தேசிய மட்டத்தில் கால்பந்தில் சிறந்த அணியாக விளங்கும் யாழ்ப்பாணம் இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியில் இருந்து இலங்கையின் 16 வயதின் கீழ் தேசிய அணிக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் பாக்கியனாதன் ரெக்சன்.
என்னை விட திறமையாக கால்பந்து வீரர்கள் யாழில் உள்ளனர் : தேசிய அணி வீரர் ரவிகுமார்
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு ரேஸ் கோர்ஸ் அரங்கில் இடம்பெறவுள்ள ஜப்பான், இலங்கை, நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் 16 வயதின் கீழ் அணிகள் பங்கு கொள்ளும் கால்பந்து தொடருக்கான அணித் தெரிவின்போது, குழாமிற்கு இணைக்கப்பட்ட இவர் தற்பொழுது கொழும்பில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஏற்கனவே கடந்த வருடமும் இலங்கையின் 16 வயதின் கீழ் தேசிய அணிக்காக விளையாடிய இவர், இம்முறை இரண்டாவது முறையாகவும் தெரிவாகியிருப்பது அவரது திறமையை மேலும் உறுதிப்படுத்தும் அதேவேளை, வடக்கிற்கும் பெறுமை சேர்த்துக் கொடுக்கின்றது.
எனவே, பாக்கியனாதன் ரெக்சன் குறித்து சில தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக ThePapare.com அவருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டது. அதன்போது அவர் தெரிவித்த சில விடயங்களை உங்களோடு நாம் பகிர்ந்துகொள்கின்றோம்.
புனித ஹென்ரியரசர் கல்லூரியைப் பொருத்தவரை கடந்த 2009ஆம் அண்டின் பின்னர் கால்பந்தில் பாரிய அளவிலான ஒரு முன்னேற்றப் பாதையை கண்டு வருகின்றது. அதன்
பின்னர் சில வருடங்களிலேயே தேசிய அளவில் சாதனை புரியும் பல வீரர்களை தன்னகத்தில் இருந்து உருவாக்கிக் கொடுத்துள்ளது. அதற்கான மிகப் பெரிய பங்களிப்புக்களை அக்கல்லூரியின் அதிபர், விளையாட்டுப் பொறுப்பாசியர், ஏனைய ஆசிரியர் குழாம் உட்பட பலர் மேற்கொண்டுள்ளனர். இன்றும் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த புனித ஹென்ரியரசர் கல்லூரியின் முன்னாள் மாணவன் ஞானரூபன் வினோத், 19 வயதின் கீழ்ப்பட்ட இலங்கை அணியில் உள்வாங்கப்பட்டிருந்த ஜுட் சுபன், அன்டனி ரமேஷ், அனோஜன் போன்ற வீரர்கள் அதற்கு சிறந்த உதாரணமாக உள்ளனர். அவர்களது வரிசையில் அக்கல்லூரியிலிருந்து இலங்கை இளையோர் தேசிய அணிக்கு தெரிவாகிய மற்றொரு வீரராக இன்று இருக்கின்றார் ரெக்சன்.
தனது கால்பந்து ஆரம்பம் குறித்து கருத்து தெரிவித்த ரெக்சன், ”நான் 11 வயதின் கீழ் பிரிவில் இருந்து கால்பந்து விளையாட்டை ஆரம்பித்தேன். எமது பாடசாலை அணிக்காக விளையாடிய சகோதரர் ஜானரூபன் வினோத் மற்றும் அவரது சக வீரர்களின் விளையாட்டைப் பார்த்த எனக்கு கால்பந்து விளையாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எனவே பாடசாலை அணிக்காக நான் இணைந்து பயிற்சிகளைப் பெற்று வந்தேன். எமது அணி அன்றிலிருந்தே சிறந்த நிலையில் இருந்தது. பாடசாலை மட்டத்திலான பல போட்களில் வெற்றிகளையும் பெற்றோம்” என்றார்.
பின்னர் தொடர்ந்து தனது சிறந்த விளையாட்டை வெளிக்காட்டி வந்த ரெக்சன், 13, 15 மற்றும் 17 வயதின் கீழ்ப்பட்ட பாடசாலை அணிகளில் தொடர்ந்து பிரகாசித்த ஒரு வீரராகத் திகழ்ந்தார்.
கிண்ணத்தை சென் ஜோன்ஸிடமிருந்து பறித்துக் கொள்ளுமா யாழ். மத்தி?
பின்னர் கடந்த 2016ஆம் அண்டு மலேசியாவில் இடம்பெற்ற 16 வயதின் கீழ்ப்பட்ட வீரர்களின் போட்டித் தொடருக்கான சுற்றுப் பயணத்திற்கான இலங்கை தேசிய அணியில் ரெக்சன் இணைக்கப்பட்டார்.
தேசிய அணியுடனான தனது முதல் அனுபவம் குறித்து தெரிவித்த அவர்,
”தேசிய அணிக்கான முதல் தெரிவு எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. முதல் முறை தேசிய மட்ட வீரர்களுடன் நான் இணைந்த சந்தர்ப்பம் அது. எனினும் மொழி ஒரு சவாலாகவும் பிரச்சினையாகவும் இருந்தது. எவ்வாறிருப்பினும், அதன்போது நான் சிறந்த அனுபவத்தைப் பெற்றேன்.
கடந்த வருட ஆசிய பாடசாலைகள் தொடருக்கான சுற்றுப் பயணத்தில் இலங்கை அணி சிறந்த முறையில் பிரகாசித்திருக்கவில்லை. நாம் இங்கு ஒரு வாரம் மாத்திரமே பயிற்சிகளை செய்தோம். எனவே, எம்மால் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்த முடியாமல் போனது. எனினும் நான் அதன்போது பெற்ற அனுபவங்கள் மிகவும் அதிகம். கடந்த வருட அனுபவமே நான் இவ்வருடமும் தேசிய அணிக்குத் தெரிவாவதற்கு முக்கிய காரணியாக இருந்திருக்கலாம்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இரண்டாவது முறை தான் தேசிய குழாமில் அங்கத்துவம் பெற்று, பயிற்சிகள் பெற்று வருகின்றமை குறித்து கருத்து தெரிவித்த அவர், சிறிய வயதில் இருந்து இளம் தேசிய அணியில் அங்கத்துவம் பெறுவதனால் வித்தியாசமான முறையில் சிறந்த பயிற்சிகளைப் பெற்று வருகின்றோம். எனவே, தொடர்ந்து இவ்வாறான பயிற்சிகள் மற்றும் அனுபவங்களின் மூலம் தனது திறமையை வளர்த்து, எதிர்காலத்தில் இலங்கையின் தேசிய அணியில் இணைய வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.
இளம் தேசிய அணியின் அனுபவ வீரரான ரெக்சனின் தற்போதைய நிலைமை குறித்து ஜப்பான் நாட்டின் சிறந்த பயிற்றுவிப்பாளரும், தற்பொழுது இலங்கை இளம் அணியை வழிநடாத்துபவருமான சுசுகி சிகாசி கருத்து தெரிவிக்கையில்,
”ரெக்சனின் விளையாட்டு வித்தியாசமானது. பின் களத்தில் தனது நிலையை மிகவும் சிறந்த முறையில் அவர் காத்துக் கொள்வார். குறிப்பாக நிலைமைக்கு ஏற்ற விதத்தில் யோசித்து செயற்படும் திறமை அவரிடம் நன்றாகவே உள்ளது.
எனினும் அவரது வேகம் இன்னும் குறைவாகவே இருக்கின்றது. அவரிடம் உள்ள திறமைக்கு, தனது வேகத்தையும் அதிகரிக்கும் பட்சத்தில் அணியின் பின்களத்தை மேலும் வலுப்படுத்தும் சிறந்த வாய்ப்பு அவருக்கு உள்ளது” என்றார்.
தனது கடந்த கால மற்றும் தற்போதைய அனுபவங்களைக் கொண்டு தான் கற்ற விடயங்களை பார்க்கும்பொழுது, யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய சிறந்த இளம் கால்பந்து வீரர்களும் இவ்வாறான வாய்ப்புக்களைப் பெற்று, தேசிய அணியை பிரிதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தனது எதிர்பார்ப்பை தெரிவித்து என்முடன் இருந்து விடைபெற்றார் பாக்கியனாதன் ரெக்சன்.