இலங்கை ரக்பி அணியின் ஆசிய கிண்ண சாதனைகள்

390
Asia Rugby Championship 2017

2008ஆம் ஆண்டில் ஆசிய ரக்பி சம்மேளனமானது ஆசிய ரக்பி அணிகளுக்காக புதியதொரு போட்டித் தொடரை அறிமுகப்படுத்தியது. இப்போட்டித் தொடரில் ஒவ்வொரு அணியும் தனது திறமையின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிற்கு வகைப்படுத்தப்பட்டது. மேலும் வெற்றியாளர்கள் முதற் பிரிவிற்கு முன்னேற்றப்படுவதோடு, இறுதி இடத்தை பிடிக்கும் அணி இரண்டாவது பிரிவிற்கு பின் தள்ளப்படும்.

இப்போட்டித் தொடரானது, முன்னர் வழக்கத்திலிருந்த ‘Asiad’ போட்டித் தொடரிற்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு காரணம் ஒவ்வொரு அணியும் தமக்கு நிகரான அணியுடன் வழக்கமாக போட்டியிட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்கும், ஆசிய தரவரிசையில் முன்னிலை பெற வாய்ப்பளிப்பதற்காவும் ஆகும். முதற் பிரிவு 5 அணிகளை கொண்டிருப்பதுடன், இரண்டாம் பிரிவு 3 அல்லது 4 அணிகளை கொண்டிருக்கும்.

இப்போட்டித் தொடர் ஆரம்பித்து இத்துடன் 10 வருடங்கள் பூர்த்தியடைகின்றது என்பதால், இதில் இலங்கை அணி எவ்வாறு திறமையை வெளிப்படுத்தியுள்ளது என்பது பற்றி இங்கு ஆராய்வோம்.

2008

2008ஆம் ஆண்டில் போட்டியானது சைனீஸ் தாய்பேய் நாட்டில் நடைபெற்றது. இலங்கை அணியானது முதல் டிவிஷனில் 2ஆம் பிரிவில் சைனீஸ் தாய்பேய், சிங்கப்பூர் மற்றும் சீன அணிகளுடன் காணப்பட்டது.  சீன அணியானது வீசா (Visa) பிரச்சினை காரணமாக இறுதி நேரத்தில் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இலங்கை அணியானது  சிங்கப்பூர் அணியுடன் 20 புள்ளிகள் பெற்ற நிலையில் முதல் போட்டியை சமநிலையில் முடித்ததோடு, இரண்டாம் போட்டியில் 35-23 என்ற புள்ளிகள் அடிப்படையில் சைனீஸ் தாய்பேய் அணியுடன் தோல்வியைத் தழுவியது. சிங்கப்பூர் அணியானது மற்றைய போட்டியில் சைனீஸ் தாய்பேய் அணியை 23-22 என வென்று ‘Asian 5 Nations ‘ போட்டிக்கு தகுதி பெற்றது. சீன அணி பங்குகொள்ளாமையின் காரணமாக, சீன அணியானது 2ஆம் பிரிவிற்கு தள்ளப்பட்டதோடு, இலங்கை மற்றும் சைனீஸ் தாய்பேய் அணிகளானது முதலாம் பிரிவில் தமது இடத்தை தக்கவைத்துக்கொண்டது.

நிலைகள்

  1. சிங்கப்பூர் – 8 புள்ளிகள்
  2. சைனீஸ் தாய்பேய் – 7 புள்ளிகள்
  3. இலங்கை – 3 புள்ளிகள்

2009

ஐக்கிய அரபு இராச்சியமானது 2008ஆம் ஆண்டு Asian 5 Nations போட்டிகளில் இறுதி இடத்தை பிடித்ததன் காரணமாக இப்பிரிவிற்கு தள்ளப்பட்டது. இப்பிரிவில் ஐக்கிய அரபு இராச்சியம், சைனீஸ் தாய்பேய், இலங்கை மற்றும் தாய்லாந்து (பிரிவு 2 இல் இருந்து முன்னேற்றப்பட்டது) அணிகள் மோதிக்கொண்டன. நொக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியமானது தாய்லாந்து அணியை எதிர்கொண்டது மற்றும் இலங்கை அணியானது சைனீஸ் தாய்பேய் அண்ணியை எதிர்கொண்டது. வெற்றிபெறும் அணிகள் Asian 5 Nations போட்டிகளுக்கு தகுதி பெரும் போட்டியில் விளையாடியதோடு, தோல்வியுறும் அணிகள் முதற்பிரிவில் தமது இடத்தை தக்கவைத்துக்கொள்ள போட்டியிட்டது.

  • போட்டி 1 : சைனீஸ் தாய்பேய் 36 – 24 இலங்கை
  • போட்டி 2 : ஐக்கிய அரபு இராச்சியம் 36 – 17 தாய்லாந்து
  • தகுதி பெறுவதற்கான போட்டி : ஐக்கிய அரபு இராச்சியம் 44 – 24 சைனீஸ் தாய்பேய்
  • முதலாம் பிரிவில் தமது இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டி : இலங்கை 51 – 17 தாய்லாந்து

ஐக்கிய அரபு இராச்சியமானது மீண்டும் ஒரு முறை Asian 5 Nations போட்டிக்கு தகுதி பெற்றதோடு, தாய்லாந்து மீண்டும் 2ஆம் பிரிவிற்கு பின்தள்ளப்பட்டது. இலங்கை மற்றும் சைனீஸ் தாய்பேய் அணிகள் மீண்டும் முதலாம் பிரிவில் தமது இடத்தை தக்கவைத்துக்கொண்டன.

2010

சிங்கப்பூரில் நடைபெற்ற இப்போட்டிகளில், சிங்கப்பூர் அணியானது இலங்கை, சைனீஸ் தாய்பேய் மற்றும் மலேசியா (2ஆம் பிரிவிலிருந்து முன்னேற்றப்பட்டது) அணிகளுடன் இப்பிரிவில் காணப்பட்டது. மீண்டும் ஒரு முறை நொக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் முடிவுகள் பின்வருமாறு காணப்பட்டன.

  • போட்டி 1 : இலங்கை 37 – 07 சைனீஸ் தாய்பேய்
  • போட்டி 2 :  சிங்கப்பூர் 22 – 20 மலேசியா
  • முதலாம் பிரிவில் தமது இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டி : மலேசியா 35 – 08 சைனீஸ் தாய்பேய்
  • தகுதி பெறுவதற்கான போட்டி : இலங்கை 23 – 16 சிங்கப்பூர்

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை அணியானது Asian 5 Nations போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. சைனீஸ் தாய்பேய் அணியானது இரண்டாம் பிரிவிற்கு பின்தள்ளபப்ட்டது.

2011

Asian 5 Nations போட்டியானது லீக் முறையில் நடைபெற்றது. அதிலும் ஒவ்வொரு அணியும் தமது சொந்த நாட்டில் மற்றும் எதிரணியின் நாட்டில் என இவ்விரண்டு போட்டிகளில் விளையாடின. இலங்கை அணியானது தமது முதல் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் 13 புள்ளிகள் பெற்று சமநிலையில் முடித்துக்கொண்டது. எனினும் ஏனைய போட்டிகளில் தோல்வியுற்ற இங்கை அணியானது மீண்டும் ஒரு முறை தமது முன்னைய பிரிவிற்கு பின்தள்ளப்பட்டது.

  • இலங்கை 13 – 13 ஐக்கிய அரபு இராச்சியம்
  • இலங்கை 03 – 48 ஹொங்கொங்
  • இலங்கை 18 – 34 கசகஸ்தான்
  • இலங்கை 13 – 90 ஜப்பான்

நிலைகள்

  1. ஜப்பான் – 24 புள்ளிகள்
  2. ஹொங்கொங் – 18 புள்ளிகள்
  3. ஐக்கிய அரபு இராச்சியம் – 8 புள்ளிகள்
  4. கசகஸ்தான் – 6 புள்ளிகள்
  5. இலங்கை – 3புள்ளிகள்

2012

இரண்டாம் பிரிவிலிருந்து முன்னேற்றப்பட்ட பிலிப்பைன்ஸ் அணியானது அந்நாட்டில் நடைபெற்ற இப்போட்டியில், அவ்வணியுடன் இலங்கை, சைனீஸ் தாய்பேய் மற்றும் சிங்கப்பூர் அணிகள் கலந்துகொண்டன. லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு,

  • இலங்கை 36 – 08 சைனீஸ் தாய்பேய்
  • இலங்கை 35 – 10 சிங்கப்பூர்
  • இலங்கை 18 – 28 பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் அணியானது Asian 5 Nations போட்டிகளுக்கு தகுதி பெற்றதோடு, சிங்கப்பூர் அணியானது 2ஆம் பிரிவிற்கு பின்தள்ளப்பட்டது. இலங்கை மற்றும் சைனீஸ் தாய்பேய் அணிகள் முதலாம் பிரிவில் தமது இடத்தை தக்கவைத்துக்கொண்டன.

2013

இலங்கையில் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணியுடன் கசகஸ்தான், சைனீஸ் தாய்பேய் மற்றும் தாய்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. அனைத்து போட்டிகளிலும் இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை அணியானது சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

  • இலங்கை 39 – 08 சைனீஸ் தாய்பேய்
  • இலங்கை 45 – 07 தாய்லாந்து
  • இலங்கை 49 – 18 கசகஸ்தான்

இவ் அசத்தலான முடிவுடன் இலங்கை அணியானது மீண்டும் ஒரு முறை Asian 5 Nations போட்டிக்கு தகுதி பெற்றது. தாய்லாந்து அணியானது மீண்டும் ஒரு முறை 2ஆம் பிரிவிற்கு பின்தள்ளப்பட்டது.

2014

இவ் ஆண்டில் நடைபெற்ற Asian 5 Nations போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்தது. 3 முதற்தர ஆசிய அணிகளுடன் மோசமாக தோல்வியுற்ற இலங்கை அணி, பிலிப்பைன்ஸ் அணியுடன் கடுமையான போட்டியின் பின்னர் தோல்வியுற்றது.

  • இலங்கை 03 – 59 கொரியா
  • இலங்கை 10 – 41 ஹொங்கொங்
  • இலங்கை 10 – 132 ஜப்பான்
  • இலங்கை 25 – 26 பிலிப்பைன்ஸ்

இதனால் இலங்கை அணியானது மீண்டும் ஒரு முறை தமது முன்னைய பிரிவிற்கே பின்தள்ளப்பட்டது. எனினும் ஆசிய ரக்பி சம்மேளனமானது இப்போட்டித் தொடரின் பெயரை ‘ஆசிய ரக்பி சம்பியன்ஷிப்’ என மாற்றி, அதில் 3 அணிகள் மட்டுமே பங்குகொள்ளலாம் எனும் சட்டத்தை அமுலாக்கியது. இதனால் பிலிப்பைன்ஸ் அணியும் பின்தள்ளப்பட்டது. இறுதியாக நடைபெற்ற Asian 5 Nations போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்ட ஜப்பான், ஹொங்கொங் மற்றும் கொரிய அணிகள் ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டிக்காக விளையாடத் தகுதிபெற்றன.

நிலைகள்

  1. ஜப்பான் – 24 புள்ளிகள்
  2. ஹொங்கொங் – 18 புள்ளிகள்
  3. கொரியா – 12 புள்ளிகள்
  4. பிலிப்பைன்ஸ் – 6 புள்ளிகள்
  5. இலங்கை – 1 புள்ளி

2015

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை, கசகஸ்தான் மற்றும் சிங்கப்பூர் அணிகள் கலந்துகொண்டன. நொக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் முடிவுகள் பின்வருமாறு,

  • போட்டி 1 :  இலங்கை 35 – 14 கசகஸ்தான்
  • போட்டி 2 :  சிங்கப்பூர் 17 – 20 பிலிப்பைன்ஸ்
  • முதலாம் பிரிவில் இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டி : கசகஸ்தான் 32 – 12 சிங்கப்பூர்
  • தகுதி பெறுவதற்கான போட்டி : இலங்கை 27 – 14 பிலிப்பைன்ஸ்

3ஆவது முறையாகவும் சம்பியனான இலங்கை அணியானது, ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு அப்போட்டிகளில் 3ஆம் இடத்தை பெற்ற கொரிய அணியுடன் விளையாடக்கூடிய வாய்ப்பை பெற்றது. எனினும் இவ்வாய்ப்பை நிராகரித்த இலங்கை அணியானது முதலாம் பிரிவிலேயே மீண்டும் ஒரு முறை விளையாடத் தீர்மானித்தது.

2016

இம்முறை போட்டியானது இரண்டாம் பிரிவிலிருந்து முன்னேறிய மலேசியாவில் நடைபெற்றது. மலேசிய அணியுடன், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் இலங்கை அணிகள் கலந்துகொண்டன. முடிவுகள் பின்வருமாறு,

  • இலங்கை 33 -17 சிங்கப்பூர்
  • இலங்கை 17 – 42 மலேசியா
  • இலங்கை 25 – 21 பிலிப்பைன்ஸ்

மலேசிய அணி சம்பியன் பட்டத்தை வென்றது, சிங்கப்பூர் அணி இரண்டாம் பிரிவிற்கு பின் தள்ளப்பட்டது.

நிலைகள்

  1. மலேசியா – 11 புள்ளிகள்
  2. இலங்கை – 9 புள்ளிகள்
  3. பிலிப்பைன்ஸ் – 7 புள்ளிகள்
  4. சிங்கப்பூர் – 5 புள்ளிகள்

2017

மீண்டும் ஒரு முறை மலேசியாவில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. மே மாதம் 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை லீக் முறையில் நடைபெறவிருக்கும் இப்போட்டியில் மலேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் (2ஆம் பிரிவிலிருந்து முன்னேற்றப்பட்டது) ஆகிய அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.

போட்டி அட்டவணை

  • 14.05.2017 – இலங்கை எதிர் பிலிப்பைன்ஸ்
  • 17.05.2017 – இலங்கை எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்
  • 20.05.2017 – இலங்கை எதிர் மலேசியா

சுருக்கம்

இலங்கை ரக்பி அணியானது இப்போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1ஆம் பிரிவில் தனது திறமையை சிறப்பாகவே வெளிக்காட்டி வருகிறது. இலங்கை அணியானது பிரிவு 1இல் 3 முறை சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது (2010, 2013, 2015). மேலும் இரண்டு முறை 2ஆம் இடத்தை வென்றுள்ளது (2012, 2016). இரண்டு முறை 3ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது (2008,2009). அத்துடன் முதற்தர போட்டியான Asian 5 Nations போட்டிகளிலும் இரண்டு முறை கலந்துகொண்டுள்ளது (2010,2014). ஆசிய முதற்தர அணிகளை கருத்தில் கொள்ளாது பார்த்தோம் என்றால் (ஜப்பான், ஹொங்கொங் மற்றும் கொரியா) போட்டி அறிமுகப்படுத்தியதில் இருந்து இலங்கை அணி மாத்திரமே இது வரையில் முதல் பிரிவில் இருந்து இரண்டாம் பிரிவிற்கு பின் தள்ளப்படாத ஒரே ஒரு அணியாகும்.

இப்போட்டியில் கலந்துகொள்ளும் இலங்கை அணியானது அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று மீண்டும் ஒரு முறை சம்பியன் ஆவதற்கு ‘ThePapare’ இன் மனமார்ந்த வாழ்த்துக்கள்.