பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதிற்கு உட்பட்ட இரண்டு நாள் சுற்றுத் தொடரின் நான்காவது காலிறுதிப் போட்டி இன்று ஆரம்பமானது. புனித பேதுரு கல்லூரி மற்றும் புனித தோமியர் கல்லூரி அணிகள் மோதிக் கொண்ட இப்போட்டி தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை பெய்த மழை காரணமாக ஆடுகளம் ஈரத்தன்மையுடன் காணப்பட்டதால் போட்டி பிற்பகல் 1.00 மணியளவிலேயே ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித தோமியர் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
அதன்படி களமிறங்கிய புனித பேதுரு கல்லூரியின் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டிற்காக 68 ஓட்டங்களை பெற்று சிறப்பான ஆரம்பத்தினை பெற்றுக் கொடுத்தனர். எவ்வாறாயினும் தொடக்க வீரர் பானுக சில்வா மற்றும் அடுத்து பிரவேசித்த வினுல் குணவர்தன ஆகியோரை பவித் ரத்நாயக்க குறுகிய இடைவெளியில் ஆட்டமிழக்கச் செய்தார்.
மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த சந்துஷ் குணதிலக அரைச்சதம் குவித்த நிலையில் 59 ஓட்டங்களுக்கு ஷெனொன் பெர்னாண்டோவின் பந்துவீச்சிற்கு ஆட்டமிழந்தார். அடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய மானெல்க டி சில்வாவையும் ஷெனொன் பெர்னாண்டோ 4 ஓட்டங்களிற்கே வீழ்த்தி ஓய்வறை திரும்பச் செய்தார்.
இதன்படி புனித பேதுரு கல்லூரி 126 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனினும் 5 ஆவது விக்கெட்டிற்காக இணைந்த ஷலீத் பெர்னாண்டோ மற்றும் லக்ஷின ரொட்ரிகோ 54 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை வலுப்படுத்தினர்.
ஷலீத் பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 53 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள, புனித பேதுரு கல்லூரி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களுடன் இன்றைய தினத்திற்கான ஆட்டத்தினை நிறைவு செய்தது. இன்று மாலை போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முன்னதாகவே நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் வெற்றியை பெற்றுக் கொள்ளும் அணியானது அரையிறுதிப் போட்டியில் ஆனந்த கல்லூரியை எதிர்கொள்ளவுள்ளது. அத்துடன் முதலாவது அரையிறுதிப் போட்டியில் ரிச்மண்ட் கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரி அணிகள் மோதவிருக்கின்றன.
போட்டியின் சுருக்கம்
புனித பேதுரு கல்லூரி: 180/4 (64) – சந்துஷ் குணதிலக 59, ஷலீத் பெர்னாண்டோ 51*, ஷெனொன் பெர்னாண்டோ 2/29, பவித் ரத்நாயக்க 2/34
நாளை போட்டியின் இரண்டாவதும் இறுதியுமான நாளாகும்.