பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் நடைபெற்ற புனித பேதுரு கல்லூரி மற்றும் புனித ஜோசப் கல்லூரிகளுக்கு இடையிலான 43ஆவது வருடாந்த பெரும் சமரில், புனித பேதுரு கல்லூரி 54 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இதுவரை நடைபெற்றுள்ள 42 மட்டுப்படுத்தபட்ட ஓவர் ஒரு நாள் போட்டிகளில் 21 தடவைகள் புனித ஜோசப் கல்லூரியும் 19 தடவைகள் புனித பேதுரு கல்லூரியும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இம்முறை ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்து கொள்ளும் நோக்கில் புனித பேதுரு கல்லூரி களமிறங்கியது.
கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித பேதுரு கல்லூரி அணித் தலைவர் லக்க்ஷின ரொட்ரிக்கோ முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அந்த வகையில் முதலில் களமிறங்கிய கொழும்பு புனித பேதுரு கல்லூரி அதிரடியாக துடுப்பாடி குறித்த 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 311 ஓட்டங்களை குவித்தது.
புனித பேதுரு கல்லூரி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அனிஷ்க்க பெரேரா மற்றும் சந்தோஷ் குணதிலக்க ஆகியோருக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. சிறப்பாக பந்து வீசிய ஜெஹான் டேனியல் அனிஷ்க்க பெரேராவை சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க செய்தார். அதேநேரம் மறுமுனையில் அதிரடியாக துடுப்பாடி வேகமாக ஓட்டங்களை குவித்த சந்தோஷ் குணதிலக்க ஒரு சில பவுண்டரிகளை பெற்றுக்கொண்டாலும் 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் துரதிஷ்டவசமாக ஜெஹான் டேனியலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
[rev_slider dfcc728]
.
50 ஓட்டங்களுக்கு 2 இரண்டு விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய ஷாலித பெர்னாண்டோவும் ஜோசப் கல்லூரி பந்துவீச்சாளர்களில்ன் அழுத்தத்தின் காரணாமாக சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து செல்ல புனித பேதுரு கல்லூரி 76 ஓட்டங்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து மேலும் நெருக்கடியில் வீழ்ந்தது.
அதனையடுத்து களமிறங்கிய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான சுலக்ஷன பெர்னாண்டோ மற்றும் மனெல்கர் டி சில்வா இருவரும் நிதானமாக துடுப்பாடி ஓட்ட எண்ணிகையை உயர்த்தினர். அத்துடன், இவர்களுக்கிடையே 176 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட அதே நேரம் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.
அவ்வேளையில் 90 ஓட்டங்களுடன் துடுப்பாடிக்கொண்டிருந்த சுலக்ஷனா பெர்னாண்டோ சதம் பெறுவதற்கு மேலும் 10 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க வேண்டிய நிலையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து சென்றார். எனினும் அவருடன் துடுப்பாடிக்கொண்டிருந்த மனெல்கர் டி சில்வா இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக சதம் கடந்து இவ்வணிகளுக்கிடையிலான கிரிக்கெட் வரலாற்று புத்தகத்தில் பதிவானார்.
அந்தவகையில், விக்கெட்டுகளை இழந்து மோசமான ஆரம்பத்தை புனித பேதுரு கல்லூரி பெற்றிருந்தாலும் குறித்த 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 311 ஓட்டங்களை பதிவு செய்து புனித ஜோசப் கல்லூரிக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் வெறும் 8 ஓட்டங்களுக்குள் இழந்து மோசமான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. எனினும் அதனை தொடர்ந்து இணைந்து கொண்ட தினித் மதுரவேல மற்றும் ஹவின் பெரேரா மூன்றாவது விக்கெட்டுக்காக 114 ஓட்டங்களை தங்களுக்கிடையே பகிர்ந்து கொண்ட அதே நேரம் அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றிப் பாதைக்கு திருப்பினர். எனினும், ஹவின் பெரேரா அரைச் சதம் பெற்று கொள்ள 3 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் 47 ஓட்டங்களுக்கு துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து சென்றார்.
அதனை தொடர்ந்து புனித ஜோசப் கல்லூரியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஜெஹான் டேனியல் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிரடியாக ஓட்டங்களை விளாசிய போதும் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதேநேரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த தினித் மதுரவால 73 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க ஜோசப் கல்லூரி நெருக்கடியில் வீழ்ந்தது.
அதனையடுத்து களமிறங்கிய பின்வரிசை துடுப்பட்ட வீரர்கள் அதிரடியாக ஓட்டங்களை பெற முயசித்த போதிலும் புனித பேதுரு கல்லூரி அணித் தலைவர் லக்ஷின ரொட்ரிகோ பந்து வீச்சாளர்களின் பரிமாற்றங்களின் மூலமும் சிறந்த களத்தடுப்பு மாற்றங்களின் மூலமும் புனித ஜோசப் கல்லூரியின் விக்கெட்டுகளை வீழ்த்த வழியமைத்தார்.
அந்த வகையில், புனித ஜோசப் கல்லூரி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 257 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 54 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
போட்டியின் சுருக்கம்
புனித பேதுரு கல்லூரி, பம்பலப்பிட்டி – 311/8 (50) – மனல்கர் டி சில்வா 107*, சுலக்ஷனா பெர்னாண்டோ 90, சந்தோஷ் குணதிலக 31, லக்ஷின ரொட்ரிகோ 23, தினித் மதுரவால 2/22, நிபுன் சுமணசிங்க 2/58
புனித ஜோசப் கல்லூரி, மருதானை – 257 (49.3) – தினித் மதுரவால 73, ஹவின் பெரேரா 47, ஜெஹான் டேனியல் 35, பஹன் பெரேரா 23, சச்சின் சில்வா 3/55, மனெல்கர் டி சில்வா 2/23, சந்தோஷ் குணதிலக 2/30