ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமாகியிருக்கும் இளையோர் ஆசியக் கிண்ணத்தின் முதல் கட்டப் போட்டியொன்றில் இலங்கை இளையோர் அணியை இந்தியா இளையோர் அணி 35 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பம் செய்துள்ளது.
எட்டு நாடுகள் கிண்ணத்திற்காக போட்டியிடும் இந்த தொடரின், குழு A அணிகள் பங்குபெற்றியிருந்த இப்போட்டி பங்களாதேஷின் சிட்டகொங் நகரில் ஆரம்பமாகியிருந்தது.
இலங்கைக் குழாமில் பிரதீப் மற்றும் குலசேகர: வெளியேற்றப்பட்ட திக்வெல்ல
போட்டியின் நாணய சுழற்சியினை வெற்றி பெற்றிருந்த இலங்கை இளையோர் அணியின் தலைவர் அஞ்சலொ பெரேரா முதலில் எதிரணியை துடுப்பாட கேட்டுக்கொண்டார். இதன்படி பாபா அபாரஜித் தலைமையிலான இந்திய இளையோர் அணி துடுப்பாட மைதானம் விரைந்தது.
போட்டியின் மூன்றாவது ஓவரில் அசித்த பெர்னாந்துவின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தமது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அபிமன்யு ஈஸ்வரனை ஒரு ஓட்டத்துடன் பறிகொடுத்த இந்திய இளையோர் அணி மோசமான ஆரம்பத்தைப் பெற்றுக்கொண்டது.
எனினும் நிதானித்து ஆடியிருந்த அவ்வணியின் ஏனைய ஆரம்ப வீரர் சிவம் செளத்திரி அரைச் சதம் (56) கடந்து அணியினை வலுப்படுத்தியிருந்தார்.
அத்துடன், மத்திய வரிசை வீரராக களம் நுழைந்திருந்த அணியின் தலைர் பாபா அபாரஜித் அதிரடியாக ஆடி பெற்றுக்கொண்ட சதத்துடன் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை வலுவான ஓர் நிலைக்குச் சென்றது.
றோயல் கல்லூரி வீரர் சமிக்க கருணாரத்னவின் வேகத்தில் வீழ்ந்த அபராஜித் 91 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 100 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.
பின்னர், ஏனைய மத்திய வரிசை வீரரான ஹனுமா விஹாரி பெற்றுக்கொண்ட அரைச் சதத்துடன் (56) இந்திய இளையோர் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 288 ஓட்டங்களினை குவித்தது.
இலங்கை இளையோர் அணியின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்த சமிக்க கருணாரத்ன மற்றும் இலங்கை தேசிய அணியின் சுழல் வீரர் அமில அபொன்சோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து சற்று சவாலான வெற்றி இலக்கான 289 ஓட்டங்களினை 50 ஓவர்களுக்குள் பெற மைதானம் விரைந்த இலங்கை இளையோர் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராய் வந்திருந்த இடது கை துடுப்பாட்ட வீரரான ரொன் சந்திரகுப்தா போட்டியின் முதல் ஓவரிலேயே ஓட்டம் ஏதுமின்றி வெளியேறினார்.
இதனையடுத்து ஏனைய ஆரம்ப வீரரான சதீர சமரவிக்ரமவும் குறைந்த ஓட்டங்களுடன் குறுகிய நேரத்தில் வெளியேற, இலங்கை இளையோர் அணி தமது இலக்கு தொடும் பந்தயத்தில் சற்று தடுமாற்றத்தினை உணர்ந்தது.
எனினும் பொறுப்பாக ஆடியிருந்த தேசிய அணி வீரரான ஷெஹான் ஜயசூரிய மற்றும் இலங்கை கனிஷ்ட அணி வீரர் சரித் அசலன்க ஆகியோர் மூன்றாம் விக்கெட்டிற்காக 89 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் இலக்கினையும் மெதுவாக எட்டிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், சுழல் வீரர் ராகுல் சஹாரின் பந்து வீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்து சென்றிருந்த ஷெஹான் ஜயசூரிய 60 பந்துகளினை எதிர்கொண்டு இரண்டு சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.
பின்னர் களம் நுழைந்த இலங்கை இளையோர் அணியின் மத்திய வரிசை வீரர்கள் (அணித் தலைவர் உட்பட) குறைவான ஓட்டங்களுடன் வெளியேறினர். எனினும், சரித் அசலன்க அரைச் சதம் ஒன்றினை கடந்து இலக்கினை எட்டுவதில் கவனமாக இருந்தார்.
அசலன்க கனிஷ்க, சேத்தின் பந்து வீச்சிற்கு விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்து இலங்கை இளையோர் அணியின் ஆறாவது விக்கெட்டாக வெளியேற போட்டியின் வெற்றி வாய்ப்பு இந்திய இளையோர் அணிக்கு அதிகமாகியது.
சாத்தியமாகிய சம்பியன்களின் அரையிறுதிக் கனவு
பின் வரிசையில் வந்த வீரர்களில் வனிது ஹஷரங்க (38) தவிர்ந்த ஏனைய வீரர்கள் சிறப்பாக பிரகாசிக்காத காரணத்தினால், முடிவில் 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை இளையோர் அணி 253 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.
இலங்கை இளையோர் அணியின் துடுப்பாட்டத்தில், சிறப்பான ஆட்டத்தினை காட்டியிருந்த சரித் அசலன்க 6 பவுண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களினை குவித்திருந்தார்.
இந்திய இளையோர் அணியின் பந்து வீச்சில் அணியின் வெற்றிக்கு வித்திட்ட அஸ்வித் க்ரிஸ்ட் மற்றும் கனிஷ்க் சேத் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தது.
போட்டியின் சுருக்கம்
இந்திய இளையோர் அணி: 288/9 (50) பாபா அபாரஜித் 100(91), சிவம் செளத்ரி 56(68), ஹனுமா விஹாரி 56(70), சுப்மன் கில் 27(46), அமில அபொன்சோ 42/2(10), சமிக்க கருணாரத்ன 57/2(10)
இலங்கை இளையோர் அணி: 253 (48.2) சரித் அசலன்க 68(94), ஷெஹான் ஜயசூரிய 64(60), வனிது ஹஷரங்க 38(36), கனிஷ்க் சேத் 53/3(9), அஸ்வின் கிரிஸ்ட் 55/3(9.2)
போட்டி முடிவு – இந்திய இளையோர் அணி 35 ஓட்டங்களால் வெற்றி
இத்தொடரின் அடுத்ததாக இலங்கை இளையோர் அணி நாளை (28) ஆப்கானிஸ்தான் இளையோர் அணியுடன் மோதுகின்றது.