இரண்டு விக்கெட்டுக்களைப் பதம் பார்த்தார் கபில்ராஜ்
அதனைத் தொடர்ந்து, சீரான இடைவெளிகளில் தொடர்ந்தும் மேல் மாகாண வடக்கு அணி விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. எனினும், அவ்வணி சார்பாக சகல துறை ஆட்டக்காரர் லஹிரு அத்தநாயக்க மாத்திரமே அரைச் சதம் கடந்து 51 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டங்களாக பதிவு செய்தார். அத்துடன், அஷான் பெர்னாண்டோ மற்றும் ப்ருதுவி ருசர ஆகியோர் முறையே 28 மற்றும் 26 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர். மேல் மாகாண தெற்கு அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ரொஹான் சஞ்சய 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் தாஷிக் பெரேரா 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் சுருக்கம்
மேல் மாகாணம் (தெற்கு) – 303/8 (50) – நிஷான் மதுஷ்க 102, சனோஜ் தர்ஷிக 52, கமில் மிஷார 46, அவிந்து பெர்னாண்டோ 29, மிதில கீத் 2/48, சஜித் சமீர 2/68
மேல் மாகாணம் (வடக்கு) – 173 (31.1) – லஹிரு அத்தநாயக்க 51, அஷான் பெர்னாண்டோ 28, ப்ருதுவி ருசர 26, மஹேஷ் தீக்ஷன 23, ரொஹான் சஞ்சய 2/24, தாஷிக் பெரேரா 2/33
முடிவு – மேல் மாகாண தெற்கு அணி 130 ஓட்டங்களால் வெற்றி