சரித் அசலங்கவின் சதத்துடன் இலங்கை இளையோர் அணிக்கு முதல் வெற்றி

1384
Sri Lanka U23 vs Afghanistan U23

பங்களாதேஷில் நடைபெற்று வரும்,  இளையோர் ஆசிய கிண்ண கிரிக்கெட் சம்பியன்ஷிப் தொடரில் ஆப்கானிஸ்தான் இளையோர் அணியுடனான போட்டியில், இலங்கை இளையோர் அணி சிறப்பான துடுப்பாட்ட வலிமையை வெளிக்காட்டி 35 ஓட்டங்களால் வென்று இத்தொடரின் முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது.  

நேற்று இந்திய இளையோர் (23 வயதுக்குட்பட்ட) அணியிடம் தோல்வியடைந்திருந்த இலங்கை, குழு A இல் மலேசிய அணியினை வீழ்த்தியிருந்த ஆப்கானிஸ்தான் அணியிடம் மோதியிருந்த இப்போட்டி சிட்டகொங் நகரில் உள்ள ஸாஹுர் அஹமட் செளத்ரி மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியினை தனதாக்கிக் கொண்ட இலங்கை இளையோர் அணியின் தலைவர் அஞ்சலொ பெரேரா முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தார்.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பாரிய மாற்றத்தினை எதிர்பார்க்கும் இலங்கை அணி

இதன்படி துடுப்பாடிய இலங்கை இளையோர் அணியின் ஆரம்ப வீரர்கள் நல்ல ஒரு தொடக்கத்தினை தந்திருந்தும் அதனை நீடிக்கத் தவறியிருந்தனர். இலங்கை தரப்பின் முதல் விக்கெட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த கோல்ட்ஸ் கழக அணி வீரர் சதீர சமரவிக்ரம 15 ஓட்டங்களுடன் ஆப்கான் அணியின் தேசிய அணி வீரர் குல்படின் நயீபின் பந்தில் வீழ்ந்தார்.

எனினும் இரண்டாம் விக்கெட்டிற்காக ஒரு பெறுமதி வாய்ந்த இணைப்பாட்டத்தினை ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரொன் சந்திரகுப்தா வழங்கினார்.

மூன்றாம் இடத்தில் துடுப்பாடியிருந்த ஷெஹான் ஜயசூரிய (42), நேற்றைய இந்திய அணியுடனான போட்டி போன்று இன்றைய நாளிலும் அதிரடி காட்டி ஜொலித்திருந்தார்.

பின்னர், நான்காம் விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த சரித் அசலங்க மற்றும் இலங்கை இளையோர் அணித் தலைவர் அஞ்சலோ பெரேரா ஆகியோர் அதிசிறப்பாக ஆடி 183 ஓட்டங்களினைப் பெற்று, அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு முதுகெலும்பாக செயற்பட்டிருந்தனர்.

நான்காம் விக்கெட்டாக பறிபோயிருந்த அஞ்சலோ பெரேரா மொத்தமாக, 86 பந்துகளினை எதிர்கொண்டு 84 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

பின்னர், ஆப்கான் அணியின் பந்து வீச்சாளர்களை சிதைக்க தொடங்கிய சரித் அசலன்க பெற்றுக்கொண்ட அபார சதத்துடன் 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை இளையோர் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 320 ஓட்டங்களினை குவித்துக்கொண்டது.

இதில் ஆறாம் விக்கெட்டாக பறிபோயிருந்த சரித் அசலங்க 96 பந்துகளினை மாத்திரம் எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடக்கி சதத்துடன் மொத்தமாக 105 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

ஆப்கான் அணியின் பந்து வீச்சில் தேசிய அணி வீரர் பஷால் நியாசாய் உம், 17 வயதேயான நவீன் உல் ஹக் உம் தலா இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்திருந்தனர்.

பின்னர் சவலான வெற்றி இலக்கான 321 ஓட்டங்களினைப் பெறுவதற்கு பதிலுக்கு ஆடியிருந்த ஆப்கானிஸ்தான் இளையோர் அணி முதல் ஓவரிலேயே அசித்த பெர்னாந்துவின் பந்து வீச்சில் தமது ஆரம்ப வீரர்களில் ஒருவரினை பறிகொடுத்தது.

இதனால் ஆரம்ப வீரராக வந்திருந்த உஷ்மான் கனி வெறும் 4 ஓட்டங்களுடன் நடையை கட்ட வேண்டி ஏற்பட்டது.

பின்னர் களத்தில் நின்றிருந்த ஏனைய ஆரம்ப வீரர் சஹிதுல்லாஹ், புதிய வீரர் இஹ்ஸானுல்லாஹ் ஆகியோர் அரைச் சதங்கள் பெற்றிருப்பினும் அதிக ஓவர்களை பெரிய இலக்கு ஒன்றினை எட்டிப்பிடிக்கும் போட்டியொன்றில் வீணாக்கி இருந்ததன் காரணமாக, போட்டியின் வெற்றி இலங்கை இளையோர் அணியின் பக்கமே அதிகம்  காணப்பட்டிருந்தது.

இரு வீரர்களும் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்களும் குறைவான ஓட்டங்களுடன் வெளியேறினர். எனினும் ஆப்கான் அணியின் நட்சத்திர  மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான நஜிபுல்லாஹ் ஸத்ரான் வானவேடிக்கைகளை காட்டி போட்டியின் போக்கை மாற்றினார்.

இவ்வாறானதொரு  முக்கிய தருணத்தில் சமிக்க கருணாரத்னவின் பந்து வீச்சில் நஜிபுல்லாஹ் போல்ட் செய்யப்பட, போட்டி மீண்டும் இலங்கை இளையோர் அணிக்கு சாதமாகியது.

முடிவில், ஆப்கான் இளையோர் அணி 47.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

அதிரடியாக ஆடிய நஜிபுல்லாஹ் ஆட்டமிழக்கும் போது, 8 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளினை  50 பந்துகளிற்கு விளாசித்தள்ளி 87 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இலங்கை இளையோர் அணியின் பந்து வீச்சில் சுழல் வீரர் அமில அபொன்சோ மூன்று விக்கெட்டுக்களையும் அசித்த பெர்னாந்து  மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் சுருட்டி இலங்கை இளையோர் அணியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தனர்

போட்டியின் சுருக்கம்

இலங்கை இளையோர் அணி 320/6 (50) சரித் அசலன்க 105(96), அஞ்சலோ பெரேரா 84(86), ஷெஹான் ஜயசூரிய 42(34), ரொன் சந்திரகுப்தா 32(48), நவீன் உல் ஹக் 66/2 (10), பஷால் நியாசய் 70/2(10)

ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 285 (47.1) நஜிபுல்லாஹ் ஸத்ரான் 87(50), சஹிதுல்லாஹ் 53(81), இஹ்ஸானுல்லாஹ் 53(84), யூனாஸ் அஹ்மத்ஷாய் 38(33), அமில அபொன்சோ 40/3 (10), அசித்த பெர்னாந்து 52/2(7.1), சமிக்க கருணாரத்ன 65/2 (7.1)  

போட்டி முடிவுஇலங்கை இளையோர் அணி 35 ஓட்டங்களால் வெற்றி

இத்தொடரில் அடுத்ததாக இலங்கை இளையோர் அணி மலேசியாவினை எதிர்வரும் வியாழக்கிழமை (30) எதிர்கொள்கின்றது.