முதல் நாளில் ஆதிக்கத்தினை தமதாக்கியிருக்கும் லும்பினி கல்லூரி

201
Lumbini College v Bandaranayake College

“நீல மற்றும் பச்சை வர்ணங்களின் சமர்“ என அழைக்கப்படும் லும்பினி கல்லூரி மற்றும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி அணிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி நான்காம் முறையாக இன்று கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியினை கைப்பற்றிக் கொண்ட கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை லும்பினி கல்லூரிக்கு வழங்கியது.

இதன்படி முதலில் துடுப்பாடிய லும்பினி கல்லூரி சிறப்பான ஆரம்பத்தினை வெளிக்காட்டியிருந்ததுடன் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது.

லும்பினி கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு நங்கூரம் போன்று செயற்பட்டிருந்த கவின் பீரிஸ் 80 ஓட்டங்களினை விளாசி தமது அணி முதல் இன்னிங்சிற்காக 247 ஓட்டங்களினைப் பெறுவதில் உதவியிருந்தார்.

சிறப்பாக ஆடியிருந்த பீரிஸ் சதம் ஒன்றினை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தும் துரதிஷ்டவசமாக அது முடியாமல் போயிருந்தது.

அத்துடன் பெறுமதி வாய்ந்த ஓட்டக்குவிப்புக்களை மேற்கொண்டு லும்பினி கல்லூரிக்கு அமித தாபரே மற்றும் ரவீந்து சஞ்சீவ ஆகியோரும் உதவியிருந்தனர்.

லும்பினி கல்லூரியின் முதல் இன்னிங்சினை 57.4 ஓவர்களில் முடிக்க காரணமாயிருந்த பண்டாரநாயக்க கல்லூரியின் ஹிமாத் ஹன்ஷன மற்றும் ஜனிது ஜயவர்த்தன ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த கம்பஹா இளம் வீரர்கள் லும்பினி கல்லூரியின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். முக்கியமாக  லும்பினி கல்லூரியின் பசிந்து நதுன் எதிரணியின் முன்வரிசை வீரர்களை ஓய்வறை திருப்பினார்.

இதனால், போட்டியின் முதல் நாள் நிறைவில் பண்டாரநாயக்க கல்லூரி 4 விக்கெட்டுகளை இழந்து 52 ஓட்டங்களினைப் பெற்றிருந்தது. பசிந்து நதுன் இன்றைய நாள் நிறைவில் 37 ஓட்டங்களிற்கு மூன்று விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 247 (57.4) – கவீன் பீரிஸ் 80, அமித தாபரே 30, ரவீந்து சஞ்சீவ 29, கனிஷ்க மதுவந்த 21, ஹிமாத் ஹன்ஷன 3/57, ஜனிது ஜயவர்த்தன 3/62

பண்டாரநாயக்க கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 52/4 (11.1) – பசிந்து நதுன் 3/37

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்.