ஆசிய தடகள கிராண்ட் ப்ரிக்சில் இந்துனில் மற்றும் கயந்திகாவிற்கு தங்கம்

219
Asian grand prix 3rd leg

ஆசிய தடகள விளையாட்டுக் கூட்டமைப்பினால் நடாத்தப்படும் ஆசிய தடகள கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டித் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான பாகம் கடந்த 30ஆம் திகதி சைனீஸ் தாய்பேயில் நடைபெற்றது. இப்பாகத்தில் இலங்கை அணி 2 தங்கம் மற்றும் 1 வெண்கலம் என 3 பதக்கங்களை வெற்றி கொண்டது.

Indunilமுதற் பாகத்தில் தங்கம் வென்ற இந்துனில் ஹேரத் இரண்டாம் பாகத்தில் பின்னடைவை சந்தித்திருந்த போதிலும், மூன்றாம் பாகத்தில் தங்கப் பதக்கத்தை மீளவும் பெற்றுக் கொண்டார். ஆண்களுக்கான 800m போட்டியில் கலந்து கொண்ட இவர், 1:51.34 நிமிடங்களில் ஓட்டத்தை நிறைவு செய்து முதல் இடத்தை சுவீகரித்திருந்தார். இப்போட்டியின்போது இந்துனில் 1:45.98 என்ற தனிப்பட்ட சாதனையை கொண்டவரும், கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட முன்னணி இந்திய வீரருமான ஜீன்ஸன் ஜோன்சனை தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹேர்பேர்ட் கிண்ணத்தில் முன்னேறும் விமானப்படை; முத்துவல் கழகத்திற்கு முதல் வெற்றி

gayanthikaஇலங்கை வீரர்கள் 800m போட்டியிலேயே அதிக திறமையை வெளிக்காட்டியிருந்தனர். பெண்களுக்கான போட்டியில் கயந்திகா அபேரத்ன தங்கப் பதக்கத்தையும் (2:03.87 ) நிமாலி லியனாரச்சி (2:06.30) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்துக் கொண்டனர். இவ்வெண்கலப் பதக்கமானது நிமாலி இத்தொடரில் பெற்றுக்கொண்ட இரண்டாவது பதக்கமாகும். அத்துடன் இவ்விரு வீராங்கனைகளும் இப்பருவகாலத்தில் பதிவு செய்த சிறந்த நேர அடிப்படை இதுவாகும்.

800m ஓட்டப் போட்டியில் ஆசிய நடப்பு சம்பியனான இந்திய வீராங்கனை டின்டு லூகாவை தோற்கடித்தே கயந்திகா வெற்றியை பெற்றிருந்தார். கிராண்ட் ப்ரிக்ஸ் தொடரின் முதற் பாகத்தின்போது கயந்திகா மூன்றாம் இடத்தையும் நிமாலி ஐந்தாம் இடத்தையும் பெற்றிருந்ததுடன், இரண்டாம் பாகத்தின் போது நிமாலி மூன்றாவதாகவும் கயந்திகா ஐந்தாவதாகவும் போட்டியை முடித்திருந்தனர்.

தொடரின் முதல் இரண்டு பாகங்களிலும் 100m போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹிமாஷ ஏஷான், இம்முறை நான்காம் இடத்தையே பெற்றதுடன் பதக்கம் ஒன்றினை வெல்லத் தவறினார். எனினும் 10.41 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்த இவர் இப்பருவகாலத்தில் தனது சிறந்த வேகத்தை பதிவு செய்து கொண்டார். மேலும் இவர், முதல் இரண்டு பாகங்களிலும் தங்கம் வென்ற ஹொங் மீயை ஐந்தாம் இடத்திற்கு பின்தள்ளியிருந்தார்.

பெண்களுக்கான 100m போட்டியிலும் இலங்கை வீராங்கனைகளினால் பதக்கம் ஒன்றினை வெல்ல இயலவில்லை. இப்போட்டியை 11.87 வினாடிகளில் நிறைவு செய்த ருமேஷிகா ரத்நாயக்க ஐந்தாம் இடத்தையே பெற்றுக் கொண்டார். 11.34 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்த கசகஸ்தான் வீராங்கனை விக்டோரியா ஸ்யப்கினா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர்களான சுமேத ரணசிங்க மற்றும் வருண லக்ஷான் இப்பாகத்திலும் பதக்கம் வெல்லத் தவறினர். 72.23m தூரம் ஈட்டி எறிந்த சுமேத ஏழாம் இடத்தை பெற்றதுடன், வருண இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறினார்.

தேசிய மட்டத்திலும் இரண்டு விக்கெட்டுக்களைப் பதம் பார்த்தார் கபில்ராஜ்

ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் கலந்துகொண்ட சஞ்சய ஜயசிங்க 15.23m தூரம் பாய்ந்து ஆறாம் இடத்தையும், 400m ஓட்டப் போட்டியை 47.89 வினாடிகளில் முடித்துக் கொண்ட அஜித் பிரேமகுமார ஐந்தாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

பெண்கள் பிரிவில் குண்டெறிதல் போட்டியில் 14.15m தூரம் வீசிய தாரிகா பெர்னாண்டோ ஐந்தாம் இடத்தை பெற்றார். மூன்றாவது பாகத்திலும் ஏமாற்றமளித்த உயரம் பாய்தல் வீராங்கனை தரங்கா விந்தினி தகுதிகாண் சுற்றில் மிகக் குறைந்த உயரமான 1.65m உயரத்தை தாண்டத் தவறினார்.

இதன்படி கிராண்ட் ப்ரிக்ஸ் தொடரின் முதற் பாகத்தில் இலங்கை அணியானது இந்துனில் ஹேரத் பெற்றுக் கொடுத்த தங்கம், ஹிமாஷ ஏஷான் பெற்றுக் கொடுத்த வெள்ளி மற்றும் கயந்திகா அபேரத்னவின் வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று கொண்டது. இரண்டாவது பக்கத்தில் இலங்கை வீரர்கள் பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், ஹிமாஷ எஷானின் வெள்ளிப் பதக்கம் மற்றும்  நிமாலி லியனாரச்சி வென்ற வெண்கலப் பதக்கம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்திருந்தன.

எனினும் மூன்றாவது பாகத்தில் முன்னேற்றகரமான திறமையை வெளிக்காட்டிய இலங்கை வீரர்கள் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கலத்துடன் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளைப் படிக்க