இளம் வீரர்களின் எதிர்காலம் கருதி ஓய்வு பெறுகின்றார் மஷ்ரபி மொர்தஸா

561
Mashrafe Mortaza

நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை அணியுடனான T-20  தொடருடன், சர்வதேச T-20 போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்தஸா பிரியாவிடையினை எடுத்துக்கொண்டுள்ளார்.

தனது தாயகத்திற்காக கடந்த 11 ஆண்டுகளாய் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் விளையாடிவரும் மொர்தஸா, பங்களாதேஷ் அணியின் தலைவராக 2014ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வருகின்றார்.

வீணானது கபுகெதரவின் போராட்டம்; இலங்கையுடனான அனைத்து தொடர்களையும் சமப்படுத்திய பங்களாதேஷ்

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T-20 போட்டியில்…

அணியில் நீண்ட காலமாக இருந்து வரும் இவர், ருபெல் ஹுஸைன் போன்ற இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கத்திலேயே ஓய்வினை அறிவித்திருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இலங்கை அணியுடனான தொடரிற்கு முன்னதாக, நியூசிலாந்துடன் பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடர் ஒன்றினை விளையாடியிருந்தது. அத்தொடரில் மொர்தஸா ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றியிருந்ததோடு ருபெல் ஹுஸைன் மொத்தமாக 7 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

அவ்வாறாக திறமை காட்டியிருந்த ஹுஸைன் இத்தொடரில் இணைக்கப்பட்டிருக்கவில்லை. அதற்கு காரணம் அவரின் இடத்தினை தான் பெற்றதே என்று மொர்தஸா செவ்வாய்க்கிழமை (4) தெரிவித்திருந்தார்.

அத்துடன், தன்னால் முடிந்தவரை அணியை மீளக் கட்டியெழுப்பவதற்கு பங்களிப்பு வழங்கியிருப்பதாக கூறியிருந்த மொர்தஸா, தனது ஓய்வினை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது T-20 போட்டிக்கு முதல் நாள் இரவில் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹஸனிடம் கூறியிருந்தார்.

T-20 போட்டிகளில் இருந்து ஓய்வெடுக்கும் மஷ்ரபி மொர்தஸா, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டியின் மற்றொரு வடிவமான ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதை கீழ்வருமாறு  உறுதிப்படுத்தியிருந்தார்.

நான் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதை பற்றி இன்னும் எதுவும் சிந்திக்கவில்லை. அத்துடன் மேலதிகமாக வேறு எதனையும் திட்டமிட்டும் இருக்கவில்லை. ஆனால், T-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது எனக்கு கடினமான முடிவொன்றாக இருக்கின்றது. இந்த முடிவினை எடுப்படுதற்கு பலர் காரணமாய் இருந்துள்ளனர். எனது குடும்பம், நண்பர்கள், சக வீரர்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியனவே அவையாகும். ஓரிரண்டு நாட்கள் சென்றாலும் இதுவே எனது முடிவுஎன்றார்.

கோலாகல ஆரம்ப நிகழ்வு, நடப்புச் சம்பியனின் வெற்றி என்பவற்றுடன் ஆரம்பித்த ஐ.பி.எல்

“ஜெய் கோ” என்ற பாடலுடன் ஆரம்பமான பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் போட்டிகளின்….

கடந்த வருட T-20 உலகக் கிண்ணப் போட்டியொன்றில்  ஓமான் அணியினை வீழ்த்தியிருந்த பங்களாதேஷ், அதனையடுத்து விளையாடியிருந்த 8 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது. இதில் இலங்கை அணியுடனான முதலாவது T-20 போட்டியும் அடங்கும்.  

இவ்வாறாக ஒரு தோல்விப்பாதையில் சென்றிருந்த பங்களாதேஷ் அணியினை தனது இறுதிப் போட்டியில் சிறப்பாக வழிநடாத்தியிருந்த மொர்தஸா 45  ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி தமது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவராக ஓய்வினை எடுத்துக்கொண்டுள்ளார்.

இதுவரை பங்களாதேஷ் அணிக்காக 54 டுவென்டி-20 போட்டிகளில் விளையாடியிருக்கும் மொர்தஸா 36.35 என்கிற சராசரியில் 42 விக்கெட்டுக்களை சாய்த்திருப்பதோடு, பின்வரிசை வீரராக அதிரடியாக துடுப்பாடி மொத்தமாக 377 ஓட்டங்களை 136.1 என்கிற ஓட்ட வீத சராசரியுடன் (Strike Rate) பெற்றுள்ளார்.

மஷ்ரபி மொர்தஸாவின் ஓய்வினை அடுத்து வெற்றிடமாகும் T-20 அணியின் தலைமைப் பொறுப்பினை சகலதுறை வீரர்கள் தரவரிசையில் உலகில் முதலிடத்தில் இருக்கும் சகீப் அல் ஹஸன் பெற்றுக்கொள்வார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மூலம் எமக்கு அறியக்கூடியதாக உள்ளது.