இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட அணிகள் பங்குபெறும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் நிலை ஆட்டங்களில் இன்று ஆறு போட்டிகள் நிறைவடைந்துள்ளது.
கேகாலை எதிர் குருநாகல்
கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், குசல் பெரரா இத்தொடரில் பெற்றுக்கொண்ட தனது இரண்டாவது தொடர்ச்சியான அதிரடி சதம் மூலம் கேகாலை அணி 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றியினை சுவீகரித்துள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இத்தொடரின் ஆரம்ப போட்டியொன்றில் புத்தளம் மாவட்டத்திற்கு எதிராக 161 ஓட்டங்களினை விளாசிய பெரேரா இப்போட்டியில் 105 ஓட்டங்களை அதிரடியாக விளாசி அணியின் வெற்றியினை உறுதிப்படுத்தியிருந்ததோடு, இளம் வீரர் அவிஷ்க பெர்னாந்து 47 ஓட்டங்களுடன் குசலிற்கு வெற்றி இலக்கினை அடைய ஆட்டமிழக்காமல் உறுதியாய் இருந்தார்.
அத்துடன் சிறப்பான பந்து வீச்சினை வெளிக்காட்டிய சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஞய மற்றும் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கேகாலை அணிக்காக கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
குருநாகல் மாவட்டம் – 169 (34.4) – அனுருத்த ராஜபக்ஷ 27, மிதுன் ஜயவிக்ரம 29, தனுஷ்க தர்மசிறி 29, அகில தனன்ஞய 3/12, மொஹமட் சிராஸ் 3/24
கேகாலை மாவட்டம் – 173/2 (20.3) – குசல் ஜனித் பெரேரா 105, அவிஷ்க பெர்னாந்து 47*
கம்பஹா எதிர் களுத்துறை
CCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கம்பஹா அணியினரை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தி களுத்துறை மாவட்ட அணி அதிர்ச்சியளித்தது.
அனுபவமிக்க வீரரான ஹஷந்த பெர்னாந்து மற்றும் இளம் வீரர் மாதவ நிமேஷ் ஆகியோர் அரைச்சதங்கள் விளாசி களுத்துறை அணிக்கு வெற்றி பெறுவதற்கு வழிவகுத்ததுடன், மஞ்சுல குருகே மற்றும் மிஷேன் சில்வா ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்து களுத்துறை அணியின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தினர்.
போட்டியின் சுருக்கம்
கம்பஹா மாவட்டம் – 168 (47.2) – ருக்ஷான் வீரசிங்க 88, லஹிரு விக்ரமசிங்க 23, மிஷேன் சில்வா 4/18, மஞ்சுல குருகே 4/24
களுத்துறை மாவட்டம் – 169/6 (39) – ஹஷந்த பெர்னாந்து 53, மாதவ நிமேஷ் 53, தனுர பெர்னாந்து 3/32
ஹம்பந்தோட்டை எதிர் காலி
யசோத லங்கா சிறப்பாக பிரகாசித்து பெற்றுக்கொண்ட சதம் தாண்டிய 143 ஓட்டங்களின் துணையுடன் இப்போட்டியில் காலி மாவட்டம் ஏனைய தென் பிரதேச மாவட்டமான ஹம்பந்தோட்டையினை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றியினை சுவைத்துள்ளது.
சர்ரே விலேஜ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் எதிரணியினரை 232 ஓட்டங்களிற்குள் மடக்கிய காலி அணி, 18 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் அடங்கலாக 96 பந்துகளிற்கு ஆட்டமிழக்காமல் யசோதா லங்கா பெற்றுக்கொண்ட 143 ஓட்டங்களுடன் இப்போட்டியின் வெற்றியாளராக ஆனது.
போட்டியின் சுருக்கம்
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – 232/9 (50) – பதும் நிஸ்சங்க 60, செனல் டி சில்வா 52*, தமிந்து அஷான் 36, சலன டி சில்வா 3/23, லக்ஷான் ஜயசிங்க 3/38, ரொஷான் ஜயதிஸ்ஸ 2/33
காலி மாவட்டம் – 233/4 (34) – யசோதா லங்கா 143*, சாலிக்க கருணாநாயக்க 42, ருச்சிர சில்வா 2/49
இரத்தினபுரி எதிர் மொனராகலை
NCC மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் 29 ஓட்டங்களால் மொனராகலை அணியினை வீழ்த்திய இரத்தினபுரி இத்தொடரின் முதல் வெற்றியினை அதன் மூலம் பெற்றது.
மொனராகலை அணியின் தலைவர் சமிந்த பண்டார முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இரத்தினபுரிக்கு தந்தார். முதலில் களமிறங்கிய இரத்தினபுரி அணி இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அணியின தலைவர் முன்னின்று கைப்பற்றிய 4 விக்கெட்டுகளால் 231 ஓட்டங்களுடன் சுருண்டு கொண்டது.
பதிலுக்கு வெற்றியிலக்கினை அடைய களமிறங்கிய மொனராகலை அணி, இலக்கினை நெருங்கினாலும் 202 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியை அடைவதற்கு இரத்தினபுரி அணியின் தலைவர் ரஜீவ வீரசிங்க மற்றும் நவீன் கவிகார ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை சாய்த்து உதவியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
இரத்தினபுரி மாவட்டம் – 231 (47.1) – சஜித் திசநாயக்க 64, சானக்க ருவன்சிரி 35, மதுரங்க சொய்ஸா 32, சமிந்த பண்டார 4/65, ரயான் கேர்ன் 2/28
மொனராகலை மாவட்டம் – 202 (47.3) – யொஹான் டி சில்வா 38, கிஹான் ரூபசிங்க 23, நவீன் கவிகார 3/39, ரஜீவ வீரசிங்க 3/34
திருகோணமலை எதிர் மட்டக்களப்பு
விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த இப்போட்டியில் ஒரு விக்கெட்டினால் திருகோணமலை மாவட்டம் மட்டக்களப்பினை வீழ்த்தியது.
BRC மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில், முதலில் துடுப்பாடிய மட்டக்களப்பு அணிக்கு 178 ஓட்டங்களை மாத்திரமே பெற முடியுமாக இருந்தது. மட்டக்களப்பு அணியின் தலைவர் ஹர்ஷ விதான இதில் அதிகபட்சமாக 59 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதோடு, புத்திக்க சந்தருவன் மூன்று விக்கெட்டுகளை திருகோணமலை அணிக்காக சாய்த்தார்.
பதிலுக்கு துடுப்பாடிய திருகோணமலை அணியின் தலைவர் ரொஸ்கோ தட்டில் போராடி 43 ஓட்டங்களை பெற்றுத் தந்தோடு, சொஹன் ரங்கிக்க ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கின் கோட்டினை தொட உதவினார்.
போட்டியின் சுருக்கம்
மட்டக்களப்பு மாவட்டம் – 178 (47.4) – ஹர்ஷ விதான 59*, ருமேஷ் புத்திக்க 39, புத்திக்க சந்தருவன் 3/32
திருகோணமலை மாவட்டம் – 184/9 (43.3) – ரொஸ்கோ தட்டில் 44, திமுத் வராப்பிட்டிய 25, சொஹான் ரங்கிக்க 23*, தினுக் ஹெட்டியராச்சி 3/39
கிளிநொச்சி எதிர் வவுனியா
அணித்தலைவர் ஹர்ஷ கூரே ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அதிரடி சதம் மூலம் பனாகொட மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் கிளிநொச்சி அணி வவுனியா அணியை 9 விக்கெட்டுகளால் இலகுவாக வீழ்த்தியது.
நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய வவுனியா அணி, இலங்கை அணி வீரர் கசுன் ராஜித கிளிநொச்சி அணிக்காக கைப்பற்றிய 3 விக்கெட்டுகளுடனும் சுழல் பந்துவீச்சாளர்களான சுராஜ் ரன்தீவ் மற்றும் கெளஷல்ய கஜசிங்க ஆகியோர் கைப்பற்றியிருந்த தலா இரண்டு விக்கெட்டுகளாலும் 173 ஓட்டங்களிற்குள் கட்டுப்படுத்தப்பட்டது.
பின்னர், கூரே 96 பந்துகளிற்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கலாக விளாசிய 108 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றியை ஊர்ஜிதம் செய்தது.
போட்டியின் சுருக்கம்
வவுனியா மாவட்டம் – 173 (40.4) – சமித் துஷாந்த 40, அசேல் அளுத்கே 40, தினுஷ பெர்னாந்து 32, கசுன் ராஜித 3/44, கெளஷல்ய கஜசிங்க 2/24, சுராஜ் ரன்தீவ் 2/40
கிளிநொச்சி மாவட்டம் – 174/1 (34.4) – ஹர்ஷ கூரே108*, சங்கீத் கூரே 58*