மழையின் குறுக்கீட்டால் கைநழுவிச் சென்ற இலங்கையின் வெற்றி வாய்ப்பு

3086
Sri Lanka v Bangladesh

தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான  தீர்மானம் மிக்க இரண்டாவது ஒருநாள் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடைலான மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரின், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி இன்றைய தினம் ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இலங்கை மண்ணில் இதுவரை நடைபெற்றுள்ள பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் போட்டிகளிலேனும் தோல்வியுற்றிராத நிலையில், கடந்த போட்டியில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வியினால், தொடரை தக்க வைக்க கட்டாயம் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலையில் இலங்கை அணி களமிறங்கியது. அந்த வகையில் அணியினுள் சில மாற்றங்களை செய்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. லஹிறு குமார, லக்ஷான் சந்தகன், மற்றும் சசித் பத்திரனவுக்கு பதிலாக இலங்கை அணியின் அனுபவ பந்து வீச்சாளர் நுவன் குலசேகற, தில்ருவன் பெரேரா ஆகியோருடன் நுவன் பிரதீப் அணிக்கு மீளழைக்கப்பட்டனர்.

இன்றைய தினம் இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க தனது 200ஆவது ஒருநாள் போட்டிக்காக களமிறங்கினார். துடுப்பாட்டத்துக்கு உகந்த இந்த மைதானத்தில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற உபுல் தரங்க முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அந்த வகையில் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் கசப்பானதாகவே இருந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க்க குணதிலக்க இலங்கை அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 18 ஆக இருந்த போது மஷ்ரஃபீ மொர்தசாவின் பந்து வீச்சில் முஷ்பிகுர் ரஹிமிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதனையடுத்து களமிறங்கிய குசல் மென்டிஸ் மற்றும் அணித் தலைவர் உபுல் தரங்க ஆகியோர் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதேநேரம்  இரண்டாம் விக்கெட்டுக்காக 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியை வலுவான நிலைக்கு மீட்டனர். சிறப்பாக துடுப்பாடிய அணித்தலைவர் உபுல் தரங்க 76 பந்துகளுக்கு முகம் கொடுத்து 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அதே நேரம் தனது 31ஆவ்து அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

போட்டியின் 24.3ஆவது ஓவரின் போது ஓட்டங்களின் வேகத்தை அதிகரித்திருந்த உபுல் தரங்க, முஸ்தபிசூர் ரஹ்மானினால் வீசப்பட்ட நோபோல் (No Ball) பந்துக்கு ஓட்டமொன்றை பெற முயற்சித்த போது எதிர்பாராத வகையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க நேரிட்டது. எனினும், அதனையடுத்து வீசப்பட்ட பந்தினை சிக்ஸராக மாற்றினார் குசல் மென்டிஸ். அத்துடன் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 102 ஓட்டங்களை விளாசி தனது கன்னிச் சதத்தை பூர்த்தி செய்தார்,

ஓட்ட எண்ணிக்கையை வேகப்படுத்திய அசேல குணரத்ன 28 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 39 ஓட்டங்களை விளாசினார். அவரை தொடர்ந்து களம் நுழைந்த மிலிந்த சிறிவர்தன 30 ஓட்டங்களை பங்களிப்பு செய்தார். எனினும், அதனையடுத்து சீரான இடைவெளிகளில் பின்கள வீரர்கள் சொற்ப ஓட்டங்ளுக்கு ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 311 ஓட்டங்களை பதிவு செய்தது.

அதேநேரம் பங்களாதேஷ் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய தஸ்கின் அகமத் போட்டியின் இறுதி நேரத்தின் போது தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஹட்ரிக்கை பதிவு செய்தார். அதனையடுத்து பங்களாதேஷ் அணி களமிறங்க வேண்டிய நிலையில் மழை குறுகிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. அதனை தொடர்ந்து சில மணி நேரத்துக்கு பின்னர் மைதானம் போட்டியை முன்னெடுத்து செல்வதற்கு உகந்த நிலையில் இல்லாத காரணத்தால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மூன்றவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி கொழும்பு ssc மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை: 311 (49.5) – தனுஷ்க குணதிலக 09, உபுல் தரங்க 65, குசல் மெண்டிஸ் 102, தினேஷ் சந்திமால் 24, அசேல குணரத்ன 39, மிலிந்த சிறிவர்தன 30, திஸர பெரேரா 9, தில்ருவன் பெரேரா 9, சுரங்க லக்மால் 0, நுவான் குலசேகர 2, தஸ்கின் அகமத் 47/4 (8.5)