ரக்பி லீக் மற்றும் நொக்அவுட் ஆகிய இரு தொடர்களினதும் நடப்புச் சம்பியனாக உள்ள கண்டி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ரொஷான் வீரரத்ன, ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கையின் பதினைவர் (XV) கொண்ட அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ரக்பி அணி மீது முழு நம்பிக்கை வைத்துள்ள பிஜி பயிற்றுவிப்பாளர்
மலேசியாவில் எதிர்வரும் 14ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்த தொடரிற்கு இலங்கையின் தலைவராக கடமையாற்றவுள்ள வீரரத்ன, ஸ்க்ரம் நிலையில் சிறப்பான முறையில் செயற்பட்டு போட்டியினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதில் கைதேர்ந்தவர். அதோடு விரைவாக செயற்பட்டு துல்லியமாக பந்தினை உதைக்கும் ஆற்றலினையும் வீரரத்ன கொண்டிருக்கின்றார்.
இவ்வாறான திறமைகளை வைத்திருந்த காரணத்திற்காக 2010ஆம் ஆண்டு தேசிய அணிக்காக விளையாட கன்னி அழைப்பினை பெற்றுக்கொண்ட வீரரத்ன, ஐந்து ஆசிய நாடுகள் பங்குபெற்றியிருந்த டிவிஷன் – I சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக அப்போது ஆடியிருந்தார். இவர் கன்னி வாய்ப்பினை பெற்று விளையாடியிருந்த அந்த தொடரில் இலங்கை அணி சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவ்வெற்றியிலிருந்து தேசிய அணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வந்த அவர், கடந்த வருடத்தில் இருந்து இலங்கையின் தலைமைத்துவ குழுவிலும் ஒரு அங்கத்தவராக காணப்படுகின்றார்.
நடைபெறவுள்ள ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை அணி பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் தொடரினை நடாத்தும் நாடான மலேசியா ஆகியவற்றுடன் மோதுகின்றது. கடந்த வருடத்தில் இத்தொடரில், பிஜி வீரர்கள் இடம்பெற்றிருந்த மலேசிய அணியுடன் தோல்வியுற்ற இலங்கை அணி அத்தொடரில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது. எனினும், கடந்த வருடத்தில் விட்ட பிழைகளை சரிசெய்து இம்முறை சாதிக்க ஒரு வாய்ப்பு இலங்கை அணிக்கு கிட்டியுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியானது, பிஜி நாட்டினைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர் பெரெட்டி வெரபியூலா மூலம் பயிற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளது. இலங்கை ராணுவப்படை அணியின் (கடந்த இரண்டு பருவகாலங்களிற்கும்) முன்னாள் பயிற்றுவிப்பாளரான வெரபியூலா, அவ்வணியின் ஆட்டத்தினை முன்னேற்றகரமாக மாற்றி ராணுவப்படையினை உள்ளூர் ரக்பி தொடரில் அதி சிறந்த அணிகளில் ஒன்றாக மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நிலைமை இத்தொடரிலும் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் புதிய தலைவர் ரொஷான் வீரரத்ன ThePapare.com இடம் கருத்து தெரிவித்தபொழுது,
“இலங்கை பதினைவர் (XV) அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டது என்பது மிகவும் மகிழ்ச்சிக்கும், கெளரவத்திற்குமுரிய விடயமாக அமைகின்றது. தற்போது பாரிய பொறுப்பொன்றிற்கு நான் ஆளாகியிருக்கின்றேன். எனினும், சிறு வயதிலிருந்தே இலங்கையின் பதினைவர் (XV) அணியினை தலைமை தாங்க வேண்டும் என்பது கனவாக இருந்திருக்கின்றது.
தற்போது இளம் வீரர்களுடன் நம்மிடம் இருக்கும் குழாமானது உண்மையில் அதி திறமை வாய்ந்த ஒரு அணியாகும். தற்போது எங்களது கையில் இருக்கும் கடமையினை நிறைவேற்றவே நாங்கள் அதிக கவனம் செலுத்துகின்றோம்.
அதோடு, இத்தொடரானது பாஸில் மரிஜாவிற்கு பிரியாவிடை தொடராக அமைந்திருக்கின்றது. அதிக ஆற்றல் வாய்ந்த ஒரு வீரரினை உள்ளடக்கிய தேசிய அணியின் தலைவராக செயற்படப்போவது மிகவும் மகிழ்ச்சி தருகின்றது. அவருடன் நிறையப் போட்டிகளில் இணைந்து விளையாடியிருக்கின்றேன். ஓய்வு பெறப்போகும் அவருக்கு எமது பதினைவர் அணி (XV) மூலம் சிறந்த பரிசாக நான் கொடுக்க நினைப்பது வரும் தொடரின் வெற்றியையே“ என தெரிவித்திருந்தார்.
தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறும் பாசில் மரிஜா
இந்நிலையில், ரொஷானின் சகோதரரான கயான் வீரரத்னவிற்கு இத்தொடரிற்காக பயிற்சி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், 2010 ஆம் ஆண்டு அறிமுகப் போட்டியிலிருந்து ஒன்றாகவே இணைந்து தேசிய அணிக்காக ஜோடியாக கடமையாற்றியிருந்த இந்த இருவரையும் முதற்தடவையாக இம்முறை ஒன்றாகப் பார்க்க முடியாது போகும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
தற்போது, 31 வீரர்களுடன் காணப்படும் (இலங்கை) குழாமானது வரும் வெள்ளிக்கிழமை (5ஆம் திகதி) 25 வீரர்களாகக் குறைக்கப்படும். அதனைத் தொடர்ந்து இறுதிக் குழாம் மலேசியாவிற்கு பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.