19 வயதுக்கு உட்பட்ட சிங்கர் கிண்ணத்துக்கான டிவிசன் 1 பிரிவில் இரண்டு நாட்களை கொண்ட நொக் அவுட் சுற்றுப் போட்டிகளுக்கான இரண்டு அரையிறுதி போட்டிகள் இன்றைய தினம் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற போதிலும் முதல் இன்னிங்ஸ் புள்ளிகள் அடிப்படையில், காலி ரிச்மண்ட் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்த கல்லூரி ஆகியன இறுதிப் போட்டிக்குத் தெரிவாகின.
தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி
இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி இரண்டாவதும் இறுதியுமான நாளாக மக்கோன சர்ரே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் தமது முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரி கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் சவாலான பந்து வீச்சினை எதிர்கொண்டு போட்டியை சமப்படுத்திய அதேநேரம் முதல் இன்னிங்சில் வெற்றியீட்டி இறுதி போட்டிக்கு தெரிவாகியது.
நேற்றைய தினம் நிபுன் லக்க்ஷான் மற்றும் பவன் பிரபாஷ் ஆகியோரின் அபார துடுப்பாட்டத்துடன் தர்ஸ்டன் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களை குவித்து முதல் இன்னிங்ஸ் இலக்காக ரிச்மண்ட் கல்லூரி கல்லூரிக்கு பாரிய ஓட்ட எண்ணிக்கையை நிர்ணயித்தது.
அரையிறுதிப் போட்டி என்ற வகையில் அதிக அழுத்தத்துடன் களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரி சார்பாக சிறப்பாக துடுப்பாடி ஆதித்ய சிறிவர்தன 112 ஓட்டங்களை பெற்று அணியின் முதல் இன்னிங்ஸ் வெற்றியை உறுதி செய்தார். அத்துடன் தவீஷ அபிஷேக், தனஞ்சய லக்க்ஷான், சந்துன் மெண்டிஸ் மற்றும் கசுன் தாரக ஆகியோரும் இரட்டை இலக்க ஓட்டங்களால் பங்களிப்பு செய்தனர்.
இறுதியில் ரிச்மண்ட் கல்லூரி 292 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்ளை இழந்து ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. பின்னர் போட்டி போதிய நேரமின்மை காரணமாக நிறைவு பெற்றமையினால் முதல் இன்னிக்சில் வெற்றியீட்டிய ரிச்மண்ட் கல்லூரி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
ரிச்மண்ட் கல்லூரி சார்பாக ஆதித்ய சிறிவர்தன 112 ஓட்டங்களையும் தவீஷ அபிஷேக் 42 ஓட்டங்களையும் பெற்றனர். தர்ஸ்டன் கல்லூரி சார்பாக பந்து வீச்சில் நவீன் குணவர்தன 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் துஷால் ஆதித்ய 111 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் சுருக்கம்
தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 289 (97) – நிபுன் லக்க்ஷான் 77 , பவன் பிரபாஷ் 73*, யெஷான் விக்கிரமாராச்சி 47, பிரகீஷ மெண்டிஸ் 22, அவிந்து தீக்க்ஷன 5/78, சந்துன் மெண்டிஸ் 4/72
ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 292/9d (81.3) – ஆதித்ய சிறிவர்த்தன 112, தவீஷ அபிஷேக் 42, தனஞ்சய லக்க்ஷான் 32, சந்துன் மெண்டிஸ் 29, கசுன் தாரக, 25, நவீன் குணவர்தன 3/63, துஷால் ஆதித்ய 4/111
போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. ரிச்மண்ட் கல்லூரி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
புனித பேதுரு கல்லூரி, கொழும்பு எதிர் ஆனந்த கல்லூரி, கொழும்பு
கொழும்பு மூவர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இரண்டாம் நாளாக நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த ஆனந்த கல்லூரியை காமேஷ் நிர்மல் மற்றும் அசெல் சிகெரா சிறப்பாக துடுப்பாடி அணியை மீண்டும் வலுப்படுத்தி இறுதிப் போட்டிக்கு நுழைய வழிவகுத்தனர்.
நேற்றைய முதல் நாள் ஆட்டம் நிறைவுறும் பொழுது புனித பேதுரு கல்லூரி பெற்றிருந்த 211 ஓட்டங்களுக்கு பதிலாக களமிறங்கிய கொழும்பு ஆனந்த கல்லூரி சந்தோஷ் குணதிலக்கவின் அதிரடி பந்து வீச்சில் 74 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தது.
இந்நிலையில் 6ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய காமேஷ் நிர்மல் அதிரடியாக ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்டங்களை உயர்த்தினார். அதேநேரம் ஆனந்த கல்லூரி அணி சார்பாக சிறப்பான துடுப்பாட்டதை வெளிப்படுத்திய அசெல் சிகெரா 43 ஓட்டங்களையும் மற்றும் சுபுன் வாரகொட 33 ஓட்டங்களையும் பெற்று அணியை வலுப்படுத்தினர்.
இறுதில் கொழும்பு ஆனந்த கல்லூரி இன்றைய நாள் ஆட்டநேர நிறைவின் போது 9 விக்கெட்டுளை இழந்து 223 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை முதல் இன்னிங்சில் 12 ஓட்டங்களால் முன்னிலிலை பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
அதே நேரம் கொழும்பு புனித பேதுரு கல்லூரி சார்பாக சிறப்பாக பந்து வீசிய சந்தோஷ் குணதிலக்க 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் மனெல்கர் டி சில்வா 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த அரை இறுதிப் போட்டியும் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற போதிலும் முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்ததன் காரணமாக கொழும்பு ஆனந்த கல்லூரி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டியின் சுருக்கம்
புனித பேதுரு கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 211 (71.3) – ஷிவான் பெரேரா 68, ரன்மித் ஜயசேன 43, மனேல்கர் டி சில்வா 26, சந்தோஷ் குணதிலக்க 20, அசெல் சிகேரா 3/36, சம்மு அஷான் 2/17, சாமிக்க குணசேகர 2/35
ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 223/9d (72.5) – காமேஷ் நிர்மல் 52, அசெல் சிகெரா 43, சுபுன் வாரகொட 33, லஹிரு ஹிரண்ய 26, சஹன் சூரவீர 24, கழன விஜேசிரி 20, சந்தோஷ் குணதிலக்க 4/47, மனெல்கர் டி சில்வா 3/67
போட்டி முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றது. ஆனந்த கல்லூரி முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.