நிட்டவெல ரக்பி மைதானத்தில் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ண ரக்பி லீக் தொடரின் போட்டியொன்றில், கொழும்பு றோயல் கல்லூரி 3 புள்ளிகள் வித்தியாசத்தில் கண்டி தர்மராஜ கல்லூரி அணியை இறுதி நேரத்தில் வெற்றியீட்டியது.
போட்டி ஆரம்பிப்பதற்கு முதல் பெய்திருந்த மழை தூறல் காரணமாக போட்டி இடம்பெற்ற மைதானம் ஈரப்பதம் மிக்கதாக போட்டிக்கு உகந்த நிலையில் காணப்பட்டது. குறித்த போட்டியில் முன்னிலை பெற்றிருந்த கண்டி தர்மராஜ கல்லூரியை, 80 நிமிட கடுமையான போராட்டத்துக்கு பின்னர் இறுதி நிமிட முயற்சியினால் பெற்றுக்கொண்ட புள்ளிகளின்மூலம் 18-15 என்ற வீதத்தில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றிiய தமதாக்கியது.
ஸாஹிரா கல்லூரியின் ஆக்கிரமிப்பை முறியடித்து வெற்றியை சுவீகரித்த திரித்துவக் கல்லூரி
சம வலிமை கொண்ட இவ்விரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பத்தில் இரு தரப்பினரும் எவ்விதமான புள்ளிகளையும் பெற்றுக்கொள்ளவில்லை. இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்ட நிலையில், தர்மராஜ கல்லூரியின் பிரேமொதித்த ஹசரங்கவுக்கு களநடுவர் அர்ஷாட் காதர் மஞ்சள் அட்டை காண்பித்தமையினால் அவ்வணி பெரும் அழுத்தங்களை முகம்கொடுத்தது.
முதல் புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு போட்டியின் 20ஆவது நிமிடத்துக்கு பின்னர் கொழும்பு றோயல் கல்லூரிக்கு பெனால்டி மூலமாகக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட முஹம்மத் ஷாகிர், 35 மீட்டர் தூரத்திலிருந்து கம்பதினூடாக பந்தை உள்செலுத்தி 3 புள்ளிகளை தனது அணிக்காகக் பதிவு செய்தார். (றோயல் 03-00 தர்மராஜ)
எனினும் அதையடுத்து சிறிய நேரத்துக்குள், விங்கர் பினுரா பண்டாரவின் மூலம் பெற்றுக்கொண்ட ட்ரை மூலம் கிடைத்த புள்ளிகளின் அடிப்டையில் தர்மராஜ கல்லூரி முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து, கிஹான் இஷாரா கம்பத்திலிருந்து 30 மீட்டர் தூரத்திலிருந்து கிடைக்கப் பெற்ற கடின உதையொன்றினை கன்வர்ஷனாக மாற்றினார். (றோயல் 03 – 07 தர்மராஜ)
அதனையடுத்து, சில நிமிடங்களில் றோயல் அணி சார்பாக சபித் பெரோஸ் ட்ரை ஒன்றை பெற்றுக்கொண்ட போதிலும், அதனை ஓவின் அஸ்கி கவன்வர்ஷனாக மாற்றத் தவறினார். (றோயல் 08 – 07 தர்மராஜ)
எனினும், அதனை தொடர்ந்து சில வினாடிகளில், தர்மராஜ அணியின் கிஹான் இஷாரா கம்பத்திலிருந்து 40 மீட்டர் தூரத்திலிருந்து அருமையாக ட்ரப் கோல் (drop goal) ஒன்றினை பெற்று தர்மராஜ கல்லூரியை மீண்டும் முன்னிலைப் படுத்தினார். (றோயல் 08-10 தர்மராஜ)
சில நிமிடங்களில் மீண்டுமொரு முறை தர்மராஜா கல்லூரி பிரேமொதித்த ஹசரங்கவின் மூலம் ட்ரை ஒன்றினை பெற்றுக்கொண்டாலும் கன்வர்ஷனை தவற விட்டார் கிஹான் இஷாரா. அந்த வகையில் இடைவேளையின் போது புள்ளிகள் அடிப்படையில் தர்மராஜ கல்லூரி முன்னிலை பெற்றிருந்தது.
முதல் பாதி: றோயல் கல்லூரி 08 – 15 தர்மராஜா கல்லூரி
இரண்டாம் பாதி நேர ஆரம்பத்தின்போது, தர்மராஜ கல்லூரி தரப்பினர் செய்த சிறு தவறினால், வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட ஹம்சா ரீசா, ட்ரை ஒன்றினை வைத்த அதேநேரம் முஹம்மத் ஷாகிர் கம்பத்தினுள் செலுத்தி கன்வர்ஷனாக மாற்ற, போட்டி சமநிலை பெற்றது. (றோயல் 15-15 தர்மராஜ)
அதனையடுத்து பார்வையாளர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் இரு அணிகளுக்கும் எவ்விதமான புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. தர்மராஜ வீரர்களுக்கு பல வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்ற போதிலும், அவர்களுடைய சிறு தவறுகளால் முக்கியமான தருணங்களில் அவை வீணடிக்கப்பட்டன.
இதன்போது சபித் பெரோஸ் போட்டி விதிமுறைகளை மீறியதன் காரணமாக கள நடுவரினால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அந்த வகையில் போட்டி முடிவுற 15 நிமிடங்கள் எஞ்சிய நிலையில், 14 வீரர்களுடன் றோயல் கல்லூரி விளையாடியது. எனினும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள தர்மராஜ கல்லூரி தவறியது.
எனினும், போட்டியின் இறுதி நிமிடத்தில் சிறப்பாக செயல்பட்ட ஓவின் அஸ்கி இலகுவான டிரப் கோல் (drop goal) ஒன்றினை கம்பங்களுக்கு கீழே பெற்றுக்கொடுக்க றோயல் கல்லூரி அணியின் முன்னிலையுடன் போட்டி முடிவடைந்தது. (றோயல் 18-15 தர்மராஜா)
இதன்படி கொழும்பு றோயல் கல்லூரி லீக் போட்டிகளில் இதுவைரை எவ்விதமான தோல்விகளையும் சந்திக்காது குழு மட்ட முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கொழும்பு இசிபதன கல்லூரி உள்ளது.
முழு நேரம் – றோயல் கல்லூரி 18 – 15 தர்மராஜ கல்லூரி
ThePapare.com’ இன் போட்டியின் சிறந்த வீரர்: ஹம்சா ரீசா (றோயல் கல்லூரி)
புள்ளிகளைப் பெற்றவர்கள்
றோயல் கல்லூரி
ஹம்சா ரீசா (1 ட்ரை)
சபித் பெரோஸ் (1 ட்ரை)
முஹம்மத் ஷாகிர்(1 கன்வர்ஷன், 1பெனால்டி)
ஓவின் அஸ்கி (1 ட்ரப் கோல்)
தர்மராஜ கல்லூரி
பினுரா பண்டார (1 ட்ரை)
பிரேமொதித்த ஹசரங்க (1 ட்ரை)
கிஹான் இஷாரா (1 கன்வர்ஷன், 1 ட்ரப் கோல்)