யாழ் மாவட்ட ஹொக்கி சம்மேளனத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்த ஹொக்கித் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை வென்ற ஓல்ட் கோல்ட்ஸ் அணி இம்முறையும் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியது.

யாழ். பல்கலைக்கழகம், யாழ் ஸ்ரார்ஸ் அணிகள் அரையிறுதியில்

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நொக் அவுட் முறையிலான இத்தொடரில் இவ்வருடம் மொத்தம் 6 அணிகள் பங்கு கொண்டன.

இறுதிப்போட்டி

கடந்த வருடம் இறுதிப்போட்டியில் மோதிய அணிகளான யாழ் பல்கலைக்கழக அணியும் ஓல்ட் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகமும் இம்முறையும் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டன.

போட்டியின் விறுவிறுப்பினைத் தக்கவைத்து இரு அணியினரும் சிறப்பாக ஆடினர். போட்டியின் 13ஆவது நிமிடத்தில் ஓல்ட் கோல்ட்ஸ் அணியின் அருண் ஒரு கோலினைப் பெற்றுக்கொடுத்து அணியை முன்னிலைப்படுத்தினார். 15ஆவது நிமிடத்தில் பிரதாப் பெற்ற கோலுடன் முன்னிலை இரட்டிப்பானது. 2-0 என்ற கோல்கள் கணக்கில் ஓல்ட் கோல்ட்ஸ் முன்னிலைபெற்று முதற்பாதி நிறைவிற்குவந்தது.

இரண்டாவது இடத்தைப்பெற்ற யாழ் பல்கலைக்கழக அணி
இரண்டாவது இடத்தைப்பெற்ற யாழ் பல்கலைக்கழக அணி

இரண்டாவது பாதியில் தமது ஆதிக்கத்தை அதிகரித்தது யாழ் பல்கலைக்கழக அணி. பல வாய்ப்புக்களை வீணடித்ததன் பின்னர் 43ஆவது நிமிடத்தில் தேனுக யாழ் பல்கலைக்கழக அணி சார்பாக முதல் கோலினைப் பதிவு செய்தார். போட்டியின் 59ஆவது நிமிடத்தில் பிரதாப் ஓல்ட் கோல்ட்ஸ் அணி சார்பாக தனது இரண்டாவது கோலினைப் பதிவு செய்ய, ஆட்ட நேர நிறைவில் 3:1 என்ற கோல்கள் கணக்கில் யாழ் பல்கலைக்கழக அணியை வெற்றிபெற்ற ஓல்ட் கோல்ட்ஸ் அணி கிண்ணத்தை தமதாக்கியது.

  • ஆட்டநாயகன் – பிரதாப் (ஓல்ட் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம்)
  • தொடர் நாயகன் – நிலக்ஸன் (ஓல்ட் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம்)

மூன்றாம் இடத்திற்கான போட்டி

யாழ் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து ஜோனியன்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய யாழ் ஸ்ரார்ஸ் அணிக்கு 15ஆவது நிமிடத்தில் கோபிநாத் கோல் ஒன்றினைப் பெற்றுக்கொடுத்து அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்தும் போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்ற போதும், யாழ் ஸ்ரார்ஸ் பெற்ற ஒரு கோலுடன் முதற்பாதி நிறைவிற்குவந்தது.

ThePapare.com இன் ஆட்டநாயகன் – சுரேந்தர் (யாழ் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம்)


முதலாவது அரையிறுதி

யாழ் பல்கலைக்கழக அணி எதிர் ஜோனியன்ஸ் விளையாட்டுக் கழகம்

போட்டி ஆரம்பமானதிலிருந்து இரு அணிகளும் தமது அணியை முன்னிலைப்படுத்துவதற்காக மிகவும் வலுவாகப் போராடின. நுட்பமாக விளையாடிய யாழ் பல்கலைக்கழக அணிக்கு 13ஆவது நிமிடத்தில் சசிந் முதல் கோலினைப் பெற்றுக்கொடுத்தார்.

1-0 என்ற கோல்கள் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழகம் முன்னிலைபெற்று முதற்பாதி நிறைவிற்குவந்தது.

ThePapare.com இன் ஆட்டநாயகன் – சாலியாஹ் (யாழ் பல்கலைக்கழக அணி)


இரண்டாவது அரையிறுதி

யாழ் ஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் ஓல்ட் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம்

ஆரம்பம் முதலே மிகவும் வேகமாக விளையாடிய இரு அணியினரும், தமது அணியை முன்னிலைப்படுத்துவதற்கு பலத்த போரட்டத்தை வெளிப்படுத்தினர். பலத்த போராட்டத்தின் பலனாக 23ஆவது நிமிடத்தில் யாழ் ஸ்ரார்ஸ் அணியின் நிசாந்தன் கோல் போட்டு முதற்பாதியில் தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

ThePapare.com இன் ஆட்டநாயகன் – நிசாந்த் (ஓல்ட் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழகம்)

போட்டியின் நிறைவில் யாழ் மாவட்ட ஹொக்கி சங்கத் தலைவர் இளம்பிறையன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்கடந்த வருடம் 12 அணிகள் பங்கு பற்றிய இத்தொடரில் இவ்வருடம் வெறுமனே 6 அணிகள் மட்டுமே பங்கெடுத்துள்ளன. இது யாழ் மாவட்டத்தில் ஹொக்கி அழிவடைந்து வருவதையே எடுத்துக்காட்டுகின்றது. இதற்கு பிரதான காரணம் அநேகமான பாடசாலைகள் ஹொக்கி விளையாட்டை கைவிட்டுள்ளமையாகும். பெரும்பான்மையான மக்கள் ஹொக்கி விளையாட்டை செலவு கூடியதாகக் கருதுகின்றனர்என வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்தும்யாழ்ப்பாணத்தில் ஹொக்கி விளையாட்டினை வளர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று கூறினார்.