இரண்டாம் பாதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தர்மராஜ கல்லூரியானது, புனித பேதுரு கல்லூரியுடனான றக்பி போட்டியில் 35-24 என்று வென்றது.
கண்டி நித்தவெல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் புனித பேதுரு கல்லூரியானது தோல்வியை தழுவிய பொழுதும், புனித அந்தோனியார் கல்லூரியானது ரோயல் கல்லூரியுடன் தோல்வியுற்றதன் மூலம் எந்த வித தடங்கலும் இன்றி இரண்டாம் சுற்றிற்கு தகுதி பெற்றது. கண்டி தர்மராஜ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரி பிளேட் கிண்ணத்திற்காக போட்டியிடவுள்ளது.
தர்மராஜ கல்லூரியின் கிஹான் இஷார பெனால்டி உதையின் மூலம் தமது அணிக்கு முதலாவது புள்ளியை பெற்றுக்கொடுத்தார். புனித பேதுரு கல்லூரி வீரர் பந்தை விடுவிக்காததால் தர்மராஜ கல்லூரிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. (தர்மராஜ கல்லூரி 03-00 புனித பேதுரு கல்லூரி)
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய தர்மராஜ கல்லூரியானது மேலும் ஒரு ட்ரை வைத்து தமது முன்னிலையை அதிகரித்தது. தலைவர் சமிக்க பெரேரா, பவந்த உடகமுவின் உதவியுடன் 30 மீட்டர் தூரம் ஓடி சென்று ட்ரை வைத்து தனது அணிக்கு பலம் சேர்த்தார். இஷார கொன்வெர்சனை தவறவிட்டார். (தர்மராஜ கல்லூரி 08-00 புனித பேதுரு கல்லூரி)
போட்டியில் முதன் முதலாக புனித பேதுரு கல்லூரியானது பெனால்டியின் மூலமாக புள்ளியை பெற்றுக்கொண்டது. தர்மராஜ கல்லூரி வீரர் ஓப் சைட் விளையாடியதன் காரணமாக பெனால்டி கிடைக்கப்பெற்றது. ஸ்டிபன் சிவராஜ் 30 மீட்டர் தூரத்தில் இருந்து கம்பத்தின் நடுவே உதைத்தார். (தர்மராஜ கல்லூரி 08-03 புனித பேதுரு கல்லூரி)
மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பினை பெற்றுக்கொண்ட புனித பேதுரு கல்லூரியானது சிவராஜின் மூலமாக மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. 35 மீட்டரை விட தூரத்திலிருந்து கம்பத்தின் நடுவே உதைத்து சிவராஜ் தமது அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். (தர்மராஜ கல்லூரி 08-06 புனித பேதுரு கல்லூரி)
பேதுரு கல்லூரியின் மெண்டிஸ், தர்மராஜ கல்லூரியின் இஷாரவை அபாயமான முறையில் தடுத்ததால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனை பயன்படுத்திக்கொண்ட தர்மராஜ கல்லூரியினது சந்தீப ஷிவா மைதானத்தின் ஓரத்தில் ட்ரை வைத்தார். இஷார கடினமான கொன்வெர்சனை சிறப்பாக உதைத்து மேலதிக இரண்டு புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (தர்மராஜ கல்லூரி 15-06 புனித பேதுரு கல்லூரி)
ஸ்டிபன் சிவராஜ் மேலும் ஒரு பெனால்டி மூலமாக 3 புள்ளிகளை பேதுரு கல்லூரிக்கு பெற்றுக்கொடுத்தார். எனினும் தர்மராஜ கல்லூரியே முதல் பாதியில் அதிக ஆதிக்கம் செலுத்தியது. மீண்டும் ஒரு முறை சந்தீப ஷிவா தர்மராஜா கல்லூரியின் சார்பாக ட்ரை வைத்தார். 80 மீட்டர் தனியே பந்தை எடுத்து ஓடிச்சென்ற ஷிவா கம்பத்தின் அடியே ட்ரை வைத்து அசத்தினார். இஷார எவ்வித சிக்கல்களும் இன்றி கொன்வெர்சனை பூர்த்தி செய்தார். (தர்மராஜ கல்லூரி 22-09 புனித பேதுரு கல்லூரி)
முதற் பாதி நிறைவடைய முன்னர் பினுற பண்டார தர்மராஜ கல்லூரியின் சார்பாக ட்ரை வைத்தார். எனினும் இஷார இம்முறை கொன்வெர்சனை தவறவிட்டார். (தர்மராஜ கல்லூரி 27-09 புனித பேதுரு கல்லூரி)
முதல் பாதி : தர்மராஜ கல்லூரி 27 – 09 புனித பேதுரு கல்லூரி
இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் பேதுரு கல்லூரியானது ஆதிக்கத்தை செலுத்தியது. மற்றுமொரு பெனால்டியை வென்ற பேதுரு கல்லூரியானது சிவராஜ் மூலமாக மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. சிவராஜ் 25 மீட்டர் தொலைவிலிருந்து கம்பத்தின் நடுவே உதைத்தார். (தர்மராஜ கல்லூரி 27-12 புனித பேதுரு கல்லூரி)
எனினும் தர்மராஜ கல்லூரி தனது விங் நிலை வீரரான யெமின் பசுரு மூலமாக அற்புதமான ட்ரையை வைத்து அசத்தியது. மீண்டும் ஒரு முறை சிறப்பாக பந்தை வழங்கிய உடன்கமுவ ட்ரைக்கு வித்திட்டார். இஷார கொன்வெர்சனை தவறவிட்டார். (தர்மராஜ கல்லூரி 32-12 புனித பேதுரு கல்லூரி)
கிடைத்த பெனால்டியின் மூலம் முன் நகர்ந்த பேதுரு கல்லூரியானது மொகமட் மொகிதீன் மூலமாக ட்ரை வைத்து தமது ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. லைன் அவுட் மூலமாக பந்தை பெற்றுக்கொண்ட மொகிதீன் தமது அணி சார்பாக முதலாவது ட்ரை வைத்தார். சிவராஜா மீண்டும் ஒரு முறை சிறப்பாக உதைத்து தனது திறமையை நிரூபித்தார். (தர்மராஜ கல்லூரி 32-19 புனித பேதுரு கல்லூரி)
போட்டியின் இறுதி கட்டத்தில் உடன்கமுவவிற்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இவ்வாய்ப்பின் மூலம் பலனை பெற்றுக்கொள்ள முயற்சித்த பேதுரு கல்லூரியானது இறுதி நேரத்தில் மொகமட் மொகிதீன் மூலமாக ட்ரை ஒன்றை பெற்றுக்கொண்டது. எனினும் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற 5 புள்ளிகள் பேதுரு கல்லூரிக்கு வெற்றியை பெற்றுக்கொள்ள போதுமானதாக இருக்கவில்லை. நேரமின்மையின் காரணமாக சிவராஜா கொன்வெர்சனை ட்ரொப் கோல் போல் உதைத்தாலும் அது குறி தவறியது.
அத்துடன் நடுவரான இர்ஷாத் காதர் போட்டியை முடிவிற்கு கொண்டு வந்தார். தர்மராஜ கல்லூரியின் ஸ்கரம் ஹாப் நிலை வீரரான தருக கலப்பிட்டிகெதர மற்றும் பவந்த உடன்கமுவ தமது கல்லூரியின் சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தர்மராஜ கல்லூரி முதல் சுற்றின் இறுதி போட்டியில் வெற்றிபெற்றாலும் முதல் சில போட்டிகளில் தோல்வியுற்றதன் காரணமாக அடுத்த சுற்றிற்கு தெரிவாக தவறியது.
முழு நேரம் : தர்மராஜ கல்லூரி 35 – 24 புனித பேதுரு கல்லூரி
ThePapare.com சிறந்த வீரர் – தருக கலபிட்டிகெதர (தர்மராஜ கல்லூரி)
புள்ளிகள் பெற்றோர்
தர்மராஜ கல்லூரி
சந்தீப ஷிவா 2T, சமிக்க பெரேரா 1T, யெமின் பசுரு 1T, பினுற பண்டார 1T, கிஹான் இஷார (2C 2P)
புனித பேதுரு கல்லூரி
மொகமட் மொஹிதீன் 2T, ஸ்டிபன் சிவராஜ் (4P 1C)