கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தினை ஏற்படுத்தியுள்ள பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் லயன்ஸ்
நேற்றைய முதல் போட்டியில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி குஜராத் லயன்ஸ் அணியை 9 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி கொண்டது.
ரிஷப் பந்த்தின் போராட்டம் வீணாக 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது பெங்களூர் அணி
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணித் தலைவர் வோர்னர் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, ஐதராபாத் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கானின் சுழலில் முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. மெக்கல்லம் (5), ரெய்னா (5), பிஞ்ச் (3) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
முக்கிய மூன்று வீரர்கள் வெளியேறியதால் குஜராத் அணியால் அதிக அளவு ஓட்டங்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை. ரோய் (31), கார்த்திக் (30), வெயின் ஸ்மித் (37) ஆகியோரின் உதவியுடன் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பந்து வீச்சில் ரஷித் கான் 4 ஓவர்கள் பந்து வீசி 19 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இந்த நிலையில் பதிலுக்கு 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குக்காக சன்ரைசர்ஸ் அணியின் வோர்னரும், தவானும் களம் இறங்கினர். தவான் 9 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் பிரவீண் குமார் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வோர்னருடன் ஹென்றிக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. வோர்னர், ஹென்றிக்ஸின் அரைச் சதத்தால் சன்ரைசர்ஸ் அணி 15.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வோர்னர் 45 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 76 ஓட்டங்களையும், ஹென்றிக்ஸ் 39 பந்துகளில் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ரஷித் கான் தெரிவானார்.
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. குஜராத் அணி இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது.
போட்டியின் சுருக்கம்
குஜராத் லயன்ஸ்:135/7(20) – (ஸ்மித் 37(27), டினேஸ் கார்த்திக் 30(32) )
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:140/1(15.3) – வோர்னர் 76*(45), ஹென்றிக்ஸ் 52*(39)
மும்பை இந்தியன்ஸ் அணி எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கௌதம் காம்பீர், கிறிஸ் லின் ஆகியோர் களம் இறங்கினர்.
இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கொல்கத்தா அணியின் ஓட்ட எண்ணிக்கை 4.2 ஓவரில் 44 ஓட்டங்களாக இருக்கும்போது காம்பீர் 13 பந்தில் 19 எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சதீர சமரவிக்ரமவின் சதம் வீண்; போட்டியை சமப்படுத்த உதவிய சந்திமால்
அடுத்து வந்த உத்தப்பா 4 ஓட்டங்களில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் லின் 32 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த மணீஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, யூசுப் பதான் (6), சூர்யகுமார் யாதவ் (17) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியிருந்தனர்.
பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களை சேர்த்தது.
இதனைத் தொடர்ந்து 179 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி துடுப்பெடுத்தாட களம் இறங்கியது.
ஆரம்பம் முதல் சீராக ஓட்டங்களை குவித்து வந்த மும்பை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான படேல் 30 ஓட்டங்களையும், பட்லர் 28 ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய நிதிஸ் ராணா அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைச் சதம் கடந்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரோகித் ஷர்மா, கே. எசத் பாண்டியா மற்றும் பொல்லார்ட் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் எச்.எச். பாண்டியா 29 ஓட்டங்களை குவித்து மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இறுதியில் மும்பை அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களை பெற்று கொல்கத்தா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக நிதிஸ் ராணா தெரிவு செய்யப்பட்டார்.
போட்டியின் சுருக்கம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 178/7(20) – மனேஷ் பான்டே 81(47)
மும்பை இந்தியன்ஸ்: 180/6(19.5) – நிதிஸ் ராணா 50(29), கே. எசத் பாண்டியா 29(11)