பின்ஞ்சின் அதிரடியில் மீண்டும் வீழ்ந்தது பெங்களுர் அணி

274
Aron Finch

இந்தியாவில் மிகக் கோலாகலமாக நடைபெற்று வரும் பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களுர் அணி தொடர்ந்தும் தடுமாறி வருகின்றது.

பெங்களுர் சின்னஸ்வாமி மைதானத்தில் இடம்பெற்ற ஐ.பி.எல் தொடரின் 31ஆவது போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தியிருந்தன.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் லயன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக க்ரிஸ் கெய்ல் மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் துடுப்பாட்டத்தில் சற்று தடுமாறினர். இதன் காரணமாக அணியின் ஓட்ட எண்ணிக்கை 22 ஆக இருக்கும் போது விராட் கோஹ்லி (10), க்ரிஸ் கெய்ல் (8), டிராவிஸ் ஹெட் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

4ஆவது விக்கெட்டுக்கு டி வில்லியர்ஸ் உடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இவர் 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டி வில்லியர்ஸ் 5 ஓட்டங்களில் துரதிஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

மந்தீப் சிங் 8 ஓட்டங்களில் வெளியேற, பவன் நெகி அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 32 ஓட்டங்களை எடுத்தார்.

இதன் காரணமாக ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களுர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சில் குஜராத் அணியின் சார்பில் அன்ட்றிவ் டையி 4 ஓவர்களில் 12 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் லயன்ஸ் அணி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இருப்பினும் அணித் தலைவர் சுரேஷ் ரெய்னா மற்றும் ஏரொன் பிஞ்ச் இருவரும் ஜோடி சேர்ந்து ஓட்டங்களை குவித்தனர்.

சுரேஷ் ரெய்னா நிதானமாக ஆட பிஞ்ச் அதிரடியாக விளையாடி அரைச்சதம் அடித்தார்.

ஏரொன் பிஞ்ச் 34 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் சுரேஷ் ரெய்னா பவுண்டரிகளாக விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

சுரேஷ் ரெய்னா 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடங்கலாக 34 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் குஜராத் லயன்ஸ் அணி 13.5 ஓவர்களில் 135 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

37 பந்துகள் மீதமிருந்த நிலையில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது. 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்த அன்ட்றிவ் டையி போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

8 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் அணி 3ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 9 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி 6ஆவது தோல்வியை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

போட்டியின் சுருக்கம்

ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களுர் – 134 (20) – பவன் நெகி 32(19), கேதர் யாதவ் 31(18), அனிகெட் சௌத்ரி 15(12), அன்ட்றிவ் டையி 12/3(4), ரவீந்திர ஜடேஜா 28/2(4)

குஜராத் லயன்ஸ் – 135/3 (13.5) – ஏரொன் பிஞ்ச் 72(34), சுரேஷ் ரெய்னா 34(30), இஷான் கிஷான் 16(11), சமுவேல் பத்ரி 29/2(3)

போட்டி முடிவு – குஜராத் லயன்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி.